காவலருக்கு சல்யூட்!

1200-675-19862542--thumbnail-16x9-cdl

1200-675-19862542--thumbnail-16x9-cdl

சில செய்திகளை செய்திகளாகக் கடக்க முடிவதில்லை. செய்தி படித்து முடித்த பிறகும் செய்து விடுகிறது எதையோ. இதுவரை இப்படி நடந்திருக்கிறதா என்று தெரியவில்லை!

வாகனத்தில் அடிபட்டு சாலையிலேயே இறந்து போனார் டைல்ஸ் ஒட்டும் கூலித் தொழிலாளியான சக்திவேல் என்பவர். வாகனத்தில் அடிபட்டு இறந்து விட்டார் கணவர், இழப்பீடாவது வாங்கித் தாருங்கள் என்று அழுதபடி விருத்தாசலம் காவல் உதவி கண்காணிப்பாளர் ஆரோக்கியராஜிடம் வந்து நின்றார் செங்கல் சூளையில் வேலை செய்யும் மனைவி முத்துலெட்சுமி.

ஆய்வில் இறங்கிய ஆரோக்கியராஜ் கண்டறிந்தது அதிர்ச்சித் தகவல். வாகனம் மோதி விபத்து சாவு அல்ல, அதற்கு முன்பே சாலையில் விழுந்து விட்டார் என்று சிசிடிவிகளும் பிற கள ஆய்வுகளும் சொல்லின.

காவல்துறை உதவும் என்று நம்பி படியேறி வந்து புகார் தந்த முத்துலட்சுமி அதன் பிறகு வராததால், அவர் இருப்பிடம் தேடிப் போனார் காவல் உதவி கண்காணிப்பாளர். அங்கே அவர் கண்ட காட்சி அவரைக் கலங்கடித்திருக்க வேண்டும்.

வெறும் துணிகளாலும் சாக்கினாலும் மூடப்பட்ட வீடென்று சொல்ல முடியா ஓர் இருப்பிடம். அதில் முத்துலட்சுமியோடு சேர்த்து ஆறு பேர். ஆமாம், ஐந்து குழந்தைகள். இருந்த ஒரு ஆம்பளையும் இறந்து போய் விட திசை தெரியாமல் நின்ற இவர்களைக் கண்டு கனத்த நெஞ்சு கொண்டார் காவலர். அதற்குப் பிறகு நடந்தது வரலாறு!

‘இருந்த ஒரு ஆம்பளையும் இறந்துட்டான். ஐந்து குழந்தைகள்! வாழ ஒரு வீடு கூட இல்லை! ஐயோ! அவங்க நல்லா வாழனுமே! எதாவது செய்யனும்!’

ஆரோக்கியராஜ் வாட்ஸ் குழு ஒன்றைத் தொடங்கி முத்துலட்சுமி குடும்பத்தின் நிலையை சொன்னார். உதவிகள் கேட்டார். விருத்தாசலம் கோட்டத்திற்கு உட்பட்ட
ஆலடி, கருவேப்பிலங்குறிச்சி, கம்மாபுரம், மங்கலம்பேட்டை,
பெண்ணாடம் உள்ளிட்ட காவல் நிலையங்களில் பணிபுரியும் காவல் ஆய்வாளர், உதவி ஆய்வாளர், காவலர்கள் என அனைவரும் உதவிக்கரம் நீட்டினர். நல்லதுக்கு என்று தெளிவாகத் தெரிந்தால் ஓடி வந்து உதவ பலர் உண்டே உலகத்தில், காவலர்களோடு வெளியிலிருந்து தன்னார்வலர்களும் ஓடி வந்து உதவிக்கரம் நீட்டினர்.

10 லட்சம் ரூபாய் சேர்ந்தது, ஆமாம்! 10 லட்ச ரூபாய்! அதை வைத்து படுக்கையறை, குளியலறை, சமையலறை கொண்ட தரமான வீடொன்றை கட்டினார்கள்.

வீட்டிற்குத் தேவையான கட்டில், மெத்தை, பாய், தலையனை, வீட்டுப் பொருட்களை சீதனமாக காவல்துறை மேளதாளத்துடன் கொண்டு போய் தந்தது.

அக்கம்பக்கத்தினரை அழைத்து புதுமனை புகுதல் நிகழ்வு நடத்தப்பட்டது. வந்த விருந்தினர்கள் அனைவருக்கும் விருத்தாசலம் காவலர்கள் விருந்து பறிமாறினார்கள்.

கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜாராமே நேரில் வந்து ரிப்பன் வெட்டி கொண்டாடி வீட்டை முத்துலட்சுமிக்கும் குழத்தைகளுக்கும் தந்தார்.

அந்த வீட்டிற்கு அவர்கள் சூட்டிய பெயர் ‘கருணை இல்லம்’

‘நாம பாத்த பல கேஸ்ல இது ஒரு கேஸு!’ என்று கடந்து போகாமல், ‘இவங்க எப்படி வாழ்வாங்க? யாருமே இல்லையே உதவி செய்ய!’ என்று ஒரு துடிப்பு வந்ததே காவலரின் நெஞ்சில், அந்த ஒரு துடிப்பு பொறியாக மாறி மற்ற காவலர்கள் உதவியோடு ஆதரவில்லா அபலைகளுக்கு வீட்டைக் கட்டி விளக்கேற்றி வைத்திருக்கிறது. அந்த ஒரு துடிப்பு மொத்த காவல்துறையையும் மரியாதையோடு பார்க்க வைத்துள்ளது.

விருத்தாசலம் கோட்ட காவலர்கள் என்னை நனைத்து விட்டார்கள். விருத்தாசலம் காவல் உதவி கண்காணிப்பாளர் ஆரோக்கிராஜ் அவர்களை நான் கட்டித் தழுவ விரும்புகிறேன்.

விருத்தாசலம் காவலர்களே, ஆரோக்கியராஜ் சார்! நீண்ட நாள் வாழனும் நீங்கல்லாம்! இறைவனை பிரார்த்திக்கிறேன்!

வாழ்க! வாழ்க!

பெரும் மரியாதையுடன்,
பரமன் பச்சைமுத்து
மலர்ச்சி ஃபவுண்டேஷன்,
சென்னை
31.10.2023

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *