சைவத்தின் பாற்கொண்ட பெரும் பற்றால் வைணவத்தை இகழ்ந்ததாகவும் தில்லை சித்ரகூடத்தில் வணங்கப்படும் கோவிந்தராசர் சிலையை பிச்சாவரம் பக்கத்தில் கடலில் போட்டதாகவும் குலோத்துங்க சோழனுக்கு வடிவம் தந்திருப்பார் கமல்ஹாசன் தனது ‘தசாவதாரம்’ திரைப்படத்தில்.
குலோத்துங்கரின் காலத்தில்தான் வீரபாண்டியன் மறைந்து வாழ்ந்ததாகவும் அவருடைய மனைவி சிறையில் அடைக்கப்பட்டதாகவும் பிரமாதமான புனைவு செய்திருப்பார் அரு. ராமநாதன் தன் ‘வீரபாண்டியன் மனைவி’ நாவலில். (அரு. ராமநாதன் ‘ராஜராஜசோழன்’ திரைப்படத்திற்கு திரைக்கதை வசனம் எழுதியவர், நம் மலர்ச்சி மாணவர் ராமநாதனின் தாத்தா)
குலோத்துங்கனின் கலிங்கப் போர் வெற்றியினால்தான் கலிங்கத்துப் பரணி பாடப்பெற்றது என்பது பள்ளிப்பாடத்தில் நாம் படித்தது. இன்று காலை வெளியான இந்து தமிழில் வரலாற்றாய்வாளர் இரா. கலைக்கோவனின் கட்டுரை குலோத்துங்கரைப் பற்றி வேறொரு திசையை சுட்டுகிறது.
வைணவத்தின் மிக முக்கிய தலமான திருவரங்கத்தோடு குலோத்துங்கர் கொண்டிருக்கும் தொடர்பு பற்றி கல்வெட்டுகள் படத்தோடு விளக்கி கட்டுரை தந்திருக்கிறார் ‘குலோத்துங்க புரட்சி’ என்ற தலைப்பில்.
அரங்கம் (திருவரங்கம்தான்!) பொருளாதாரம் நசிந்து மங்கிய போது சீரமைப்பு செய்து தூக்கி நிறுத்தி சேவை செய்தாராம் குலோத்துங்கர். அரங்கத்தின் மடப்பள்ளி சார்ந்த பல்வேறு அறக்கட்டளைகள் திருமடைப்பள்ளிபுறமாக அளிக்கப்பட்டிருந்த கொடை நிலங்களின் விளைவு கொண்டே நிகழ்த்தப்பட்டன. இந்நிலங்களின் பெரும்பகுதி தண்டுறை, காரைக்குடி ஆகிய காவிரிக்கரை ஊர்களில் இருந்ததாகவும், காவிரி பெருநீரால் மணலடித்து விளைச்சல் நின்று கோவிலின் செயல்கள் நசிங்கியதாகவும், குலோத்துங்கர் முழு வீச்சில் பெரிய அளவில் ‘அரங்கம் நில சீரமைப்பு’ என்றொரு திட்டத்தை செயல்படுத்தி கோவிலை தூக்கி நிறுத்தியதாகவும் திருவரங்கக் கோவில் திருச்சுற்றில் கல்வெட்டுகள் உள்ளதை படமோடு விளக்கியுள்ளார்.
குலோத்துங்கரின் தேவியர் தென்னவன் மாதேவி, வளவன் மாதேவி, உலகமகாதேவி, நெரியன் மாதேவி ஆகியோருடன் அரசின் உயர் அலுவலர்களும் படைத்தளபதிகளும் பெருநிலக்கிழார்களும் இணைந்து செயல்பட்டார்களாம். சைவ நெறியாளர்களான படைத்தளவர்களும், சோழரும், நிலக்கிழார்களும் வைணவ கோவிலுக்கு அறப்பணி செய்தனர் என்று சொல்லுகிறது கல்வெட்டு. அரசு நேரடியாக மக்களோடு இறங்கிச் செய்த மிகப்பெரிய நிலச்சீரமைப்பு பணி இதுதான் என்கிறார் ஆய்வாளர்.
ஆறு, ஏரி, கால்வாய், திசை வாய்க்கால், பொது வாய்க்கால், ஊர்ப்பெயர்க் கொண்ட வாய்க்கால் என நீர் மேலாண்மை கொள்கைள் செய்து பாசனத்தை சிறப்புற நடைபெற வசதிகள் செய்தாராம் குலோத்துங்கர்.
பெருமளவு தரிசு நிலங்களை சீர் செய்து விளை நிலங்களாக மாற்றி கோவிலுக்கு தந்தனராம். அந்நிலங்களை பயிர் செய்து தருவோருக்கு ஐந்தாண்டுகளுக்கு வரி நீக்கம் செய்தாராம் குலோத்துங்கர். வைணவத்திற்காக சேவை செய்த குலோத்துங்கரை வைணவத்தின் எதிரியாக கதை செய்திருக்கிறாரே கமல்ஹாசன்?
‘ஒரு வேளை அது வேறு குலோத்துங்கனோ!’ என்று சிந்தித்தால், ‘சுங்கம் தவிர்த்த சோழனை கர்வம் தவிர்க்கச் சொல்!’ என்றொரு வசனத்தை படத்தில் வைத்து குலோத்துங்கனை ‘சுங்கம் தவிர்த்த சோழன்’ என்று குறித்திருப்பார் கமல். திருவரங்கத்து கோவில் மடப்பள்ளிக்கான நிலங்களுக்கு ஐந்தாண்டுகள் வரி நீக்கிய குலோத்துங்கரை ‘சுங்கம் தவிர்த்த சோழன்’ என்று குறிப்பிடுகிறது திருவரங்கத்து திருச்சுற்று கல்வெட்டு.
வரலாற்றை புதினம் செய்து எழுதுகிறவர்கள் தங்கள் பாட்டுக்கு சிலவற்றை லேசாக சேர்ப்பது கூட பெரிய கதை மாற்றத்தை நிகழ்த்திவிடுகின்றன.
– பரமன் பச்சைமுத்து
29.10.2023