‘எத்தனை எழுதினாலும் எழுத இன்னமும் இருக்கிறது!’ என்று எழுதினார் ஜெயகாந்தன். ஒரு சிறந்த எழுத்தாளனுக்கு எவ்வளவு எழுதினாலும், எத்தனை நூல்கள் எழுதியிருந்தாலும்கூட தன் எழுத்தை அச்சில் பார்க்கும் போது பேருவுகையும் பெருமகிழ்ச்சியும் பொங்குமாம். ஒரு தேர்ந்த எழுத்தாளனுக்கே அப்படியென்றால், ‘நான் ஓர் எழுத்தாளன்தானா?!’ என்று என்னையே கேட்டுக்கொண்டிருக்கும் எனக்கு, என் எழுத்து அச்சாகி நூலாக வந்தால் எப்படி இருக்கும்!
என் 14ஆவது நூல் எனக்குத் தெரியாமலே திடீரென்று வந்து நிற்கிறது. எப்போது வரும் என்று தெரியாமல் திடீரென நம் நூல் வருவதும் அதனால் நமக்கு வருவதும் இன்ப அனுபவமே.
சில ஆண்டுகளுக்கு முன்னால் நாம் எழுதிய 55 சுய முன்னேற்றக் கட்டுரைகளை தொகுத்து, படங்களிட்டு, மிகச் சிறப்பாக வடிவமைத்து சிறப்பான நூலாக கொண்டு வந்திருக்கிறது சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்.
நீண்ட நாட்கள் எடுத்துக் கொண்டது பரவாயில்லை எனுமளவிற்கு சிறப்பாக வந்துள்ளது நூல். தொடங்க இருக்கிற 2024 சென்னை புத்தகக் கண்காட்சியில் விற்பனைக்கு வருகிறது இந்த நூல்.
” …55 வெவ்வேறு தலைப்புகளில் அன்றாட வாழ்வில் இருந்து எடுத்தாளப்பட்ட உதாரணங்களின் துணையுடன் எளிய நடையில் இல்லறம், தொழில், சமுதாயம் என அனைத்துப் படிநிலைகளிலும் வெற்றிகளைக் குவித்துச் சிகரங்களைத் தொடுவதற்கான வழிமுறைகளைச் சொல்கிறது இந்தப் புத்தகம்.
ஆசிரியருக்கு உலகம் முழுவதும் வாசகர்கள் இருக்கிறார்கள். அவரது மலர்ச்சி வகுப்புகளில் ஏராளமானோர் கலந்து கொண்டு வாழ்க்கைக் கல்வியைக் கற்றுப் பயனடைந்திருக்கிறார்கள். இப்புத்தகம் கற்றதை மறக்காமல் இருக்கவும், தேவைப்படும்போது புரட்டிப் பார்த்துத் தெளிவு பெறவும் உதவுகிற கையேடாக அவர்களுக்குப் பயன்படும்… ” என்ற பதிப்புரையோடு வந்திருக்கிறது நூல்.
வளர்ச்சி தரும் நல்ல சுய முன்னேற்றக் கட்டுரைகள் என்று நான் பரிந்துரைக்கும் கட்டுரைகள் தொகுக்கப்பட்ட ஒரே நூலாக – ‘தொடங்கு… தொடர்… தொடுவாய் உச்சம்!’
தினமலரில் நாம் தொடராக எழுத அவற்றை தொகுத்து ‘அச்சம் தவிர்… ஆளுமை கொள்!’ என்று சிக்ஸ்த் சென்ஸ் பதிப்பித்து ‘பெஸ்ட் செல்லர்’ பட்டியலில் நிற்கும் நமது முந்தைய நூலை விட, இந்த ‘தொடங்கு… தொடர்… தொடுவாய் உச்சம்!’ இன்னும் சிறப்பாக வந்திருக்கிறது உள்ளடக்கத்திலும் வடிவத்திலும்.
படிப்பவரின் உள்ளத்தில் விதைகள் விழும் என்ற வலுவான நம்பிக்கையில் மகிழ்ந்து நிற்கிறேன்.
கருவாக்கி உருவாக்கி எனையாண்டு
காத்தருளும் இறைவா நன்றி!
கூடுதல் மகிழ்வுடன்,
பரமன் பச்சைமுத்து
சென்னை
29.12.2023
#ThodanguThodar #ThodanguThodarBook #SixthSensePublications #ParamanPachaimuthu #AuthorParaman #WriterParaman #தொடங்கு-தொடர் #பரமன் #பரமன்பச்சைமுத்து #ParamanPachaimuthuBooks #Malarchi #Valarchi