காசி விஸ்வநாதர் கோவிலின் நட்ட நடுவில் ‘சிவமயம்’ என்று தமிழில் உள்ளதாமே?
காசியில் இறப்பதற்காகவே விடுதிகள் உள்ளதாமே?
…..
பிறப்பு, இறப்பு தளைகளை அறுத்து முக்தி அடைய வேண்டுமானால் காசியில் இறக்க வேண்டும் என்ற நம்பிக்கையில் பாரதம் முழுவதிலிருந்தும் இறப்பதற்காக வாரணாசி வருகிறவர்கள் இன்னமும் இருக்கிறார்கள்.
விடுதலை வேண்டி காசியில் இறக்க விரும்பி வரும் மனிதர்களுக்கு உதவுவதற்காகவே சில தொண்டு நிறுவனங்கள் இயங்குகின்றன வாரணாசியில். ‘முக்தி பவனம்’ (டெத் ஹவுஸ்) அவற்றில் முதன்மையானது.
இறக்கும் தருவாயில் இருப்பவர்களுக்கு இடம் தந்தும், இறந்ததும் அவர்களை சடங்குகளோடு எடுத்துச் சென்று எரியூட்டி கரைப்பதற்கும் உதவுகின்றனர் இவர்கள். 14 நாட்களுக்கு மேல் இறக்கவில்லை என்றால் வெளியேற்றிவிட்டு வேறு ஒருவருக்கு இடம் தருகின்றனர்.
( ஐந்து நிமிடத்திற்கு 2 பிணங்கள் என்ற கணக்கில் சவங்களை தூக்கிப் போவதை தெருவில் கவனித்தோம். பார்க்க – காணொளி)
”கங்கையில் பிணங்கள் மிதக்கும்!’ ‘கங்கை அசுத்தமாகி விட்டது!’ என்றெல்லாம் சொன்னார்களே பரமன்! நீங்கள் எடுத்துள்ள படங்கள் வேறு மாதிரி உள்ளதே!’ என்ற கேள்வியை வைத்துள்ளார் லீலா.
அந்த கங்கை இப்போது இல்லை. பிணங்களை கங்கையில் விட அனுமதியில்லை. அவை இன்று முறைப்படுத்தப்பட்டுள்ளன. அரசின் புதிய கட்டுப்பாடுகளால் கங்கை பெருமளவு சுத்தமாக உள்ளது இப்போது.
….
சிங்கப்பூர் உருவாக்கத்தில் தமிழர்கள் இருந்ததைப் போல காசி விஸ்வநாதர் கோயில் வரலாற்றில் நகரத்தார்கள் எனப்படும் நாட்டுக்கோட்டை செட்டியார்கள் இருக்கிறார்கள்.
காசி விஸ்வநாதருக்கு
நாட்டுக் கோட்டை செட்டியார்களால் தினமும் பிரமாதமாக செய்யப்படும் ‘சம்போ’ எனப்படும் சேவை காலங்காலமாக தொடர்கிறது. அலகாபாத்தை (பிரயக்ராஜ்) பூர்விகமாக கொண்ட காசி விஸ்வநாதர் ஆலயத்தில் சேவை செய்யும் பிராமணர் ஒருவரிடம் பேச நேர்ந்தது. மிக அட்டகாசமான தமிழில் பேசிய அந்த மிஸ்ராவிடம் விசாரித்ததில், ‘நாட்டுக் கோட்டை செட்டியார்கள் செய்யும் சம்போ சேவையை கவனிக்கிறோம், 15 ஆண்டுகளாக பணி புரிகிறோம். அவர்களோடு தொடர்ந்து இருந்து இருந்து தமிழ் பேச கற்றுக் கொண்டேன்!’ என்று அவர் சொல்லக் கேட்டோம். நகரத்தார்களால் கோவிலின் உள்ளே தமிழ் வளமையாக இருக்கிறது.
இலவச தரிசனம், இணையதள பதிவின் மூலம் தரிசனத்திற்கு பதிவு செய்வது என்ற வகைகள் இருந்த போதும், நாட்டுக்கோட்டை சத்திரம் வழியே ‘சம்போ’ பாஸ் என்ற ஒரு வழியிலும் அனுமதி கிடைக்கிறது. ‘நாட் கோட் சம்போ’ என்கிறார்கள் இதை. தமிழகத்திலிருந்து வருகிறவர்கள் தரிசனத்திற்கு பயன்படுத்திக் கொள்கிறார்கள் விஸ்வநாதரை தரிசனம் செய்ய.
காசி விஸ்வநாதர் கோவில் வளாகம் திறந்த வெளியில் மார்பல் கற்கள் வேயப்பட்டு வெள்ளைவெளேரென்று அட்டகாசமாக உள்ளது. வெள்ளைக் கல் தரை, திறந்த வெளி, நீல வானம், நடுவே தங்கத்தில் கோயில் என்ற சூழலே உள்ளத்தை கொள்ளை கொள்கிறது.
(உள்ளே ஒரு மசூதியும் இருக்கிறது. படத்தை காண்க)
காசி விஸ்வநாதரை தரிசனம் செய்ய போகிறவர்கள் கவனத்திற்கு:
1. இணைய தள பதிவின் பிரிண்ட் அவுட்டை எடுத்துக் கொள்ளுங்கள்.
2. வெளியே நுழைவு வாயிலின் சிறு வரிசையில் நிற்கும் போதே பூசாரி இடைத்தரகர்கள் உங்களுக்கு திலகமிட்டு உங்களை ‘கான்டிராக்ட்’ எடுத்து உதவ முயற்சிப்பார்கள். கவனம்!
3. மொபைல் ஃபோன், பர்ஸ் தவிர மற்ற அனைத்தையும் உங்கள் அறையிலேயே வைத்து விட்டுச் செல்லுங்கள். செல்ஃபோன் வைக்கவும், செருப்புகளை வைக்கவும் உள்ளே லாக்கர் உண்டு. வேறு எதையும் உள்ளே அனுமதிப்பதில்லை சீருடை காவலர்கள். சிறிய ‘ஏர் பாட்’ கருவியை பாக்கெட்டில் வைத்துக் கொண்டு வருவோர் உள்ளே அனுமதிக்கப்படாததால் உள்ளேயும் போகமுடியாமல், வெளியேயும் வரமுடியாமல் அல்லலுற்றதை நிறைய பார்த்தோம்.
4. வரிசையின் வழியே சில நிமிடங்களில் தரிசனம் முடிந்தாலும், கோவில் வளாகத்திலேயே இருக்க விரும்புகிறவர்கள் வளாகத்திலே அமர்ந்து பெரிய திரையில் லைவ் வீடியோ பார்க்க அமைப்பு இருக்கிறது. கண்கள் மூடி தியானிக்கவும் செய்யலாம்.
5. வெளியே கடைகளில் விற்கப்படும் உத்திராட்ச மாலைகள், பனாரஸ் புடவைகளில் போலிகளே அதிகம், அதிகம்! கடைகளில் வாங்கி ஏமாற வேண்டாம். நன்கு தெரிந்த உள்ளூர்வாசிகளிடம் முன்பே விசாரித்துக் கொள்ளவும்.
….
வாரணாசியில் கண்டுணர நிறைய இருக்கிறது. ஒரு நாள் போதாது.
என் கனவு ‘காசியில் கங்கை ஆறு’ என்பதாக இருந்தது. உங்கள் தேடலைப் பொறுத்து வேண்டிய காலம் மாறும்.
முதுமையில் அல்ல, இளமையிலும் போகலாம் காசி எனும் வாரணாசிக்கு, பல காரணங்களுக்காக.
:பெரு நதியைத் தேடி – நிறைவுப் பகுதி
– பரமன் பச்சைமுத்து
வாரணாசி
25.08.2024
#Gangai #Ganges #கங்கை #Varanasi #ParamanTouring #ParamanVaranasi #Kashi #Kasi #காசி #வாரணாசி #DeathHouse #KashiVuswanath #காசிவிஸ்வநாதர் #ParamanPachaimuthu #PeruNathiyaiThedi #சிவன் #LordShiva #பெருநதியைத்தேடி