மேகக் குளியல் : ‘குடகு மலைக் காற்றில்…’ – 5

கடலைப் போல மலைகளும் எப்போதுமே எனை ஈர்ப்பவை.

மண் திட்டுகள், கற்குவியல் குன்றுகள் (செஞ்சி – மலையனூர் பகுதிகளில்), பெரும் பாறைகள், புல் முளையா பாறை ( கர்நாடக சாவன் துர்கா), கல்லும் களிமண்ணும் கொண்ட மலைகள், வெறும் புதரும் முள் செடிகளும் கொண்ட மலைகள், மேகங்களை கிழித்து உயர்ந்து நிற்கும் மரங்களடரந்த காடுகளை கொண்ட மலைகள் என மலைகளில்தான் எத்தனை வகைகள். ஒவ்வொரு மலைக்கும் ஒவ்வொரு சிறப்பு உண்டு, அதற்கான தாவரங்களுண்டு, அதற்கான பறவைகளும் விலங்குகளுமுண்டு.

கடல் மட்டத்திலிருந்து எத்தனை உயரத்தில், எவ்வளவு மழைப் பொழிவு என்பதை பொறுத்து அந்த மலையும் மலைத்தொடரும் மாறுபடுகிறது, காடுகளும் தட்பவெப்பமும் அதையொட்டிய காட்டுயிர்களும் அமைகின்றன.

மலைகளைப் பார்த்த உடன் என் கால்கள் பரபரக்கின்றன. உள்ளம் பற பறக்கிறது. ‘குணா’ படத்து கமலஹாசனைப் போல மலைகளைக் கண்டதும் எனக்கு பிசிறு பிடிக்கிறது.

கடல் மட்டத்திலிருந்து 900 மீட்டர் உயரித்தில் இருக்கும் கூர்க்கில் இருந்தாலும், அதன் மீது இருக்கும் மலைகள் நமை ஈர்ப்பது இயல்புதானே. புறப்பட்டோம் மலையேற்றம் கொள்ள.

கூர்க்கில் கிளப் மகிந்திராவிலிருந்து காஃபி தோட்டங்களூடே பயணித்து இஞ்சித் தோட்டங்களையும் கடந்து நடப்பதே கடினம் எனும் சிதறிய கற்கள் கொண்ட சாலையில் ‘4 வீல் ட்ரைவ்’ கொண்ட ஜீப்பில் அரை மணி நேரம் பயணித்தால் பாலங்கா – கராடா வனச் சரக சோதனை சாவடி. அங்கே வண்டியை நிறுத்தி விட்டு அருகிலிருக்கும் புல்லடர்ந்த மலையில் தொடங்க வேண்டும் மலையேற்றத்தை. ‘சாரே, ஒற்ரு மணி நேரம் ஏறினால் உச்சி வரும். அந்த வ்யூ பாயிண்ட் நல்லா இருக்கும்!’ என்றார் கேரள கண்ணூரிலிருந்து வந்து கூர்க்கில் குடியேறிய உள்ளூர் கைடு சுப்ரமணி.

‘எவ்ளோ உயரம்? ஹைட் எவ்ளோ?’

‘கொத்தில்லா! தெரியலே. ரொம்ப ஹைட் சார்!’

‘நான் கண்டு பிடிச்சி சொல்றேன்’ என்று நம் செயற்கை நுண்ணறிவு கடிகாரத்தின் சாம்சங் செயலியை முடுக்கினோம்.

உடன் உட்கார்ந்து வந்த என் ஓட்டுநரிடம் ‘மலையேறி மேல வர்றீங்களா, இங்கயே இருக்கீங்களா?’ என்றோம். ‘அண்ணே! இங்க இருந்து என்ன பண்ணப் போறேன். நானும் ஏறி மேல வர்றேன்!’ என்றார் தவறான முடிவு அதுவென தெரியாமல்.

சரிவாகத் தொடங்கிய மலை போகப் போக செங்குத்தாக மாறிக்கொண்டிருந்தது. 22 டிகிரி குளிரில் வியர்க்கவில்லை என்றாலும், மூச்சிறைத்தது, இதயம் துடிப்பது எவ்வளவு என்று பார்த்ததில் 166 என்று காட்டியது கடிகார சாங்சங் செயலி. அதற்கு மேல் முடியவில்லை என்று அங்கேயே அமர்ந்து விட்ட ஓட்டுரை விட்டுவிட்டு மேலேறினோம் இதயம் துடிக்க துடிக்க, மனம் பறக்க பறக்க.

நாற்பது நிமிடங்கள் ஏறி நடந்து கடந்து உச்சிக்கு வந்த போது, ஒரு பேரதிசயம் அல்ல அல்ல வெள்ளையதியசம் எங்களை சூழ்ந்தது.

‘சாரே, அதான் வ்யூ பாயிண்ட். அங்கேருந்து பார்த்தா பள்ளம் மலை அழகு. அந்தப் பக்கம் கேரளா வீடுங்க தெரியும். இந்தப் பக்கம் குடகு தெரியும். அந்தப் பக்கம் வேற மலை தெரியும். ரொம்ப புடிக்கும்! வாங்க!’

நாம் நடப்பதற்குள் அது நடந்து விட்டது. எங்களுக்கு ‘சுத்து’ போட்டு விட்டது. சிக்கிக் கொண்டோம்.

முதலில் லேசான புகையாய் ஏதோ வந்தது. ‘சுத்துப் போடுறா இந்த மலையை!’ என்று யாரோ கட்டளையிட்டது போல எங்கிருந்தோ அடர் வெண்மையாய் வந்து எங்களை ஆட்கொண்டது. தட்பவெப்பம் மாறியது. பத்தடிக்கு அப்பால் இருக்கும் எதுவும் தெரியவில்லை. ‘ஓ! மேகம்!’ என்று உணர்வதற்குள் அங்கிங்கெனாதபடி எங்கும் மேகம், எல்லாம் மேகம்!

‘ஃபோஃகு சாரே ஃபோக்!’

‘ஃபோகா? ஓ ஃபாஃக்! மேகம்!’

‘ஆங்.. மேகம் மேகம் சாரே! சாரே, இப்ப வ்யூ பாயிண்டல எதுவும் தெரியாது ஃபுல் ஃபோஃகு!’

பத்தடி தூரத்திற்கு மேல் எதுவும் தெரியவில்லை. அடர் வெள்ளை புகை.

……

‘திருவிளையாடல்’ படம் பார்த்திருக்கிறீர்களா? (சிவாஜி கணேசன் நடித்தது, தனுஷ் – ஷ்ரேயா நடித்தது அல்ல)

நடிகர் திலகம் நடிகையர் திலகம் கலந்து கட்டி அடித்த காட்சிகள், ‘நெற்றிக் கண் திறப்பினும் குற்றம் குற்றமே!’, தருமி நாகேஷ் காட்சிகள், ‘குற்றம் கண்டு பிடித்தே பேர் வாங்கும் புலவர்கள்’, டிஎஸ் பாலையா – பாணபத்ரர் காமெடிக் காட்சிகள், ‘பாட்டும் நானே பாவமும் நானே!’ பாடல், கேபி சுந்தராம்பாள், ‘நீலச் சேலை கட்டிக் கொண்ட சமுத்திரப் பெண்ணே!’, ‘ட்ரெய்ய்ங்க்க்’ என்று வரும் எம்எஸ்வியின் இசையொலி என சொல்வதற்கு பல உண்டுதானே.
இவையெல்லாம் புரியாத சிறுவயதில் அந்தப் படத்தில் எனை ஈர்த்தது, அதில் வரும் தேவலோக காட்சிகள். குறிப்பாய் மேகங்களில் வரும் நாரதர். மேகங்களின் மீது மேகங்களின் இடையே நிற்பார்கள் தேவர்கள். அவ்வயதின் பெரும் ஈரப்பு அது.

……

இங்கே மேகத்தில் இருக்கிறோம் என்ற உணர்ந்த போது திருவளையாடல் நாரதர் போல இருந்தது. பின் கழுத்துப் பிடறியின் முடி கோதும் வழக்கத்தில் கோதிய போது பின் கழுத்தில் இறங்கி நிற்கும் முடியின் நுனிகளில் நீர் வடிந்து நிற்பதை விரல்கள் உணர விறைத்தே போனேன். ‘ஏய்… மேகத்திலேருந்து தண்ணி! ஹேய்… மேகக் குளியல்!’

தன்னுணர்வு கொண்டே கவனிக்கையில் மேகத்தின் குளுமை உடலில் தெரிகிறது. முன் பக்கத்திலிருந்தும் வலப்பக்கத்திலிருந்தும் வரும் மேகம் என் முகத்திலும் உடலிலும் பட்டு கிழிந்து எனக்குப் பின்னே மறுபடியும் ஒன்றாய் சேர்ந்து ஓடுகிறது. ‘மேகத்தில நிக்கறோம்!’

ஆழ்ந்து சுவாசித்தேன். மேகம் என் மூச்சினுள். வாய் திறந்து மேகத்தை உறிஞ்சி குடித்தேன். மேகம் என் வயிற்றினில். குளுமை! ‘ஏய்! மேகத்தையே சுவாசிச்சு மேகத்திலயே குளிச்ச பரம்பரைடா!’ என்று ஹரி படத்து வில்லன்களைப் போல கத்திச் சொல்ல விரும்பினேன்.

‘சாரே! ஃபோஃகு வ்யூ பாயிண்ட் பாக்க இல்லா’

‘வெயிட் பண்ணுவோம்!’

ஒரு மணி நேரம் காத்திருந்தும் மேகம் விலகவில்லை. ஒரே மேகமா அல்லது வேறு வேறு தொடர் மேகங்களா தெரியவில்லை. நாங்கள் மேகத்தில் இருந்தோம்.

காற்று திசை மாறி சுழன்றடிக்கும் வேளைகளில் கிடைக்கும் சில நொடிகள் மேக விலக்கில், ‘சார் அந்த வ்யூபாய்ண்ட் உச்சி கல்லுல நில்லுங்க, படமாவது எடுத்துப்போம்!’ என்று சுப்ரமணி சார் கேட்டுக்கொண்டதில் எடுத்த படங்கள், காணொளிகள் இவை.

நம் கடிகாரத்தின் சாம்சங் செயலியின் மலையேற்றம் பற்றி பார்த்தோம் 1,317 மீட்டர் உயரம் என்று காட்டியது.

‘சுப்ரமணி சார், ஹைட்டு 1317 மீட்டர்!’

‘எல்லாம் ஃபோன்ல காட்டும் சாரே?’

‘ஆமாம். இந்த மலை பேரு என்ன?’

‘இது…தரெ திட்டு!’

‘தரெ திட்டு!’

(‘தரையை திட்டமாட்டேன், போற்றுவேன்!’)

அங்கும் இங்கும் ஓடினேன். மலையேற்றத்தின் உச்சியில் எப்போதும் கிடைக்கும் ‘எக்ஸ்டசி’யை அனுபவித்தோம்.

இறங்கி வரும் போதும், நாம் விட்டுச் சென்ற தண்ணீர் பாட்டிலை அருந்திக் கொண்டு அதே இடத்தில் அமர்ந்திருந்த ஓட்டுநரைக் கூட பத்தடி தூரத்தில்தான் காண முடிந்தது. மேகம் விலகவே இல்லை.

ஜீப்பிலேறி வண்டியை இயக்குகையில் பத்தடிக்கு மேல் எதிர்வரும் வண்டி தெரியவில்லை.

‘ஃபோஃக் லைட் ஆன் பண்ணாதான் தெரியும். மோடம் போட்டுருக்கு சாரே! சாருக்கு வ்யூ பாயிண்ட் கெடைக்கல வருத்தமோ?’

‘பல மலைகள்ல ட்ரெக்கிங் பண்ணிருப்கோம், வ்யூ பாயிண்ட் பாத்துருக்கோம். ஆனா, இப்படி ஒரு மணி நேரம் மேகத்துக்குள்ளயே இருந்தது இல்ல, வேற அனுபவம் சுப்ரமணி சார்!’

வண்டி நகர்ந்தது. மனம் கூச்சலிட்டது.

‘ஏய்! மேகத்தையே சுவாசிச்சு மேகத்திலயே குளிச்சவன்டா!’

‘இறைவா நன்றி!’

: ‘குடகு மலைக் காற்றில்…’ – 5
– பரமன் பச்சைமுத்து,
விராஜ்பேட், கூர்க்
28.05.2024

#TrekkingLife #Trekker
#ParamanTouring #Paraman ##ParamanPachaimuthu #பரமன் #பரமன்பச்சைமுத்து #Karnataka #KudaguMalai #Kodagu #ParamanTrekking #ClubMahindra #Virajpet #ParamanTravelWriteup #ParamanCoorg #Tharathittu #Environment #

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *