அது ஒரு பெரும் காடு. செழிப்பான கங்கை சமவெளியில் வாரணாசியையொட்டி அமைந்திருந்த, மான்கள் அடர்ந்த காடு. தன்னை அறிந்தவர் ஞானமடைந்தவர் அந்தப் பகுதிக்கு வந்ததும் காடு மாறியது, மான்கள் ஆழ் அதிர்வை உள்வாங்கி பேரமைதியில் திளைத்தன. மொத்த காடும் மாறுவதை ஐவரும் உணரும் வேளையில், அவர் அங்கு வந்தார். வந்தவரைக் கண்டதும்….
(இதை தொடர்வதற்கு முன் சில கேள்விகள், சில சங்கதிகள் உள்ளன. அவற்றை முதலில் பார்த்துவிடுவோம்!)
காசியும் வாரணாசியும் ஒன்றா? ஏன் இரண்டு பெயர்கள்?
மகாயானம், தேரயானம், ஹீனயானம் என்றெல்லாம் கடைபிடிக்கப்படும் பௌத்தம் உண்மையில் தொடங்கப்பட்ட இடம் எது?
தாய்லாந்து, மியான்மார், இலங்கை, பூடான், நேபாளம், கம்போடியா, லாவோஸ் ஆகிய நாடுகளின் மக்கள் காண விரும்பும் புனித தலங்கள் எவை தெரியுமா?
மகிந்த ராஜபக்ஷே, மகிந்தன் என்றெல்லாம் இலங்கையில் சூட்டப்படும் அந்த ‘மகிந்தன்’ என்ற பெயர் எங்கிருந்து தொடங்கியது தெரியுமா?
…..
மௌரியப் பேரரசன் அசோகனால் ஆசியா முழுவதற்கும் பரப்பப்பட்ட பௌத்தத்தில் 4 இடங்கள் மிகப் புனிதமான இடங்களாக கருதப்படுகின்றன. புத்த பெருமான் பிறந்த லும்பினி தோட்டம் (இன்றைய நேபாளத்தில்), கடும் தவத்தை கைவிட்டு ‘நடுப்பாதை’யை கொண்டு ஞானம் பெற்ற கயை (பீகாரில்), கொல்லனான பக்தனொருவன் தந்த பன்றிக் கறி உண்டு உடல் நிலை பாதிக்கப்பட்டு பரிநிர்வாணம் பெற்ற குஷி நகர் (உத்திரப் பிரதேசம்) ஆகியன.
‘ஹலோ பரமன், 3ஆம் இடத்தைப் பற்றி சொல்லலையே நீங்க?’ என்பது உங்கள் கேள்வியாக இருக்கக்கூடும். தொடர்ந்து படிக்கவும்.
கயையில் போதி மரத்தடியில் ஞானம் அடைந்து கௌதமராக மலர்ச்சி பெற்ற புத்த பகவான்,
தன்னுடன் தவமிருந்து பின்பு தவறான புரிதலால் விலகிப் போய்விட்ட ஐவரையும் காண வேண்டுமென விரும்பி அவர்களை நோக்கிப் பயணித்தார்.
அது ஒரு பெரும் காடு. செழிப்பான கங்கை சமவெளியில் (உத்திரப்பிரதேசம்) வாரணாசியையொட்டி அமைந்திருந்த, மான்கள் அடர்ந்த காடு. தன்னை அறிந்தவர் ஞானமடைந்தவர் அந்தப் பகுதிக்கு வந்ததும் காடு மாறியது, மான்கள் ஆழ் அதிர்வை உள்வாங்கி பேரமைதியில் திளைத்தன. மொத்த காடும் மாறுவதை ஐவரும் உணரும் வேளையில், அவர் அங்கு வந்தார்.
வந்தவரைக் கண்டதும் பழைய பரிவோடு ஓடி வரவேற்றனர். ஆனால், ஞானமடைந்த புத்தரின் மேலிருந்து வீசும் ஒளியையும் சக்கரமாய் வெளிப்படும் அதிர்வுகளையும் கண்டு கொண்டு வணங்கினர்.
அந்தக் காட்டிலேயே அவரருகில் அமர்ந்து அவரை வணங்கினர். தர்ம சக்கரம் எனும் அறவாழி சக்கரம் அங்கே தொடக்கம் பெற்று சுழலத் தொடங்கியது.
வாழ்வின் புரிதல்களை, எளிய விதிகளை, ஞானத்தின் பாதையை புத்தபிரான் அவர்களுக்குப் போதித்தார். ஞானமடைந்த 50ஆவது நாள் நடைபெற்றது இந்த முதல் போதனை.
தம்மம் தொடங்கியது. ஞானத்தின் ‘நாதர்(நாத்)’ ‘போதனை (சார்)’ செய்த முதல் இடம் என்பதை குறிக்க ‘சாரநாத்’ என்று பெயரிடப்பட்டது. பௌத்தம் தொடங்கப் பட்ட இடமான சாரநாத், பௌத்தர்களின் 3 வது புனித தலமாக போற்றப்படுகிறது.
கலிங்கப் போருக்குப் பிறகு அகமலர்ச்சி பெற்ற அசோகன் புத்தர் வாழ்ந்த போதித்த முக்கிய இடங்களை அடையாளம் செய்ய விரும்பி அடையாளத் தூண்களை எழுப்பினான். புத்த பகவான் முதன்முதலில் போதனை செய்த அந்தக் காட்டை பௌத்தம் தொடங்கிய இடம் என்பதை குறிப்பதற்காக அங்கே ஒரு கல்தூணை எழுப்பி அதன் உச்சியில் நான்கு சிங்கங்களையும் தர்ம சக்கரத்தையும் பொறித்தான். அது இந்தியாவிற்கே சின்னமாக மாறும் என்று அப்போது அவனுக்கு தெரியாமல் போயிருக்கலாம்.
அசோகன் எழுப்பிய அந்த தூண், காடாக இருந்த இடத்தில் எழுப்பப்பட்ட அருங்காட்சியகத்தில் கண்ணாடிக்குள் வைத்துப் பாதுகாக்கப்படுகிறது இன்று. சாரநாத் இன்று வளர்ந்து குடியிருப்புகளையும் வணிக மையங்களையும் கொண்டிருக்கிறது. காடுகள் இல்லை என்றாலும் அசோகர் அடையாளம் செய்த இடங்களும் அதையொட்டிய சில பகுதிகளும் அரசாலும் பௌத்த மடத்தாலும் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
புத்தர் இறந்து எரியூட்டப்பட்ட பிறகு அவரது எலும்புகள் பல இடங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டு பேழையில் வைக்கப்பட்டுள்ளன என்பது பௌத்தம் சொல்லும் செய்தி.
அசோகரின் மகன் மகிந்தனாலும் சங்கமித்திரையாலும் புத்தரின் எலும்புகளும் பற்களும், போதி மரத்தின் கிளைகளும் இலங்கைக்குக் கொண்டு செல்லப்பட்டன. அசோகனின் மகனில் தொடங்கிய ‘மகிந்தன்’ என்ற பெயர் காலகாலமாக சிங்கள மக்களிடையே தொடர்கிறது.
புத்தரின் ஓர் எலும்பும் பற்களும் இலங்கை கண்டியில் உள்ள ‘தலதா’வில் உள்ளது. (இதைப் பற்றி இலங்கை கண்டி தலதாவிற்கு பயணம் செய்து அங்கிருந்தே பதிவுகள் எழுதியிருக்கிறோம் நாம் முன்பு)
புத்தரின் ஓர் எலும்பு சாரநாத்தில் பேழையில் வைக்கப்பட்டுள்ளது என்று சொல்லி ஒரு கட்டிடத்தை காட்டுகிறார்கள். மக்கள் அந்த கட்டிடத்தில் வைக்கப்பட்டுள்ள புத்த பகவானின் சிலைக்கு தங்களது பிட்டத்தை காட்டியபடி மடத்தனமாய் செல்ஃபி எடுத்துக் கொள்கிறார்கள். இலங்கை விமானநிலையத்தில் ‘புத்தரோடு செல்ஃபி எடுத்தே, புத்தருக்கு உன் பேக்கை காட்டினே தலையிலயே போடுவேன் மவனே!’ என்றபடி நிற்கும் அந்த சிங்கள போலீஸை நினைத்துக் கொண்டேன்.
‘இந்தக் காட்டில் இங்கே எங்கேயோதான் புத்த பிரான் அமர்ந்து போதித்திருப்பார். இன்று காடாக இல்லை, ஆனால்… இங்கு எங்கோதான்! இங்கேயே வாழ்ந்திருக்கிறார்! பௌத்தம் தொடங்கியிருக்கிறது இங்குதான்!
அதே இடத்தில் நாமும் வந்து நிற்கிறோம்! புத்தபிரானே புத்த பிரானே ஞானம் கொடு!’
‘இந்த மரம் அந்த போதி மரத்தின் தொடர்ச்சியாம்! நாமும் தொடெவோமே!’
:பெரு நதியைத் தேடி – 2
– பரமன் பச்சைமுத்து
சாரநாத், வாரணாசி
24.08.2024
#Saranath #Varanasi #ParamanTouring #ParamanVaranasi #Kashi #Kasi #காசி #வாரணாசி #சாரநாத் #KingAsoka #அசோகர் #ParamanPachaimuthu #PeruNathiyaiThedi #Bhudda #Bhuddism #பெருநதியைத்தேடி