திருவாசக மூல ஓலைச்சுவடி

‘மாலிக் காபூருக்கும் மாணிக்கவாசகருக்கும் என்ன சம்மந்தம்?’

‘பாண்டிய மன்னன் சுந்தர பாண்டியனுக்கும், சோழ தேச எல்லைக்குட்பட்ட புதுச்சேரிக்கும் என்ன சம்மந்தம்?’

…….

சென்னையிலிருந்து மணக்குடி நோக்கி விரைகிறது எங்கள் கார்.

‘அம்மா, திருவாதவூரர் அருள் பெற்று மாணிக்கவாகசகரா மாறின எடத்துக்கு போனோமே ஞாபகம் இருக்கா?’

‘திருப்பெருந்துறை!’

‘கரெக்ட். அந்த மாணிக்கவாசகர் சொல்ல சிவனே சிதம்பரத்தில் எழுதிய திருவாசகம் மூல ஓலைச்சுவடி இப்ப எங்க இருக்கு தெரியுமா?’

‘!!!!’

….

(கொஞ்சம் வரலாற்றை பார்க்க வேண்டியிருக்கிறது. பார்த்து விட்டு வருவோமே! )

பாண்டிய அமைச்சர் வாதவூரர் திருப்பெருந்துறையில் தடுத்தாட்கொள்ளப் பெற்று மாணிக்கவாசகரானதும், தில்லையம்பதி எனப்படும் சிதம்பரம் வந்தடைந்து அங்கே திருவாசகம் பாடி எழுதப்பெற்றதும் பக்தி புராண இலக்கியங்கள் வழியே ஏற்கனவே அறிந்திருக்கிறோம் (திருப்பெருந்துறை போய் பதிவு செய்த நம் பழைய கட்டுரையிலும் குறிப்பிட்டிருக்கிறோம்).

கி.பி. 1310ல் தென்னகம் நோக்கி மாலிக் காபூர் படையெடுத்து வந்த போது, மதுரையிலிருந்து சுந்தர பாண்டியன் தப்பியோடிவிட, மதுரையைக் கைப்பற்றியதோடல்லாமல் சுந்தர பாண்டியனையும் தேடித் துழாவினாராம் மாலிக் காபூர். தப்பியோடிய பாண்டியன் தூரத்திலுள்ள சிதம்பரத்தில் பாதுகாப்பாக பதுங்கியிருப்பதாக தகவல்கள் வர, சிதம்பரம் நோக்கி புறப்பட்டாராம்.

‘ஐயோ! மாலிக் காபூர் சிதம்பரம் வந்து திருவாசக திருவோலைச் சுவடிகளை தீக்கிரையாக்கி விட்டால் என்ன செய்வது!’ என்று பலரும் பதறியபோது, சிதம்பரம் அம்பலத்தாடிகள் மடத்து நாகலிங்க சுவாமிகள், இறைவனை பிரார்த்தித்து திருவோலைச் சுவடிகளை இறந்தவர்களை சுமந்து செல்லும் பாடையில் மறைத்து சுமந்து புதுச்சேரி அம்பலத்தாடியார் மடத்துக்கு வந்து சேர்ந்தாராம், சேர்ப்பித்தாராம்.

புதுச்சேரி செட்டித் தெருவிற்கு அடுத்த தெருவான அம்பலத்தாடி மடம் தெருவிலுள்ள அம்பலத்தாடி மடத்தினுள்ளே மூலவரான நடராஜப் பெருமானின் திருவடிக்குக் கீழுள்ள அடுத்த படியில் வெள்ளிப் பேழையில் வைத்துப் போற்றிப் பாதுகாக்கப் படுகின்றன, 300 பனையோலைகளால் ஆன அந்த திருவாசக ஓலைச்சுவடிகள்.

ஆண்டுக்கு ஒருமுறை மகா சிவராத்திரியன்று மட்டுமே பேழையிலிருந்து வெளியே எடுக்கப்பட்டு பூசனைகளும், ஓலை கெடாமல் இருக்க செய்யும் முறைமைகளும் புரியப்பட்டு உள் வைத்து பூட்டப்படுகிறது.

கிறித்துவம் பரப்ப வந்த ஜி.யு. போப்பை உருக்கி கரைத்த, தென்னாடுடைய சிவனைப் போற்றும் அடியார்கள் போற்றும், திருவாசகத்தின் மூல ஓலைச்சுவடிகள் இப்போது இருப்பது புதுச்சேரியில்.
…..

சென்னையிலிருந்து மணக்குடி நோக்கி விரைகிறது எங்கள் கார்.
புதுச்சேரியில் நகருக்கு உள்ளே நுழைகிறோம்.

‘அம்மா, திருவாதவூரர் அருள் பெற்று மாணிக்கவாகசகரா மாறின எடத்துக்கு போனோமே ஞாபகம் இருக்கா?’

‘திருப்பெருந்துறை!’

‘கரெக்ட். அந்த மாணிக்கவாசகர் சொல்ல சிவனே சிதம்பரத்தில் எழுதிய திருவாசகம் மூல ஓலைச்சுவடி இப்ப எங்க இருக்கு தெரியுமா?’

‘எங்கடா தம்பி! ???’

(முழுக் கதையையும் விளக்குகிறோம்)

‘புதுச்சேரி அம்பலத்தாடி மடம்! இப்ப அங்கதான் போறோம்!’

…..

(மடத்தினுள்ளே படமெடுக்க, காணொளி எடுக்க அனுமதி இல்லை என்பதால் வெளியே வந்து முகப்பினில் நின்று படமெடுத்துக் கொண்டோம்)

…..

வெளியே வருகிறோம்.

என் அப்பா இருந்திருந்தால், ஃபோனில் தகவல் சொன்னாலே உடனே ‘சிவ சிவா!’ என்று தொடங்கி திருக்கோத்தும்பியோ, திருச்சாழலோ, ஏதோவொரு பதிகத்தை பெருங்குரலெடுத்து பாடியிருப்பார். அப்பா திருவாசகத்தின் மீதும் மணிவாசகர் மீதும் பெருங்காதல் கொண்டவர். பாட்டி மரணப்படுக்கையிலிருந்த போது தலைமாட்டில் நின்ற என்னை சிவபுராணம் சொல்லச் சொன்னவர். தில்லை நடராசர் தேரில் ஏறும் அந்த மார்கழி மிருகசீரிஷத்தில் அப்பா உடலை விட்ட அந்த அந்திம நேரத்தில் அவர் அருகே நின்றிருந்த நான் சிவபுராணம்தான் சொன்னேன் கண்ணீருடன்.

வெளியே வந்து காரை நோக்கி நடக்கிறோம் மணக்குடி நோக்கி பயணிக்க. நாளை சிதம்பரத்தில் பள்ளி மாணவர்களுக்கான மலர்ச்சி நிகழ்ச்சி எடுக்க.

‘அம்மா! திருவாசகம் இருக்கற எடத்த பார்த்தாச்சு!’

அணிச்சையாக வலது கையை எடுத்து தன் நெஞ்சில் வைத்துக் கொண்டு சொல்கிறார், ‘எப்படி சொல்றதுன்னு தெரியல தம்பி! சந்தோஷம்! கார்த்திகை சோமவாரம்!’

– பரமன் பச்சைமுத்து
புதுச்சேரி
11.12.2023

#AmmaAalayaDharisanam #AmirthamPachaimuthu #MuPachaimuthuArakkattalai #ParamanTouring #ParamanAmirtham #AmbalathaditarMadam #Manickavasagar #Thiruvasagam #Thiruvadhavoorar #Puducherry #திருவாசகம் #திருவாசகம்ஓலைச்சுவடி

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *