‘சோழ நாடு சோறுடைத்து’ என்றெல்லாம் போற்றப்பட்ட சோழ நாட்டின் வளமைக்கு காரணம் என்ன என்ற கேள்விக்கு உங்களிடம் நிச்சயம் பதில் இருக்கும். அதனால்தான் சோழர்கள் நன்றியோடு வணங்கி துதித்தனர்.
……
கூர்க்கின் விராஜ்பேட்டிலிருந்து அந்த இடத்திற்குப் போய் சேர ஒன்றரை மணி நேரம் ஆகும்.
துலா மாதம் எனப்படும் ஐப்பசியில் உலகம் முழுவதிலிருந்தும் முக்கியமாய் கர்நாடக மண்ணின் மைந்தர்கள் இந்த இடத்திற்கு வருகிறார்கள். வந்து வணங்கி துதிக்கிறார்கள்.
எந்த இடம் என்று விவரிப்பதற்குள் காலங்காலமாய் சொல்லப்படும் ஒரு புராணக் கதைக்கு போய் வர வேண்டி இருக்கிறது.
கயிலாயத்தில் சிவனுக்கும் பார்வதிக்கும் திருமணம் நடக்க இருந்தது. இறைவனின் திருமணக் கோலத்தை நேரில் காண வேண்டும் என்பதற்காக மனிதர்கள், தேவர்கள், கந்தர்வர்கள், கிங்கரர்கள், பறவைகள், விலங்குகள் என மொத்த உயிரினங்களும் அங்கு போய் விட, நிலத்தின் வட பாகம் தாழ்ந்து போகத் தொடங்கியதாம். மொத்த எடையையும் சமநிலைப் படுத்த ஒரே ஒரு ‘வெயிட் பார்ட்டி’ சக்தியான நபரை தெற்கே அனுப்ப முடிவெடுத்தாராம் சிவன். சிவன் தேர்ந்தெடுத்த அந்த வெயிட்டான ஆனால் உருவத்தில் குள்ளமான அந்த நபர் குறுமுனி என்றழைக்கப்படும் அகத்தியர். ‘உனக்கு மட்டும் திருமண காட்சியை அங்கிருந்தே காட்டுகிறேன்!’ என்று சொல்லி தன் சடைமுடியிலிருந்து கொஞ்சம் நீரையள்ளி அகத்தியரின் கமண்டலத்தில் ஊற்றி அனுப்பினாராம்.
தெற்கு நோக்கி அகத்தியர் பயணித்த அந்த வேளையில் தமிழகத்தில் மழையேயில்லாமல் கடும் வறட்சியாம். சீர்காழியில் மறைந்திருந்து தவம் செய்து கொண்டிருந்த இந்திரன் விநாயகரை வேண்டினானாம். ‘ப்ராஜெக்ட் தண்ணி’ திட்டத்தை சிரமேற்கொண்டு விநாயகர் அகத்தியரை நோக்கிப் போனாராம். கயிலையிலிருந்து புறப்பட்டு குடகு மலைப் பகுதிக்கு வந்த அகத்தியர் ஓரிடத்தில் அமர்ந்து பிரார்த்னையில் இருந்தார். இதுதான் தக்க சமயமென்று காகம் உருவெடுத்து கமண்டலத்தின் மீதமர்ந்தார் விநாயகர். அகத்தியர் அகத்தில் ஆழ்ந்து இருக்க, காகம் கமண்டலத்தை சாய்த்து கீழே தள்ளி உள்ளிருக்கும் நீரை வெளியே ஓடச் செய்தது. வெளிவந்த நீர் காவிரி ஆறாக ஓடியது. (‘நடந்தாய் வாழி காவேரி!’ என்று அகத்தியர் பாடுவதாக சீர்காழி கோவிந்தராஜனை வைத்து ஒகேனேக்கலில் காட்சிப் படுத்தப்பட்டிருக்கும் ‘அகத்தியர்’ சினிமா நினைவுக்கு வருகிறதா?)
குடகில் அகத்தியரின் கமண்டலத்திலிருந்து வெளியே விழுந்து பொங்கி ஆறாக ஓடிய. அந்தக் காவிரியே ஒகேனேக்கல் வழியே தமிழகத்தை அடைந்து சோழ தேசத்தை வளப்படுத்தி கடைசியில் பூம்புகாரில் கடலில் கலக்கிறது. கமண்டலத்திலிருந்து காவிரி குதித்து விழுந்த இடம் ‘தலைக்காவேரி’ என்று கொடவர்களால் வணங்கப்படுகிறது.
கொடவா, கன்னட, துளு மொழிகளில் தலைக்காவிரியை ‘தலக்காவேரி’ என்றழைக்கின்றனர். (தமிழில் ‘காவிரி’, கர்நாடகத்தில் அது ‘காவேரி’)
‘குண்டிகே’ எனப்படும் குளம் அமைத்து ‘தலைக்காவேரி’யை தாயாக, அருகிலேயே அகத்தியருக்கும், விநாயகருக்கும், சிவனுக்கும் உருவமெழுப்பி வணங்கி வழிபடுகிறார்கள். மிக மிக புனிதமாகக் கருதப்படும் இவ்விடத்தில் குட்டை உடையணிந்து வரும் ஆண்கள், பெண்கள் அனுமதிக்கப்படுவதில்லை. பெண்கள் சுடிதார், டி ஷர்ட் அணிந்திருந்தால் மேலே ஓர் அங்கியோ சால்வையே போத்தியிருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர்.
‘இந்த எடத்திலதான் கமண்டலம் சாய்க்கப்பட்டிருக்கும், அப்ப இங்கதான் அகத்தியர் இருந்திருப்பாருல்ல!’ என்ற எண்ணங்கள் வரவே செய்கின்றன.
மணக்குடியில் காவிரியின் பாசனத்தால் உண்டு வளர்ந்த, மயிலாடுதுறையில் காவிரியில் நீராடி மகிழ்ந்த, பெங்களூரில் காவிரி நீர் பருகி வாழ்ந்த, பூம்புகாரில் கடலில் கல்லக்கும் காவிரியை கண்ட நாம்… குடகில் தலைக்காவிரியையும் கண்டு ஒரு வட்டத்தை பூர்த்தி செய்து விட்டோம்.
தலைக்காவிரி எனப்படும் அந்த ‘குண்டிகே’வை படமெடுக்க அனுமதிப்பதில்லை. சிதம்பரம் கோவிலின் தீட்சிதர்கள் போல கண்டிப்புடன் காவல் காக்கின்றனர். இருந்த போதிலும்….
தூரத்திலிருந்து நம்மை படமெடுத்துக் கொள்ளும் போது, நமக்கு நேராய் கீழ்ப்பக்கம் இருக்கும் தலைக்காவிரியையும் ஓரளவு தெரியும்படி சேர்த்துப் படமெடுத்து விட்டோம், பாருங்கள்!
‘பொன்னி நதி பாக்கனுமே… தீயாரி எசமாரி’ என்பவர்கள் இனி அதன் தோன்றுமிடமான தலைக்காவிரி பார்க்கட்டுமே!
: ‘குடகு மலைக் காற்றில்…’ – 4
-பரமன் பச்சைமுத்து
தலைக்காவிரி, கூர்க்
27.05.2024
#ParamanTouring #Paraman ##ParamanPachaimuthu #பரமன் #பரமன்பச்சைமுத்து #Karnataka #KudaguMalai #Kodagu #Thalakaveri #ClubMahindra #Virajpet #ParamanTravelWriteup #ParamanCoorg #Cauvery #Agathiyar #PonniNathi