எந்த பாடலைத் தந்தாலும் அதில் தன்னையே குழைத்து ஊற்றி சின்னதாய் சிரித்து, கொஞ்சி, அழுது, கர்ஜித்து விளாசி விடுவார் எஸ்பிபி என்பதைத் தாண்டி ரஹ்மானின் இசையும் அசரடிக்கிறது ‘அழகான ராட்சசியே’வில்.
அதனால்தான் ஹரிஹரன் குரலில் வரும் ‘குறுக்கு சிறுத்தவளே…’ என்னை இன்னமும் சொக்கிப் போக வைக்கிறது. அதுவும் ‘கம்பஞ்சங்கு விழுந்த மாதிரியே’ எனும் முதல் சரணத்திற்கு முந்தைய இடத்தில் வரும் சின்ன துண்டிலும், இரண்டாம் சரணமான ‘ஒரு தடவ இழுத்து அணைச்சபடி’க்கு முன் வரும் சின்ன துண்டிலும் வித்தியாசம் காட்டுமிடத்திலும் நான் நின்று போகிறேன். (இதை பாடும் மகாலட்சுமி ஐயரை சுவர்ணலதா என பலரும் நினைத்துக் கொண்டுள்ளனர்)
‘தாழையாம் பூ முடித்து தடம் பார்த்து நடை நடந்து’வை எவ்வளவு ரசிப்பேனோ அதே அளவு ‘கத்தாழம் காட்டு வழி, கள்ளிப்பட்டு ரோட்டு வழி’யை அதேயளவு கொண்டாடுகிறேன். குறிப்பாய் ‘வண்டி மாடு எட்டு வச்சி…’ வரும் போது.
‘வராக நதிக்கரையோரம்’ பாடலில் ‘பஞ்ச வர்ண கிளி நீ பறந்த பின்னாலும்… ‘ எனும் இடத்திலும், ‘ஆருயிரே மன்னிப்பாயா மன்னிப்பாயா!’ என்று பாடல் முழுவதிலும் ரஹ்மான் பாடும் அதே வரிகளை பாடலின் இறுதியில் லேசாய் மாற்றி சின்மயி பாடும் இடத்திலும் என் இதயம் நின்று பிறகு இயங்கும்.
மணிரத்னத்தில் தொடங்கி முப்பத்திரண்டு ஆண்டுகளாய் முன்னணியில் இருக்கும் ஏ ஆர் ரஹ்மான் இசையில் இதோ பொங்கலுக்கு வந்திருக்கும் ‘அயலான்’ வரை, எத்தனையோ படங்கள் வந்திருக்கின்றன. இன்னும் வரும். வரட்டும். அந்தப் பழைய ரஹ்மானைக் காணமுடியவில்லை இப்போது. வைரமுத்துவோடு இணைந்து முதல் பத்தாண்டில் ரஹ்மான் இயங்கிய அந்த காலகட்டத்தில் தந்தவை சிறப்பான பாடல்கள்.
‘எப்போ வரப் போறே மச்சான் எப்போ வரப்போறே!’வில் அந்த ரஹ்மான் கொஞ்சம் தெரிந்தாலும், பழைய ரஹ்மானை காணமுடியவில்லை என்னால். ஒரு வேளை எனக்கு வயதாகிறது போல.
தேசிய நெடுஞ்சாலையில் ஏ ஆர் ரஹ்மான் பாடல்களோடு பயணிக்கிறேன்.
– பரமன் பச்சைமுத்து
NH7
13.01.2024
#ArRahman #ArRahmanSongs #Paraman #ParamanPachaimuthu #ParamanReview #ParamanTouring #ஏஆர்ரஹ்மான் #பரமன்பச்சைமுத்து #தமிழ் #TamilFilm #Maniratnam #Spb #Vairamuthu #வைரமுத்து