கடுதாசி

எதில் எழுதப் பிடிக்கும் என்று எவரேனும் என்னைக் கேட்டால்
‘அஞ்சல் அட்டை’ என்பது என் பதிலாக இருக்கும்.

‘ஷீஃபர்’ பிராண்ட் ‘இங்க் பால் பென்’ அதுவும் கருப்பு மையில் 1.0 அல்லது 0.8 அளவில் எழுதும் பேனா, அது இல்லையென்றால் குறைந்த பட்சம் ‘யூனிபால்’ தயாரிப்பின் யுஎம்153எஸ், யுபி157 அல்லது அதற்கும் மேலுள்ள 1.0 பேனாக்கள் இவைதான் வேண்டும் என்றெல்லாம் தெளிவாக இன்று சொல்வது போல் விவரம் புரியாத அந்த வயதுகளில் அந்த தடிமனான மஞ்சள் வண்ண அட்டையில் கறுப்பு மை பால்பாயிண்ட் பேனாவில் எழுதுவதே கொள்ளை அனுபவமாக இருக்கும்.

ஒரு சிறுவன் எழுதுவதற்கு கிடைக்கும் தாள் என்பது ஒன்று நோட்டுப்புத்தகத்தின் மையூறும், அடுத்த பக்கம் புரட்டினால் பிரதியெடுக்கலாம் எனும் அளவிற்கான மெல்லிய தாள் அல்லது தேர்வெழுத தரப்படும் கொஞ்சம் உயர் ரக வெள்ளைத் தாள்கள். அவ்வளவுதான். இன்று சாதாரணமாக வீட்டில் வைக்கப்பட்டிருக்கும் ‘ஜேகே பாண்ட்’ பேப்பர்கள் எல்லாம் அறிவுக்கு அப்பால் பட்டவை. ‘எக்ஸிக்யூட்டிவ் பாண்ட்’ என்பது காணக்கிடைக்கா மிக மிக உயர் ரகம்.

அவ்வயதில் சிறுவனாக எனக்கு கிடைத்த உயர் ரக எழுது தாள் அஞ்சலக அட்டைதான். 300 ஜிஎஸ்எம் இருக்கலாம் என்று இன்றைய அறிவு சொல்கிறது. மஞ்சள் வண்ணத்தில் அந்த தடிமனான அட்டையில் கருப்பு மை பால்பாயிண்ட்டால் (பால் பாயிண்ட்டை ‘மை பேனா’ என்றும் ஃபவுண்டன் பேனாவை ‘இங்க் பேனா’ என்றும் பொதுவாக விளிப்பர் அப்போதெல்லாம்) எழுதுவதே ஓர் அனுபவம். எழுதி விட்டு மஞ்சள் அட்டையில் கறுப்பு வண்ணத்தில் முத்து முத்தாக இருக்கும் சொந்த எழுத்து நம்மை வசீகரிக்கும். இமயமலையின் எவரெஸ்ட்டில் ஏறிய எட்மண்ட் ஹிலாரியைப் போல சிலிர்த்து சிரித்து மகிழ்ந்திருக்கிறேன்.

மேலே புலிமுகமும், 15 காசு என்ற குறிப்பும், கீழே முகவரி எழுத இரண்டு கோடுகளும், பின் கோடு எழுத ஆறு கட்டங்களும் அச்சிடப்பட்ட அந்த அஞ்சல் அட்டை அழகானது.

யாருக்கு முதல் அஞ்சல் அட்டை எழுதினேன் என்பது நினைவில் இல்லை.

தினமலர் வாரமலருக்கு ‘வாசகர் கடிதம்’ சில அஞ்சல் அட்டைகள் எழுதி அவை பிரசுரமேயாகாமல், கோபமாக கேலி செய்து எழுதியது அடுத்த வாரம் பிரசுரமாகி இன்ப அதிர்ச்சி கொடுத்தது.

‘சிவா, இந்த கடுதாசியக் கொஞ்சம் எழுதிக்குடுப்பா!’ என்று சோழதரத்தாரோ கம்மாவரத்தாரோ அழைத்து சிறுவனான நம் கையில் மஞ்சள் அட்டையைக் கொடுத்து எழுதச் சொன்னவையெல்லாம் மகிழ்ச்சியின் உச்சமாய் இன்னும் மண்டைக்குள் உள்ளன. பள்ளியில் படிக்கும் நம்மை ‘படிச்ச புள்ள!’ என்று மதித்து அவர்களின் முக்கிய கடிதத்தை எழுதத்தந்தவை எல்லாம் புளகாங்கிதம் தந்தவை.

சில ஊர்களுக்கு ஒரேயொரு கம்பித் தொலைபேசி, செல்ஃபோன்களே கண்டுபிடிக்காத காலம் என்ற அந்த நாட்களில் ‘ஊருக்கு போய் கடிதாசி போடு!’ ‘போய் சேர்ந்து லெட்டர் போடு’ என்பதே விடையனுப்பும் போது உதிர்க்கும் கடைசி வாக்கியமாக இருந்தது. கடிதங்களே மனிதர்களை மனிதர்களோடு இணைத்தன. திரைகடல் ஓடித் திரவியம் தேடப் போனோரை கடிதங்களே இணைத்தன. கண்டங்கள் கடந்தும் கையாலெழுதிய கடிதங்கள் வழியே மனிதர்களைக் கண்டனர், கரைந்தனர், கனத்தனர், களித்தனர்.

கடிதங்களே வழி அப்போதெல்லாம். அதனால்தான், அபிராமி என்று நினைத்து அந்தப் பெண்ணைக் கடத்திப் போய் மலைக்குகையில் அடைத்து வைத்த ‘குணா’ கமல், ‘கண்மணி… அன்போட காதலன் நான்… நான்… எழுதும் கடிதம், கடுதாசி, மடல்!’ என்று தொடங்குவார்.

மன்னம்பந்தல் கல்லூரி விடுதியிலிருந்து மணக்குடி வீட்டுக்கும், கல்லூரி விடுமுறைகளில் விடுதி நண்பர்களின் ஊர் முகவரிக்கும் நான் எழுதிய கடிதங்களே என்னை எழுதின. ஆமாம், என் தந்தைக்கு நான் எழுதிய கடிதங்களே என்னை வளர்த்தன. வேலை தேடி சென்னை மேன்சன்களில் இருந்த நாட்கள், வேலை பார்த்த நாட்கள், வெளியூர்ப் பயண அனுபவங்கள் என எதையும் உடனே அப்பாவுக்கு எழுதுவது என் பிடித்த செயல். என் அப்பாவுக்கு கடிதம் எழுதி எழுதியே நான் எழுத்தாளன் ஆனேன் என்பதே உண்மை.

என் அப்பாவின் உணர்வை, எழுத்தைத் தாங்கி வந்த கடிதங்கள் பல முறை மகிழ வைத்துள்ளன, சில முறை குதிக்க வைத்துள்ளன, சில முறை தேம்பியழக் கூட வைத்துள்ளன. அந்த வயதின் அலுவலக அரசியலில் வாடிப் போய் அறைக்கு வந்த போது, அங்கு வந்திருந்த அப்பாவின் கையெழுத்தைத் தாங்கிய கடிதம் அவரே வந்து என்னை தாங்கிப் பிடித்தது போல உடைந்து அழ வைத்திருக்கிறது என் பதினெட்டாவது வயதில்.

பத்தாம் வகுப்பு காலத்தில் பரமகுருவும், டி. ஸ்ரீதரும்
நடிகர் ரஜினிகாந்திடமும் சத்யராஜிடமும் அவர்களது ஃபோட்டோவை பெறுவதற்காக கடிதமெழுதியதும், அப்போது வகுப்பில் உருவான குபீர் உற்சாகமும் இன்னும் நினைவில் இருக்கிறது. ‘#2, ராகவீர அவின்யூ, போயஸ் கார்டன், சென்னை’ என்ற ரஜினியின் முகவரியை எல்லோரும் எழுதிக்கொண்டது இன்னும் நினைவில் இருக்கிறது.

அப்பாவிற்கு கொத்து கொத்தாக கடிதங்கள் வரும். புதுச்சேரி வானொளி, கலைக்கதிர், திருப்புகழமிர்தம், வானொலி, திருப்புகழ் சபை, சேக்கீழார் மன்றம் என எங்கிருந்தாவது கடிதங்கள் வந்து கொண்டே இருக்கும். முகவர்கள் கொண்டிராத குமுதம் இதழ் அப்போதெல்லாம் சந்தா மூலமாக வீட்டிற்கு வந்தது லேசாய் நினைவில் வந்து போகிறது. ஒரு கட்டுக் கம்பியை ஒரு வெள்ளைக் கொக்கின் கழுத்து போல வளைத்து கொக்கி போல் ஆக்கி அதை வீட்டின் கூரை பனை வாரையில் கட்டி தொங்கவிட்ட ‘தபால் குத்தி’ செய்து வைத்திருப்பார் அப்பா. வரும் தபால்களை படித்துவிட்டு அதில் சொருகி வைத்து விடுவார்கள். கடிதங்கள் சேர்ந்து சேர்ந்து பெருங்கற்றையாய் தொங்கும் அது. ‘அப்பாவிற்கு கொத்து கொத்தாக கடிதங்கள் வரும்’ என்று நான் குறிப்பிட்டதன் காரணம் புரியும் இப்போது. இரண்டு மூன்றாண்டுகளாக சேர்ந்திருக்கும் கடிதங்களை பிய்த்து குடக்கல்லில் இட்டு ஆட்டி கூழாக்கி கூடைகளின் உட்புறம் பூசி காயவைத்து அவற்றை நெல், உளுந்து, பயிறு அள்ள தயார் செய்வார் பாட்டி.

சிவாஜி… மணக்குடி, குறியாமங்கலம், ஆயிபுரம் என மூன்று ஊருக்குமான கடிதங்களை கொண்டு வந்து சேர்க்கும் தபால்காரர். எண்ணெய் வைத்து இடப்புறம் வகிடெத்து வழித்து வாரப்பட்ட தலை, நெற்றியில் சிறு விபூதி கீற்று, மடித்து கட்டிய வேட்டி சகிதமாக பச்சை வண்ண ஹீரோ சைக்கிளில் வருவார். ஆயிபுரத்தில் இருந்த அவரது வீட்டில் நெல்லி மரமும் வில்வ மரமும் இருக்கும்.

கல்லூரி முடித்து வேலை தேடிய காலங்களிலும் நண்பர்கள் தொடர்பு கடிதம் வழியேதான். கடிதமெழுதி கடிதமெழுதி நண்பர்கள் முழு முகவரியும் மனப்பாடமாக மற்ற நண்பர்களுக்குத் தெரியும்.

ஏவிசி விடுதியில் இருந்த காலங்களில் மெய்கண்டன், சுந்தரராஜன் வழியே அறிமுகமான பிபிசி தமிழோசை, ரேடியோ வெரித்தாஸ், பீகிங் ரேடியோ நிகழ்ச்சிகளில் ‘பரமன்’ என்று என் பெயர் வருவதற்குக் காரணம் நான் எழுதிய கடிதங்களே.

செல்லிடப்பேசி வந்ததில் கடிதங்கள் குறைந்து போயின. கரும காரிய பத்திரிக்கைகள் கூட வாட்ஸ்ஆப்பில் பகிரப்படுவதால் தபால் அனுப்புதல் குறைந்தே போனது.

என் தந்தைக்கும் எனக்குமான கடிதப் போக்குவரத்து என் வாழ்வின் பெருஞ்சொத்து என்று கருதும் அதே நேரம், என் மகள்கள் எனக்கு கடிதமென்று ஒன்றை எழுதியது என் பிறந்தநாளுக்கு அளிப்பதற்காக என்பதையும் நினைவு கூர்ந்து நிற்கினேன்.

கடிதங்கள் என்பது மின்னஞ்சலாகிப் போய், மெசெஞ்சராகிப் போனது. கையால் எழுதிய கடிதங்கள் வருவதில்லை. எப்போதாவது மலர்ச்சி மாணவர்களுக்கு கைப்பட எழுதி கடிதம் அனுப்புகிறேன்.

தபால்காரர் சிவாஜி ஓய்வு பெற்று முதியவராகவே ஆகி விட்டார். என் அப்பா சிவபதம் அடைந்து விட்டார். அப்பாவின் கையெழுத்துகள் தாங்கிய கடிதங்கள் நினைவுப் பெட்டகமாக எங்களிடம்.

கடிதம் எழுதிக் கொண்டிருந்த நான், இன்று பத்திரிக்கைகளில் எழுதுகிறேன். என் ‘வளர்ச்சி’ சுய முன்னேற்ற இதழ் இன்று இந்திய தபால்துறையின் வழியே வாசகர்களை சென்றடைகிறது.

இன்று ‘உலக தபால் தினம்’

– பரமன் பச்சைமுத்து
சென்னை
09.10.2023

#WorldPostDay #PostDay #தபால் #கடிதம் #கடுதாசி #பரமன் #பரமன்பச்சைமுத்து #Paraman #ParamanPachaimuthu #ParamanLifeCoach #WriterParaman #Letter #Postoffice #Postman #தபால்காரர்

images (6)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *