‘குடகு மலைக் காற்றில்…’ – நிறைவுக் கட்டுரை:

‘குடகு மலைக் காற்றில்…’ – நிறைவுக் கட்டுரை:

தொழிற்சாலைகளே இல்லாத கண்ணுக்கு எட்டாத தூரம் வரையிலும் காடும், மலையும், காஃபி தோட்டமும் இஞ்சித் தோட்டமும் என பரந்து சுத்தமான காற்றுள்ள பகுதி கூர்க்.

ஏற்காட்டில் நெருக்கடி, இ பாஸ் வாங்கினால்தான் போக முடியும், ஊட்டி, கொடைக்கானல் முழுக்க பெருங்கூட்டம் என நினைப்பவர்களுக்கான இடம் கூர்க்.

குடும்பத்தோட போய் தங்கி பசுமை தோட்டம், அருவி, ட்ரெக்கிங் போக வேண்டுமானாலும் சரி. ‘எங்கயும் சுத்த வேண்டாம். போய் நாலு நாளு அப்படியே அமைதியா ஓய்வெடுத்துட்டு வரணும்!’ என்றாலும் சரி, கூர்க் நல்ல தேர்வு.

கிளப் மகிந்திரா, தமாரா போன்ற நட்சத்திர ரிசார்ட்டுகள் அருமை. பட்ஜெட் ரிசார்ட்கள், விடுதிகளும் உண்டு. ‘ஹோம் ஸ்டே’ வகை கையடக்க தங்குமிடங்களும் உண்டு.

கிளப் மகிந்திரா போன்ற ரிசார்ட்டுகள் தரும் சூழலும், அத்தனை வகை உணவுகளும், உள்ளேயே கிடைக்கும் பொழுதுபோக்கு விளையாட்டு அம்சங்களும் வெளியில் கிடைக்காதுதான் என்றாலும் நல்ல தரமான ரிசார்ட்டுகள் நிறைய உண்டு. எந்த ரிசார்ட்டில் இருந்தாலும் ஒன்றிரண்டு முறையாவது உள்ளூரின் தேர்ந்தெடுத்த உணவகங்களில் கூர்க் உணவை உண்டு பாருங்கள். விராஜ்பேட்டை ஊருக்குள்ளே ‘மஞ்சுநாதா’ என்னும் உள்ளூர் உணவகத்தில் கர்நாடக உணவின் கூர்க் ருசியை அனுபவித்தோம் நாம்.

அவசர முடிவெடுத்து திடீர்னு ஏதோவொரு விடுதிக்கு விரைந்து பிறகு ஒவ்வொன்றிற்கும் தனித்தனியாக தேடி செலவு செய்வதை விட, மொத்த சேவைகளும் தரும் அல்லது இணைப்பு கொண்ட விடுதிகளை தேர்வு செய்யுங்கள், வெளியூரில் காடு மலைப் பிரதேசங்களில் வழிகாட்டி கூட்டிப் போக தெரிந்த திறமையான ஆள் வேண்டும் என்பதை நினைவில் கொண்டு.

ஜூன் முதல் வாரத்திலிருந்து கேரள வடகிழக்கு பருவ மழை. தொடங்கி விடுவதால், அது கூர்க்கின் தட்பவெப்பத்தையும் கொஞ்சம் தொடும் என்பதால், அதற்கு முன்பே கூர்க்கிற்கு போய் வருவது நல்லது. (இரண்டாண்டுகளுக்கு முன்பு இதே போல மே மாதக் கடைசியில் சிக்கிம் போன எங்களுக்கு பருவ மழை தொடக்கத்தால் மண் சரிவால் ‘நாதுளா பாஸ்’ என்ற முக்கிய கணவாய் வழிப் பயணத்திற்கு அனுமதி கிடைக்காமல் ஏமாற்றத்தோடு திரும்பி வந்தோம்!’) ஆனால், கோடை கொளுத்தும் தட்பவெப்பபம் கொண்ட வட இந்தியாவிலிருந்து வருகிறவர்கள் (நேற்று டெல்லியில் 126 டிகிரி, சென்னை 102 டிகிரி) மழை நாளிலும் கூர்க் வருகிறார்கள், ரெயின் கோட் போட்டுக்கொண்டு கவனமாக மலையில் ஏறுகிறார்கள் என்பது உள்ளூர் கைடு சொன்ன செய்தி.

கூர்க்கை பொறுத்த வரை தலைநகர் மடிகேரியில் நல்ல ரிசார்ர்ட்டுகள் உள்ளன. நாம் தங்கியிருந்த விராஜ்பேட்டிலும் நல்ல சில ரிசார்ட்டுகள் உள்ளன.

கூர்கிலிருந்து பெங்களூர் தோராயமாக 4.30மணி நேரம் என்பதை கணக்கில் கொள்ளவும்.

: ‘குடகு மலைக் காற்றில்…’ – 6
– பரமன் பச்சைமுத்து,
பெங்களூரு
29.05.2024

#TrekkingLife #Trekker
#ParamanTouring #Paraman ##ParamanPachaimuthu #பரமன் #பரமன்பச்சைமுத்து #Karnataka #KudaguMalai #Kodagu #ParamanTrekking #ClubMahindra #Virajpet #ParamanTravelWriteup #ParamanCoorg #Tharathittu #Environment #Holidaying

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *