எம்ஜியார்…

images (6)

சினிமா கொட்டகைகளோ தொலைக்காட்சிப் பெட்டிகளோ இல்லாத அன்றைய மணக்குடியில் படம் பார்க்க வேண்டுமென்றால் 7கிமீயில் இருக்கும் புவனகிரிக்கோ, 12 கிமீயில் இருக்கும் சிதம்பரத்திற்கோதான் போக வேண்டும். பேருந்து வசதியே இல்லாத அக்காலங்களில் மாட்டுவண்டி கட்டிக் கொண்டு அதில் வைக்கோலை பரப்பி அமர்ந்து கொண்டு எப்போதாவது சினிமாவுக்கு கூட்டிப் போனாலும் அது ‘திரிசூலம்’ ‘கௌரவம்’ வகை சிவாஜி படங்களாகவே இருக்கும் என்பதால் எனக்கு எம்ஜிஆர் படங்களின் அறிமுகங்கள் இல்லவே இல்லை.

மணக்குடியின் காது குத்து, மஞ்சள் நீராட்டு, திருமண நிகழ்ச்சிகளின் போது அவ்வீடுகளிலிருந்து இசைத்தட்டுகளிலிருந்து ஒலிபரப்பப்படும் காதைக் கிழிக்கும் கூம்பு ஸ்பீக்கர்களிலும் பாடல்களில் அடிக்கடி வரும் ‘ஐ…ஐ…ஐ…. நேத்துப் பூத்தாளே ரோஜா மொட்டு…’ பாடலின் வழியேதான் எம்ஜிஆர் அறிமுகம்.

ஐந்தாம் வகுப்பு படித்த போது, ஒரு வண்டியில் மைக் செட் கட்டிக் கொண்டு ஒலிபெருக்கியில் சொன்னார்கள், ‘மக்கள் திலகம் எம்ஜிஆர் ஆட்சியில் கிராமங்களுக்கு பேருந்து விடும் வசதியின் வழியாக அண்ணாமலை பல்கலைகழகம் சொல்லும் 8 ஆம் நம்பர் பேருந்து மணக்குடி வரை விடப்படுகிறது. கீழமணக்குடிக்கு பேருந்து வசதி, அமைச்சர் விவி சாமிநாதன் அவர்கள் தொடங்கி வைப்பார். அனைவரும் மாரியம்மன் கோவிலுக்கு எதிரில் வரவும்’.

‘மணக்குடிக்கு பஸ் வருது. பள்ளிக்கூடம் சீக்கிரம் விட்டுடறோம்!’ சம்மந்தம் வாத்தியார் சொல்ல, வேலாயுதம் மாமா, சரவணனோடு மாரியம்மன் கோவிலுக்கு ஓடினோம் ஊருக்கு வரும் பேருந்தை பார்க்க. மணக்குடிக்கு பேருந்து வந்தது. புவனகிரிக்கு 50காசு, கீரப்பாளையம் 60 காசு, சிதம்பரம் 80 காசு பேருந்து கட்டனம். அப்போது கடலூருக்கு 4 ரூபாய். சென்னைக்கு 22 ரூபாய் என்று நினைவு.

தலைமையாசிரியரும் ஐந்தாம் வகுப்பு ஆசிரியருமான சம்மந்தம் ஒரு நாள் எங்கள் வகுப்பில் வந்து அனைவருக்கும் அதை அறிவித்தார். ‘இனி காமராசரின் மதிய உணவு இல்லை. எம்ஜிஆர் கொண்டு வந்துள்ள முதலமைச்சரின் சத்துணவு. எல்லோருக்கும் எம்ஜிஆர் தமிழக அரசின் பல்பொடி வரப்போகிறது. தருவோம். எல்லாரும் பல் விளக்கனும். பல் வெளக்காம வர்றவனை நிக்க வச்சு மணி அடிப்பேன்!’

மணக்குடிக்கு சத்துணவு டீச்சர் வந்தார்கள். சமைக்கும் இரண்டு பெண்மணிகள் வந்தார்கள். மணக்குடிக்கு சத்துணவு வந்தது. மாணவர்களுக்கு பல்பொடி வந்தது.

எம்ஜியார் உடல் நலம் குன்றி ப்ரூக்ளின் மருத்துவமனையில் இருந்த போது இங்கே தேர்தல் வென்றது. சட்டமன்றம் பாராளுமன்றம் இரண்டும் நடந்தது. எங்களூரில் விவிஎஸ் இரட்டையிலையிலும் சிதம்பரம் பாராளுமன்றத்தில் கை சின்னத்தில் வள்ளல்பெருமானும் வெற்றி பெற்றார்கள்.

டாக்டர் எச்வி ஹெண்டேதான் எம்ஜியார் பிழைக்க காரணம் என்றார்கள். எம்ஜியார் அமெரிக்காவிலிருந்த படியே வென்றார்.

தினமலரில் எம்ஜிஆரின் படங்கள் வந்தன. சிலரது வீடுகளில் அதை வெட்டி ஒட்டி ஊதுவத்தி ஏற்றி வைத்திருந்தனர். எங்கள் ஊரில் பலரும் வானொலியில் காதைக் கொடுத்து விட்டு கூட்டம் கூட்டமாக கேட்டுக் கொண்டிருந்தனர். ‘தங்கத்தை மண்ணிலிருந்து வெட்டி எடுப்பார்கள். இங்கே தங்கத்தை மண்ணில் புதைக்கிறார்களே, ஐயோ!’ எம்ஜிஆர் இறந்து போனார், வானொலியில் நேரலை வர்ணனை ஒலிபரப்பு.

அரசியல் பற்றி ஏதும் அறியா சிறு வயதில் என் எம்ஜியார் அனுபவங்கள் அவ்வளவுதான். ‘என் அண்ணன்’தான் நான் பார்த்த முதல் எம்ஜிஆர் படம். வளர்ந்த பிறகே பழைய படங்களை மறுவெளியீட்டிலும் தொலைக்காட்சியிலும் பார்த்தேன்.

கலைஞர், ஜெ என ஆட்சிகள் மாற நான் வளர்ந்தேன். வளர வளர ஆர்எம் வீரப்பன், ஜெ, சத்யா மூவிஸ், கலைஞர், கண்ணதாசன், அண்ணா, ஈவிகே சம்பத் பற்றியெல்லாம் சொன்னார்கள். வேலுபிள்ளை பிரபாகரன் எம்ஜியார் உறவு பற்றி சொன்னார்கள்.
எம்ஜியார் பற்றி கொஞ்சம் படித்தறிந்தேன்

….

சத்துணவு திட்டத்தின் மூலம் குழந்தைகள் பசி தீர்ந்தது. ஒரு பள்ளிக்கு 3 பேர் என 60,000 பேருக்கு சத்துணவு திட்டத்தின் மூலம் வேலையும் கிடைத்தது.

ஆண்டு தோறும் கைத்தறி துணிகளை அரசே கொள்முதல் செய்து கோ ஆப்டெக்ஸ் மூலம் விற்கும், மக்களும் பயனடைவர், கைத்தறி நெசவாளர்களும் பயனடைவர் என்ற திட்டம் எம்ஜியாரால் தொடங்கப்பட்டது.

பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 48% இட ஒதுக்கீடு என்பதை ஒரே நேரத்தில் 20% உயர்த்தி 1% பழங்குடியினருக்கும் சேர்த்து 69% என்று இந்தியாவிலேயே முதன் முதலில் செய்தவர் எம்ஜியார். (பிற்பாடு விபிசிங் மண்டல் கமிஷன் பரிந்துரையை இந்தியா முழுவதும் அமல்படுத்திய போது இடொதுக்கீடு 50%ஐ தாண்டக்கூடாது என்று தீர்ப்பு வந்ததும், அப்போதைய முதல்வர் ஜெ ஏற்கனவே இருக்கும் 69%ஐ காக்க ஒரு தீர்மானம் போட்டதும், பிரதமர் நரசிம்மராவிடம் பேசி அதை அரசியல் சாசனம் 9 வது அட்டவனையில் சேர்த்ததும் வரலாற்றில் உள்ளது) (69% சதவீதம் இடொதுக்கீடு செய்தவர் எம்ஜியார். அதை பாதுகாத்தவர் ஜெயலலிதா)

‘ஆல் இண்டியா ரேடியோ’வை ‘ஆகாசவாணி’ என மத்திய அரசு மாற்றிய போது, அதற்கு இலங்கை, அமெரிக்கா வானொலி நிலையங்களின் பெயர்கள், ‘இந்தியா’ பெயர் முக்கியத்துவம் பற்றி விளக்கி கடிதம் எழுதி, நகலை பத்திரிக்கைகளுக்கும் தந்து, இந்திரா காந்தியிடம் பேசி மறுபடியும் ‘ஆல் இண்டியா ரேடியோ’ வர வைத்தாராம்.

அன்று மத்திய அரசின் நிலைப்பாடு தகர்க்க உண்ணாவிரதம் இருந்து எம்ஜியார் பெற்ற அரிசி ஒதுக்கீடு
இன்று வரை தொடர்கிறது.

….

இன்றும் மணக்குடியில் எம்ஜியார் விசுவாசிகள் உள்ளனர். மணக்குடிக்கு பேருந்து வருகிறது. இன்றும் மணக்குடியில் சினிமா கொட்டகைகள் இல்லை. ஓடிடி வந்து விட்டது.

எம்ஜியாரை நான் பார்த்ததேயில்லை. 91ல் சென்னை வந்ததும் எம்ஜிஆர் சமாதியை கூட்டிப் போய் காட்டினார்கள்.

‘அவரு கட்டியிருந்த வாட்ச் இன்னும் உள்ளயே இருக்கு. காது வச்சி கேளேன். டிக் டிக்குன்னு சத்தம் கேக்கும்!’ என்றார்கள்.

முழுக்கை சட்டையணிந்து சட்டையின் மீது வாட்ச் கட்டியிருப்பார் எம்ஜிஆர்.

இன்று எம்ஜியார் நினைவு தினம்.

– பரமன் பச்சைமுத்து
24.12.2023

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *