ரத்தினகிரி மலையடிவார அலங்கார்…

வேலூர் ஆர்யாஸ் காஃபி பற்றி நாம் பதிவிட்டதைப் பார்த்துவிட்டு அவரவர் ஊர் உணவகங்கள் தொடங்கி திருவரங்கம் ‘முரளி காஃபி’ வரை அன்புப் பரிந்துரைகள் அனுப்பித் தள்ளிவிட்டனர் அன்பர்கள். ‘ஆமாம்! கரெக்டா சொன்னீங்க!’ ‘இப்பல்லாம் அந்த அளவுக்கு இல்ல!’ ‘விலை அதிகம்!’ ‘நான் கால்டாக்சி டிரைவர், 5 முறையும் அங்கதான் சாப்ட்டேன்!’ என தனித் தகவல்கள் இன்னும் வருகின்றன. சில செல்ல திட்டல்களும் வந்தன.

‘சாய் சங்கீத்’ உரிமையாளரும், சென்னை ‘அட்சயம்’ உணவகத்தின் பங்குதாரருமான அன்பரிடமிருந்து செல்ல திட்டலோடு பரிந்துரையும் வந்தது. அவரது பரிந்துரையில் மிக முக்கியமான ஒன்று ‘அலங்கார்’

அந்தக் காலங்களில் வேலூர் பேருந்துநிலையமருகில் உட்காரக் கூட இடமில்லாமல் வரிசையில் நின்று இடம்பிடித்து உண்பார்களே, அதே ‘அலங்கார்’ குழுமம்தான். ரத்னகிரி மலையடிவாரத்தில் கோயிலுக்கு கீழே உள்ளது சுய சேவை பிரிவு ‘அலங்கார்’. அதே ரத்னகிரியில் சாலையின் எதிர்ப்புறம் உள்ளது இன்னும் பெரிய ‘அலங்கார்’ கம்பு தோசை, கேழ்வரகு தோசை, சோள தோசை என வகைகள் கொண்ட புதிய அலங்காரை விட, கோவிலடியில் இருக்கும் சுய சேவை ‘அலங்கார்’ ஈர்த்தது நம்மை. ( சென்னையிலிருந்து பெங்களூர் செல்லும் திசையில் இடப்பக்கம் வருவது ‘புதிய நவீன அலங்கார்’. பெங்களூரிலிருந்து சென்னை செல்லும் திசையில் இடப்பக்கம் வருவது ‘சுயசேவை பிரிவு அலங்கார்’. வேலூரிலிருந்து 25 நிமிட பயண தூரத்தில் ரத்னகிரி மலையடிவாரத்தில் இரண்டு ‘அலங்கார்’களும் எதிரெதிர் புறங்களில் உள்ளன)

வசதியாக குடும்பத்தோடு அமர பெரிய மேசைகள், இருக்கைகள், பணம் செலுத்தி டோக்கன் வாங்கிக்கொண்டு உணவை நாமே பெற்றுக் கொண்டு வந்து உண்ணலாம் என்ற முறைமை என்பதையெல்லாம் தாண்டி அங்கிருந்த சுத்தம் விசாலமான வெளியும் ஈர்த்தன நம்மை.

மஞ்சளும் சிவப்பும் கலந்த நிலையில் சிவந்த தக்காளித் துண்டுகள் தெரிய குழைவாக வட்ட வடிவில் சுடச்சுட அவர்கள் தரும் கிச்சடியைப் பார்த்ததும், முதல் முறையாக ‘உப்புமாவை காசு குடுத்து வாங்கி சாப்டுருவோம்!’ என்ற எண்ணம் வந்தது. (ஆனாலும் வாங்கல!)
பொங்கலை ஒரு விள்ளல் எடுத்து வாயிலிட்டதும், பரியிடம் நான் சொன்னது ‘ஓ… பெருமாள் கோவில் பொங்கல் மாதிரி இருக்கு! அட்டகாசம்!’

‘ஆமாண்ணா!’ என்றான் பூண்டு பொடி தோசையை மடித்துக் கிழித்து கடித்து மென்று முடித்து விட்டு பொங்கலை பதம் பார்த்துக் கொண்டிருந்த பரி.

ரத்னகிரி மலையின் மீதுள்ள முருகன் கோவிலிலுள்ள மௌன சாமியார் பற்றி அப்பா சில முறை குறிப்பிட்டிருக்கிறார் என்னிடம். என் அப்பாவின் குருநாதரும், எனக்கு ‘பரமன்’ என்ற பெயர் தந்தவருமான கிருபானந்த வாரியார் சுவாமிகள்தான் ரத்னகிரி கோவிலை கட்டி குடமுழுக்கு செய்து தந்துள்ளார். பல ஆண்டுகளுக்கு முன்பு ஒரு என் மனைவியோடு ரத்னகிரி கோவிலுக்கு ஏறி வந்த போது அங்கிருந்த கல்வெட்டில் அதைப் படித்து தெரிந்து கொண்டேன். அந்த மௌன சாமியார் இன்னும் இருக்கிறார். ‘பாலமுருகனடிமை’ என தன்னை விளித்துக் கொள்கிறார்.

நண்பர் கலைமாமணி டாக்டர் சுந்தர், இளங்கலை மருத்துவம் முடித்துவிட்டு முதுகலை சேர்க்கைக்காக போராடிய போது, ரத்னகிரி வந்து மௌனசாமியாரை சந்தித்ததாகவும், அவர் ‘நினைத்தது நடக்கும்!’ என எழுதிக் காட்டியதாகவும், அதன் பிறகு சேர்க்கை கிடைத்தாகவும் அவரது மனைவி என்னிடம் சிலாகித்து பகிர்த்ததுண்டு. ‘பாலமுருகனடிமை’ அவர்களை நான் நேரில் பார்த்ததில்லை. சமீபத்தில் சென்னையில் நடந்த ஓர் ஆன்மீக மலர் வெளியீட்டு விழாவில் அமைச்சரோடு அவரும் நிற்கும் படத்தை இரு தினங்களுக்கு முன்பு தினமணியில் பார்த்தேன்.

இவையெல்லாம் மனதில் ஓட பொங்கலை முடித்துவிட்டு, ‘டேய் பரி, மேல ஏறனுமா? கோயில் பாக்கனுமா?’ என்கிறேன்.

‘இல்லண்ணா. டைம் ஆயிருச்சே! ஆஃபீஸ் போகனுமே!’ என்று பதில் வந்ததால் காஃபி போடும் இடம் நோக்கிப் போகிறேன்.

உள்ளே நுழையும் போது நம் முகத்தில் மோதி நாசியில் நுழைந்து நுரையீரல் வரை நிறைக்கும் ‘காஃபி’ மணம். டோக்கனை தந்தால் சீருடையணிந்த அக்கா, தோராயமாக குத்துமதிப்பாக என்றில்லாமல், ஒரு காஃபிக்கு இவ்வளவு டிகாக்‌ஷன் என்ற கணக்கில் ‘அவுன்ஸ்’ அளவீடு குப்பியில் கணக்கிட்டு ஊற்றி கலந்து தருகிறார்கள்.

கையில் வாங்கிக் கொண்டு உள்ளே போய் உட்கார்ந்தும் குடிக்கலாம்,வெளியில் வந்து நின்றும் குடிக்கலாம். ஆனால் குடித்த உடன் உங்கள் வாய் சொல்லும், ‘இது காஃபி!’

சிறப்பான சுவையான காஃபி அலங்காரில் தருகிறார்கள்.

– பரமன் பச்சைமுத்து
ரத்னகிரி
25.09.2023

#AlankarHotel #AlankarSelfService #ParamanTouring #Ratnagiri #AlankarCoffee #Coffee #Vellore #Paraman #ParamanPachaimuthu #WriterParaman #ParamanLifeCoach #பரமன் #பரமன்பச்சைமுத்து

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *