முன் குறிப்பு: மது அருந்துதல், புகைப்பிடித்தல், போதை பொருள்கள், துப்பாக்கி, ரத்தம் என லோகேஷ் கனகராஜின் படங்களில் வரும் வழக்கமான விஷயங்கள் இங்கும் படம் முழுக்க வருகின்றன. இது பற்றி நாம் இங்கு பேசவில்லை. இவற்றைத் தாண்டி படத்தை பற்றிய விமர்சனம் செய்கிறோம்.
….
குளு குளு இமாச்சல பிரதேசத்தில் மனங்கவர் மனைவியோடும் குளுகுளு குழந்தைகளோடும் காஃபி ஷாப் நடத்திக் கொண்டு அமைதியாக வாழும் விலங்குகள் நல மீட்பரான பார்த்திபன் வாழ்வில் ஒரு சிக்கல் வருகிறது. வந்தால் ஐம்பது காரோடு வரும் தென்னிந்தியாவின் பழைய வில்லன்களின் இடைஞ்சலை எப்படி எதிர்கொண்டு கையாள்கிறார் நாயகன் என்பதை ஸ்டைலிஷாக ரிச்சாக படமெடுத்து காட்டுகிறார் லோகேஷ் கனகராஜ்.
விஜய் அட்டகாசம்! கொடுத்த பாத்திரங்களில் தன்னைக் கூடுதலாகவே தந்து படத்தை தூக்கி நிறுத்துகிறார். செம ஃபிட்டாக, ஃப்ரெஷ்ஷாக இருக்கிறார். சிறப்பாக நடித்திருக்கிறார். முதல் பாதி முழுக்க ‘பழைய நடிகர் கார்த்திக்கின் (கௌதம் கார்த்திக் கின் அப்பா) மேனரிசத்தை அப்படியே ஒற்றி எடுத்து நடிக்கிறாரோ!’ என்ற எண்ணம் வந்து கொண்டேயிருக்கிறது.
’46 வயது விஜய்க்கு நரை திரை தோற்றம் என்றால், மனைவி த்ரிஷாவுக்கு?’ என்ற கேள்வியும் வருகிறது.
மிஷ்கின், சஞ்சய் தத், அர்ஜூன், சாண்டி மாஸ்டர், அனுராக் காஷ்யப், ப்ரியா ஆனந்த், மடோனா, மன்சூர் அலிகான், கௌதம் வாசுதேவ் மேனன், ‘கும்பளாங்கி நைட்ஸ்’ மேத்யூ தாமஸ், பாபு ஆண்டனி, மடோனா செபஸ்டியன் என பெரும் நட்சத்திரப் பட்டாளமே படத்தில்!
வீட்டுக்கு காவலாக அந்த ஜார்ஜ் மரியனைப் பார்த்ததுமே, ‘ஆகா! முந்தைய படத்துக்கு லிங்க் தரப்போறார் போல, லோகேஷ்!’ என்ற எண்ணம் வரவே செய்கிறது.
அனிருத் பின்னணி இசை சோடை போகிறது.
வெளியில் வந்து கதை, காட்சி, லாஜிக், ‘கழுதைப்புலிக்கு பெயர் வைக்கும் போதே எப்படி குழந்தை ‘எலீசா’ என்று சொன்னது?’ ஆகியவற்றை யோசித்தால் இடறல்கள் உண்டுதான். ஆனால், அரங்கத்தில் உட்காரும் போது தடதடவென பயணிக்கிறது படம். அதுதானே வேணும்?
சண்டைக்காட்சிகள் அட்டகாசம். படம் முழுக்க ஒரு தேன் வண்ணம் வரும் படி காட்டும் ஒளிப்பதிவும் அட்டகாசம். விஜய் நடிப்பு அட்டகாசம். அவ்வளவுதான்.
உங்கள் நோக்கம் ‘எண்டெர்டைய்னிங்’ என்றால், ‘லியோ’ அதை செய்கிறது.
வி-டாக்கீஸ் வெர்டிக்ட்: ‘லியோ’ – எண்டர்டெய்னிங். பார்க்கலாம்.
– திரை விமர்சனம் : பரமன் பச்சைமுத்து
#Leo #LeoFilm #LeoFilReview #Vijay #ActorVijay #LokeshKanagaraj #ParamanPachaimuthu #ParamanReview #பரமன்பச்சைமுத்து #லியோ #லோகேஷ்கனகராஜ் #நடிகர்விஜய் #தளபதிவிஜய் #லியோவிமர்சனம்