நதி போல ஓடிக்கொண்டிரு… 

nathi-5

nathi-5

‘இறைவன் மிகப் பெரியவன்!’ என்று சொல்வது ஒரு நிலை. அதையே உள்ளூர உணர்வது வேறு நிலை. முன்னது உதடுகளில் உதிப்பது, பின்னது உள்ளத்தினுள்ளே உணர்வது. அந்நிலை வரும்வரையில் அதன் ஆழம் புரிவதில்லை. உணர்ந்ததாக எண்ணுபவர்கள் கூட அந்நிலை வரும்போதே அதன் உண்மை நிலை கண்டு ஆழம் கண்டு கசிந்துருகிப் போகிறார்கள்.
‘நான்… நான்… நான்தான்!’ என்றே பழகிய மனம் அந்நிலையில் அதிர்ந்து போகிறது அப்படியே உதிர்ந்து போகிறது. ‘என் உடல் போல எதுவும் இல்லை!’ ‘என்னைப் போல சிந்திக்க செயல்பட எவராலும் முடியாது!’ ‘நான் பிஸ்த்தா!’ ‘நான் யாரு தெரியுமா!’ ‘என் லெவல் என்ன!’ என்றெல்லாம் கர்வம் கொள்ளும் மனிதன் ஒரு நாள் ‘நான் ஒன்றுமே இல்லை!’ ‘நான் மிகச் சிறியவன்!’ என்று உணரும் நிலை வரும்போது செயலற்று நிற்கிறான். இந்நிலை சீக்கிரம் பெற்றவர்கள் தெளிவு பெற்று மாறிப் போகிறார்கள்.

வானை முட்டிய பேருருவம் கொண்ட புத்த பகவானைக் கண்கள் திறந்து கண்டதும் அப்படியொரு நிலை ஏற்பட்டது மத்வ மைந்தனுக்கு.  விழிகள் விரிய அண்ணாந்து பார்த்தான். புத்த பகவானின் தலை நீல வானத்தில் இருந்தது. அருகிலிருக்கும் கடலிலிருந்து நீர் சுமந்து கொண்டு போகும் மேகங்கள் அவரது தலையைத் தடவி மகிழ்வாய் போயின.

‘ஆ…’ என்று அனிச்சையாக திறந்த அவனது வாய் ‘எவ்வளவு பெரிய புத்தர்!’ என்று கூட சொல்லமுடியா நிலையில் கிடந்தது. ‘நான் எவ்வளவு சிறிய துரும்பு!’ என்று எண்ணம் வந்து செயலற்று நின்றான். ‘இறைவா… இறைவா…எங்கும் நிறைந்த என் இறைவா… எவ்வளவு பெரியவன் நீ.’  மனம் கதறத் தொடங்கியது, கண்ணில் நீர் பெருகியது.

‘இறைவா.. எங்கும் நிறைந்த என் இறைவா! நான் நான் என்கிறேனே, நான் என்பது என்ன? இந்த உடலா? இந்த உடலின் உள்ளிருக்கும் ஒரு உறுப்பைக் கூட என்னால் இயங்க வைக்க முடியாதே. என் உடலில் ஒரு முடியைக் கூட என்னால் வளரவைக்க முடியாதே! நாடி, நரம்பு, ரத்தம், சதை என்று எதுவுமே எனது இயக்கத்தில் இல்லையே. எல்லாம் நான் செய்கிறேன், நான் செய்கிறேன் என்று நின்றேனே. என் உடலுக்குள் இருக்கும் உள் உறுப்பு ஒன்றைக் கூட என்னால் இயக்க முடியாதே! இறைவா! நான் ஒரு சக்தியும் இல்லாதவன்! துரும்பு… துரும்பிலும் துரும்பு!’

மத்வ மைந்தன் கண்ணில் நீர் பெருக கதறினான். கதறல் அதிகமாகி வாய் விட்டழுதான். எல்லாமும் இறைவன் செயல் என்ற நிலை வரும்போது சுற்றத்தைப் பற்றி, சுற்றியிருப்போர் பற்றி கவலை கொள்வதில்லை மனிதன். சுற்றியிருப்போர் பற்றி கவலையின்றி கதறியழுதான் அவன்.

‘என்னை மாதிரியே ஆம்பளப் புள்ளப் பெத்திருக்கேன் பாத்தியா? எப்புடி?’ என்று பீற்றிக் கொள்கிறோமே! ஐயோ, பிறப்பதும் பிறக்காததும் உன் செயல் அன்றோ! எல்லாம் சரியாக இருந்தும் சிலருக்கு ஏன் பிறப்பதில்லை என்பதற்கான காரணங்களை ‘இதுதான்!’ என்று அறிவியலால் அறுதியிட்டு கூற முடிவதில்லையே! இது ஆண் இது பெண் என்று வயிற்றிலிருக்கும்போதே ஊடுருவிப் பார்க்கும் அறிவியலால் ஆண் பிறக்க செய்ய வேண்டியது இதுதான் என்று சொல்ல முடியவில்லையே! ஆணாகப் பிறப்பதும், பெண்ணாகப் பிறப்பதுவும் உன் கையிலல்லவா இருக்கிறது!’

‘இந்த பிறவி எனக்கு அளிக்கப் பட்டது. இந்த கல்வி எனக்கு கொடுக்கப் பட்டது. அதனால் இந்த வேலை எனக்குக் கொடுக்கப்பட்டது. இதில் எங்கே நான் பெரியவன், நீ பெரியவன். வேலையை செவ்வனே முடித்துவிட்டு அடுத்த நிலையை நோக்கியல்லவா நகர வேண்டும் நான்! நான் பெரியவன் என்று காட்டும்போது உன்னால் படைக்கப்பட்ட ஒருவனை நீ சிறியவன் என்று இகழ அல்லவா வேண்டியிருக்கிறது. இறைவா… நீதான், நீதான்… நீ மட்டும்தான் பெரியவன்!’ கண்கள் ஆறாய் பெருகி ஓட நிலை மறந்து நின்றான் மத்வ மைந்தன்.

‘கொன்னிச்சிவா…’  ‘சயனோரா’ என்று தூரத்தில் யாரோ பேசும் சத்தங்கள் கேட்டதில் தன்னிலைக்கு திரும்பினான். ‘திஸ் ஈஸ் பிக் புத்தா ஆஃப் காமகுரா எரா, த இம்பார்டன்ட் பீரியட் ஆஃப் ஜப்பான்’ என்று யாரோ சுற்றுலா வந்த யாருக்கோ சொல்லிக் கொண்டிருந்தார்கள். ‘நாம் ஜப்பானில் இருக்கிறோம்!’ என்று நினைவு வரப் பெற்றவனாக மறுபடியும் புத்த பகவானைப் பார்த்தான்.

‘எவ்வளவு பெரிய புத்தர்! அவரது முகம் மட்டுமே ஆறு அடியாம். முகம் மட்டுமே என்னைவிட உயரம். உட்கார்ந்த நிலையின் மொத்த உயரம் நாற்பத்து நான்கடி. அடேயப்பா! கண்கள் மூடிய நிலையில் தியானத்தில் இருக்கும் புத்தர். எந்த சலனமும் இல்லாத, சலனங்களைக் கடந்தவருக்கே இப்படியொரு மலர்ச்சி இருக்கும் முகத்தில். அந்த மலர்ச்சியை சிலையில் கொண்டு வந்தவன் எப்பேர்ப்பட்டவனாக இருப்பான்.’

‘நூற்றாண்டுகளைக் கடந்து நிற்கும் இந்த புத்தரை யாரெல்லாம் வந்து பார்த்திருப்பார்கள்.  இங்கே கூரையெல்லாம் இருந்ததாம், நிலநடுக்கம், சூறாவளி, சுனாமி என பல இயற்கை சீற்றங்களால் எல்லாம் போய் வானமே கூரையாகக் கொண்ட புத்தர் மட்டுமே இருக்கிறார் இன்று’

எவ்வளவு நேரம் அங்கே கண் மூடி அமர்ந்திருந்தான், எவ்வளவு நேரம் கண் திறந்து புத்தரை விழுங்கினான் என்று கணக்கில்லாமல் இருந்தவனுக்கு திடீரென மாலை அலுவலக சந்திப்பு இருப்பது நினைவுக்கு வந்தது.

புத்த மதப்படி வணங்கும் முறை என்ன என்பதைப் பற்றியெல்லாம் கவலைப் படாமல், தனக்குத் தெரிந்தபடி நெடுஞ்சாண்கிடையாக நெற்றி நிலம் பட விழுந்து வணங்கினான். கண்மூடி அப்படியே சில நிமிடங்கள் கிடந்தான். மெதுவே எழுந்து புத்தரைப் பார்த்தான். கை எடுத்து கும்பிட்டான். காமகுரா ரயில்வே ஸ்டேஷனை நோக்கி அவன் கால்கள் நடந்தன. கைகள் செல்லிடப் பேசியை தேடி எடுத்தன.

அவனது தலைமை அலுவலகத்திலிருந்து அவனை இந்தியாவிற்கு திரும்பச் சொல்லி அழைப்பு விடுத்திருக்கிறார்கள் என்பது தெரியாமலேயே அவன் இந்தியாவிலிருக்கும் சிவநெறித்தேவனுக்கு எண்களை அமுக்கி அழைப்பு விடுத்தான்.

………………….

‘செரவி… செரவி…’ என்று காட்டை நோக்கி கிளம்பிய சிவநெறித்தேவன் மைசூரை நெருங்கியதும் ‘சாமுண்டி மலையில் ஏறிவிடுவோமா? இங்குதான் அந்தக் காலத்தில் ஜக்கி வாசுதேவ் பாம்பெல்லாம் பிடித்தாராம், மரங்களில் தொங்கினாராம்!’ என்று வண்டியை நிறுத்தினான். ஒரு தேநீரை உறிஞ்சியதும் தேடல்  தீவிரமடைய ‘கசவர்களை நோக்கிப் போவோம், குரும்பர்களைப் போய் பார்ப்போம்’ என்று சொல்லிக்கொண்டே காட்டை மாற்றிவிட்டான்.

மைசூர் நகரைக் கடந்து மேலே ஏற ஏற காற்று மாறியது. மூச்சில் காட்டின் வாசம் முட்டியது. பச்சைப் பசேலென்று இருபக்கமும் காடும் நடுவே கறுப்புப் பாம்பாய் ஊர்ந்து செல்லும் சாலையும் கண்ணைப் பறித்தது. வகைவகையாய் பெயர்தெரியா மரங்களை பார்த்து அதிசயித்துக் கொண்டே மெதுவாய் வண்டியை விட்டான். ‘மாசாணியம்மன் கோவில்’ என்ற அர்த்தத்தில் அழைக்கப்படும் ‘மசினகுடி’ வரை போவோம், அங்கே எங்காவது தங்கிக் கொண்டு காட்டின் உள்ளே பயணித்து கசவர்களை, குரும்பர்களை சந்திப்போம் என்ற அவனது எண்ணப்படி மெதுவாகவே ஊர்ந்தது அந்த வண்டி.

‘கசவர்கள் யானையைப் பற்றி அதிகம் அறிந்தவர்கள். யானைகளின் லத்திகளை பொறுக்கி எடுத்து அதை வேறு வேறு பயன்பாட்டிற்கு மாற்றுபவர்கள். ஒரு நாளைக்கு ஒரு யானைக்கு இருநூறு கிலோ உணவு வேண்டுமாமே. யானைகளைப் பற்றி அறிவோமே!’ என்றெண்ணியவாறே மசினகுடி நோக்கி ஊர்ந்தான். தூரத்தில் தெரிந்த அந்தக் காட்சியில் அவனது வண்டி மட்டுமல்ல, அவனது ரத்த ஓட்டம் கூட நின்றது.

அந்த நேரத்தில் அவனது செல்லிடப்பேசியில் சிங்கப்பூரிலிருந்து வந்த அழைப்பை அவனால் கவனித்திருக்க முடியாது. சிவநெறித்தேவனின் ரத்தம் நின்று போனது போலிருந்தது. தூரத்தில் நடப்பதைப் பார்த்து செய்வதறியாது நின்றான்.

பாதையின் மையத்தில் ஒரு பெரிய யானை இரு சக்கர வாகனத்தில் வந்த ஒரு மனிதனை துவைத்துக் கொண்டிருந்தது.

(தொடரும்)

‘வளர்ச்சி’ மாத இதழில் நான் எழுதிக் கொண்டிருக்கும் “நதி போல ஓடிக் கொண்டிரு…” கதை+தன்னம்பிக்கைத் தொடரிலிருந்து.

Www.ParamanIn.com

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *