காடு, மலை, பள்ளத்தாக்கு… தேக்கடி’ – 4 : பரமன் பச்சைமுத்து

*4*

யானைகளைப் புரிந்து கொள்ளாமல் காட்டைப் புரிந்து கொள்ள முடியாது. யானைகளைப் புரிந்து கொள்கிறவன் காட்டைப் புரிந்து கொள்கிறான். காட்டைப் புரிந்து கொள்கிறவன் யானைகளை புரிந்து கொள்கிறான்.

யானைகளால் மனிதர்களும் மனிதர்களால் யானைகளும் இறந்து போன சம்பவங்கள் எல்லாக் காலங்களிலும் உண்டென்றாலும் யானைகளோடு மனிதர்களின் தொடர்பு ஆதிகாலம் தொட்டே இருந்து கொண்டுதான் இருக்கிறது.

யானை உருவத்தில் பெரியது, 4000 கிலோ எடை கொண்டது, ஆண் யானைக்கு களிறு என்று பெயர், பெண் யானைக்கு பிடி என்று பெயர், ஆசிய யானையில் (பெரும்பாலும்) ஆண் யானைக்கே தந்தம் உண்டு, ஆப்பிரிக்க யானையில் இரண்டுக்கும் தந்தம் உண்டு,
யானையின் கன்று பிறக்கும் போதே சராசரியாக 90 கிலோ எடை கொண்டிருக்கும், ஆண் யானைகள் தனியாகச் சுற்றிக் கொண்டிருக்கும், பெண் யானைகள்தான் குடும்பத்தோடு இணைந்து இயைந்து வாழ்ந்து வளர்த்தெடுக்கும் என யானைகள் பற்றி பல விவரங்கள் வைத்திருக்கும் நாம் யானைகளின் மிக முதன்மையான சங்கதியொன்றை பிரக்ஞையின்றி காற்றில் விட்டுவிடுகிறோம்.

யானைகள் காட்டில் வாழ்கின்றன என்பது தவறு, உண்மையில் யானைகளே காட்டை உருவாக்கிக் காக்கின்றன என்பதே சரி, இது முதன்மையான சங்கதியும் கூட.

சராசரியாக 70 ஆண்டுகள் வாழும் ஒரு யானை தன் வாழ்நாள் முழுக்க ஒவ்வொரு நாளும் காட்டை உருவாக்கிக் கொண்டேதான் இருக்கிறது. மந்த செரிமானம் கொண்ட யானைக்கு சாப்பிடும் மொத்தமும் செரித்து உடலுக்கு சேர்வதில்லையாம். உண்பதில் கிட்டத்தட்ட பாதி அப்படியே வெளியேறுகிறதாம். அதனால்தான் சராசரியாக ஒரு நாளைக்கு 160லிருந்து 200 கிலோ உண்ணுகிறதாம் ஒரு யானை.

யானை உண்ணும் பழங்கள், செடி கொடிகளில் இருக்கும் விதைகள் சரியாக செரிக்காமல் சாணத்தின் வழியே வெளியேறுவதால், அவை மறுபடியும் முளைத்து புதிய தாவரங்களை உருவாக்கி காட்டை கூடுதல் அடர்த்தியாக்குகின்றன. சராசரியாக 6 கிலோ மீட்டர் நடக்கும் ஒரு யானை ஒவ்வொரு நாளும் விதைகளை விதைத்து காட்டை உருவாக்குகிறது.

காட்டைப் படைத்து, சில யானைகளை அங்கே வைத்து, தாவரங்களை உண்ண வைத்து, செரிமானத்தை மந்தமாக்கி, விதைகளை அப்படியே போகுமிடமெல்லாம் விழ வைத்து புதிய காட்டை படைத்து காக்க தானியங்கி முறையில் ஓர் அட்டகாச அமைப்பை உருவாக்கியுள்ள இறைவனை நினைக்கையில் ‘இறைவன் மிகப் பெரியவன்!’ என்று உதடுகள் உச்சரிக்கின்றன.

இளையராஜா இசை கேட்க வந்த யானைக் கூட்டம் பற்றிய தகவல், ‘யானை டாக்டர்’ பற்றி ஜெயமோகன் கட்டுரை ஆகியவை எத்தனை முறை படித்தாலும் சிலிர்ப்பையே தருகின்றன எனக்கு.

இந்த தேக்கடி பெரியாறு புலிகள் காப்பகம் ‘ட்ரெக்கிங்’கில் எனக்கு காட்டு யானைகள் மேலும் வியப்பைக் கூட்டின.

சில மரங்களில் ஒரு குறிப்பிட்ட உயரம் வரை ஒரு படலம் மண் இருப்பதைக் கவனித்தோம் (பார்க்க படம்). கவனித்து விசாரித்ததில் தெரிய வந்தது.

‘யானைகளோட தோலுங்க தடிமனான தோலா இருந்தாலும் அது நல்ல மென்மையான தோலு!’

(சில ஆண்டுகளுக்கு முன்பு பொள்ளாச்சி டாப்ஸ்லிப் அருகில் வேட்டைக்காரன்புதூரில் தங்கியிருந்த போது மலர்ச்சி மாணவர் சதீஷ் கவுண்டர் எங்களை எச்சரித்தது நினைவுக்கு வந்தது, ‘ராத்திரியானா காட்டுக்குள்ள கொசு கடிக்குது. கொசிக்கடியுலேருந்து தப்பிக்க யானைங்க ராத்திரில ரோட்டுக்கு வந்து நிக்கும்ங்க. இந்த ஏரியாவுல்லாம் நைட்ல ட்ரைவ் பண்ணக்கூடாதுங்க!’)

‘ஓ… கொசு கடி தாங்காதுங்க!’

‘ஆமாம்! சுட்டெரிக்கும் வெய்யிலும் தாங்காது. கொசுக்கடியும் தாங்காது. அதனால குளிச்சிட்டு வந்ததும் உடம்பு மேல மண்ணை வாரி போட்டுக்கும்.’

‘ஓ! ஒரு படலம் மண்ணு உடம்பு மேல. மனுசங்க சன் ஸ்க்ரீன் லோஷன் போட்டுக்கற மாதிரி யானைங்க மண் ஸ்கிரீன் லோஷன் போட்டுக்குதுங்க!’

‘ஆமாம். உடலில் தோலில் அரிப்பு வரும் போது, இப்படி மரங்களில் வந்து தேய்த்துக் கொள்கின்றன. அதனால்தான் இந்த குறிப்பிட்ட சில மரங்களில் குறிப்பிட்ட உயரம் வரை மண் படலமாக பூசப்பட்டு இருக்கிறது’

100 ஆண்டு இலவங்க மரம், சாம்பிராணி மரம் என மரங்களைக் கடந்து காட்டைக் கடந்து மேலே தெரிந்த மேட்டை நோக்கி ஏறியதும்….

‘அங்கே தெரியுது பாருங்க, அதுதான் சபரிமலை!’

‘ஓ!்அதுவா?’

‘அது மகரஜோதி ஏத்தற பொன்னம்பல மேடு, அந்த பக்கம் இருக்கறது புல் மேடு. நடவுல தெரியறது சபரிமலை!’

‘அந்த பில்டிங்கல்லாம் தெரியுதே! ஓக்கே…’ (பைனாகுலரில் பார்க்கிறோம்)

‘ஓ… அது சபரிமலை நடை மேடையா? சபரிமலை போகாமலே சபரிமலை பாத்துட்டோம்!’

(‘டூர் கைடு’ தனது பைனாகுலர் வழியே நமது ஃபோனிலிருந்து சபரிமலை படத்தை கவனிக்கவும்)

‘அப்படீன்னா, ஐயப்பன் புலி பால் எடுக்க ஒரு காட்டுக்குப் போனாரே, அதுவும் பக்கத்துலதான் இருக்கா?’

‘அந்த காட்டுலதான் நீங்க இப்ப வந்தீங்க! அந்த காட்டுலதான் இவ்வளவு நேரம் இருந்துட்டு மேல ஏறி வந்தோம்!’

சபரிமலை நோக்கி கை கூப்பினோம்!

( அடுத்த பதிவோடு நிறைவடையும்)

: ‘காடு, மலை, பள்ளத்தாக்கு… தேக்கடி’ : பகுதி – 4

– பரமன் பச்சைமுத்து
பெரியார் புலிகள் காப்பகம்,
தேக்கடி
01.02.2025

#ParamanTouring #ParamanLifeCoach #பரமன்பச்சைமுத்து #ParamanLifeCoach #ParamanPachaimuthu #தேக்கடி #Thekkady #Periyaru #periyarlake #Tiger #Elephants #PeriyarNationalPark #KeralaTourism #Westernghat #GaviForest #GaviTrek

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *