*5*
ஒவ்வொருவருக்கும் வேறு வேறு விருப்பங்கள் உண்டுதானே! காடும் மலையும் மலையேற்றமும் ஈர்த்த அளவிற்கு துடுப்பு படகில் செல்வது ஈர்க்கவில்லை எங்களை. குழந்தைகள் கொண்டாடுவார்கள்.
பத்தனம்திட்டா மலைப்பகுதியிலிருந்து ‘ட்ரெக்கிங்’ முடித்து கவியாறு கேரள அரசு சுற்றுலா மையம் வந்ததும் துடுப்புப் படகில் அழைத்துப் போனார்கள்.
படகில் பயணித்ததை விட படகில் பயணித்த போது சூழலில் இருந்த காட்டு அமைதியும் அவ்வப்போது கூவிய மரங்கொத்தியின் குரலும் (அதற்கு எதிர்க்குரல் வருகிறது வேறொர் இடத்திலிருந்து வேறொரு மரங்கொத்தியிடமிருந்து. ‘அதெல்லாம் வர முடியாது, நான் கோவிச்சிட்டு வந்துட்டேன். அம்மா வீட்டில இருக்கேன் போய்யா!’ என்கிறதோ!), ‘நீ பாட்டுக்கு அந்தப் பக்கம் போ!’ என்ற கணக்கில் எங்களை கண்டுகொள்ளாமல் சிறகை விரித்து வெய்யிலில் உலர வைத்துக் கொண்டிருந்த நீர்க்காக்கை, செங்கால் நாரை, சிறுவன் எவனோ வண்ணம் பூசியது போல மஞ்சள் வண்ண கால்கள் பழுப்பு காப்பி கருப்பு வெள்ளையால் கோடு போட்டு அடித்தது போல் உடல், ஆரஞ்சு வண்ண அலகு என இருக்கும் ஆட்காட்டி குருவிகள் ஆகிய புள்ளினங்கள் தந்த அனுபவங்களும் அட்டகாசமானவை.
‘சார், இங்கல்லாம் எறங்கக் கூட கூடாது, பேசக் கூடக் கூடாது. காடு, விதி!’ என்றார்கள் வண்டியில் ஏற்றிய போது. புலியும் சிறுத்தையும் யானைகளும் திரியும் காட்டின் நடுப்பகுதியில் வெறும் ஒரு பாலித்தீன் கவரை மேலே கூரையாக குச்சியில் கட்டிவிட்டு அதனடியில் குடும்பம் நடத்திக் கொண்டிருந்த பழங்குடி இன குடும்பம் ஒன்றைக் கண்ட போது என் வாய் தானாகப் பிளந்தது. ‘இது என் காடு, காலங்காலமாய் என் இடம், காட்டின் பல பகுதிகளுக்கு மாறிக் கொண்டேயிருப்பேன். விலங்குகளோடு இயைந்து வாழ்வோம் நாங்கள்!’ என்ற கணக்கில் வாழ்கிறார்கள். அவர்களது சிறு குழந்தையொன்று தனியே திரிந்து கொண்டிருந்தது! கேரள அரசு இந்த இன மக்களுக்கு அந்தக் காட்டுப்பகுதியில் முன்னுரிமை தருகிறதாம்.
தேக்கடி மலை, காடு, நீர்நிலை, பள்ளத்தாக்கு என இயற்கையில் திளைத்துக் கிடக்க நிறைய தந்தது, நிறைய கற்றலை நிறைய அனுபவங்களை தந்தது. கேரள களரி நிலையத்திற்கு சென்று கேரள மண்ணின் அசல் களரிப்பயட்டு, கதகளி ஆகியவற்றையும் கண்டு களித்தோம். எழுவதற்கு இன்னும் எவ்வளவோ இருக்கிறதென்றாலும், எங்காவது ஒரு புள்ளியில் இதை நிறுத்தி நிறைவு செய்ய வேண்டும்தானே.
சென்னை வந்து பணிக்கு திரும்பி விட்டோம்.
தேக்கடி செல்ல விரும்புகிறவர்கள் கவனத்திற்கு: எனது முந்தைய ‘கூர்க்’ பயணக் கட்டுரையைப் படித்து விட்டு உடனே காரை எடுத்துக் கொண்டு தடாலென கிளம்பிய ரகுவைப் போல புறப்படாமல், கொஞ்சம் திட்டமிடுங்கள்.
முன்பே திட்டமிட்டால் நல்ல விடுதிகளில் நல்ல பயண ஏற்பாடுகளோடு நல்லனுபவம் பெறலாம். கேரள சுற்றுலாக் கழகத்தின் பெரியாறு புலிகள் காப்பகத்திலேயே கூட தங்கும் கூடாரங்கள் வசதிகள் உள்ளன. அரசு ஏற்பாடு, ஆனால் காட்டுக்குள்ளேயே விலங்குகளை பார்ப்பதற்கு முதன்மை ஏற்பாட்டாளர்கள் இவர்கள்தான். நாம் காட்டுக்கு வெளியே கிளப் மகிந்திராவில் இருந்து கொண்டு இவர்களிடம் பதிவு ஏற்பாடுகள் செய்து கொண்டோம்.
காடுகளை பார்க்க வேண்டும், வாகனத்தில் ‘சஃபாரி’ போதும் என்பவர்கள் விரும்பியபடி காலணியோடு போகலாம். காட்டுக்குள் ‘ட்ரெக்கிங்’ போக வேண்டும் என்று விரும்புகிறவர்கள் ‘ஸ்போர்ட்ஸ் ஷூ’ கொண்டு போகவும்.
அடுத்த பயணத்தில் தொடர்வோம்! நன்றி!
வாழ்க! வளர்க!
– நிறைவு பெற்றது
: ‘காடு, மலை, பள்ளத்தாக்கு… தேக்கடி’ : பகுதி – 5
– பரமன் பச்சைமுத்து
சென்னை
03.02.2025
#ParamanTouring #ParamanLifeCoach #பரமன்பச்சைமுத்து #ParamanLifeCoach #ParamanPachaimuthu #தேக்கடி #Thekkady #Periyaru #periyarlake #Tiger #Elephants #PeriyarNationalPark #KeralaTourism #Westernghat #GaviForest #GaviTrek