கஹாங் ஸே பையா…

பழக்கமில்லா தெரியாத உணவகங்களில், எது வயிற்றைக் கெடுக்காதோ அதை மட்டும் சாப்பிட்டுவிட்டு வருவதும், தெரிந்த பழகிய உணவகத்தில் புதியதை முயற்சி செய்வதும் என் வெளியூர்ப் பயணங்களில் கடைபிடிக்கப்படும் செய்முறை. ‘சரி! காலை டிஃபனுக்கு இந்த ஒரு வேளைக்கு அரிசி இல்லாத உணவு கிடைக்குதா பாப்போம்!’ என்று இறங்குவது ஓர் உதாரணம்.

பலமுறை உணவுண்ட சிங்க பெருமாள் கோவில் கிளை ஏ2பியில் இன்று காலை அமர்ந்து ‘இதுக்கு மேலே முயற்சி பண்ண இங்க எதுவும் இல்லை!’ என்று நினைத்த போது, ‘இந்தி’ மாட்டியது. எங்கள் இருக்கைக்கு வந்த சீருடையணிந்த சிப்பந்தி கையில் வைத்திருந்த ஏட்டைப் பிரித்து ‘என்ன வேணும் சார்?’ என்று கேட்டு எழுதத் தயாராகும் முன் அவரிடம் அவசரமாய் ஓடி வந்த வேறோர் ஊழியரிடம் ‘ஹர்ரே, உஸ்கோ பூச்சா!’ என்றார்.

‘இன்றைய முயற்சி இந்திதான்!’

‘ஆனா நமக்கு அவ்ளோ தெரியாதே! என்ன தெரியுதோ பேசு. ஆனா, இன்னைக்கு இதான் முயற்சி!’ ‘பெங்களூரு நாட்களில் காது வழியே கேட்டிருந்த இந்தியை இன்று வெளியே இறக்கறோம்!’

‘கஹாங் ஸே பையா?’

‘பாட்னா? ஓ… நித்திஷ் குமார் ப்ரதேஷ்!’ ‘தீன் மினி டிஃபன். ஏக் தோசா’ ‘இஸ்கே பாத் ஏக் காஃபீ, ஏக் தூத்’ ‘பில் ச்சாஹியே!’ ‘இஸ்கே ச்சேஞ்ச் ச்சாஹியே!’

தப்பும் தவறுமாக பேசினாலும் பரவாயில்லை, முயற்சிப்போம் என்று முடிவோடு இறங்கி அவரையும் முடித்து உணவையும் முடித்து விட்டேன். 30 ஆண்டுகளுக்கு முன்பு இப்படித்தான் ஆங்கிலம் முயற்சி செய்தோம் என்பது நினைவில் வந்தது.

எழுந்து வெளியே நடக்கும் போது என் முகத்தில் ஒரு புன்னகை. எதிரே அவரது முகத்திலும்.

வட மாநிலத்தவர்கள் பலர் ‘த’வை ‘ட’வாக கொள்ளும் அந்த உச்சரிப்போடு அவர் சொன்னார் ஆங்கிலத்தில்.

‘ட்டேன்கூ சார்’

நான் இந்தியில்.

‘தன்யவாத்’

– பரமன் பச்சைமுத்து
சிங்க பெருமாள் கோவில்
19.12.2023

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *