கோ மாதாவாம்… குல மாதாவாம்…

பசு

பசு

‘அய்யே… அறிவு இல்ல உனக்கு? ஒழுங்கா தின்னுட்டு ஒழுங்கா வாழ மாட்ட நீ? இப்படி வீணடிச்சு வச்சிருக்க, அறிவு கெட்ட ஜென்மம்! எப்படிதான் வாழப் போறயோ நீ? சிரிப்பா சிரிக்க போவுது உன் கதை.’

இது மனிதர்கள் மனிதர்களிடம் சொல்லும் அறிவுரை என்றுதானே நினைத்தீர்கள்.  இல்லை.  மாட்டிடம் சொல்லப் பட்ட அறிவுரை அது. ‘என்னது, மாட்டிடம் மனிதன் பேசுவானா? அறிவுரை வேறு சொல்வானா?’ என்கிறீர்களா? அதற்கு எனது பாட்டியைப் பற்றித் தெரிந்திருக்க வேண்டும் உங்களுக்கு.

வாசலை ஒட்டிய தாழ்வாரத்தில் படுத்திருந்தாலும் பாட்டிக்கு காது எப்போதும் வீட்டிற்கு பின்புறம் கொட்டகையில் கட்டப் பட்டிருக்கும் மாட்டிடமே இருக்கும். தன்னை மறந்து ஆழ்ந்து உறங்கும்போது தன் மீது எறும்பு ஏறினால் கூட தெரியாது, ஆனால் மாடு கத்தினால் தெரியும் அவருக்கு. பட்டென்று எழுந்து அடுத்த சில வினாடிகளில் மாட்டைத் தனது கைகளால் தடவி விட்டுக் கொண்டே என்ன ஏது என்று கண்டறிந்து கொண்டிருப்பார். 

அதிகாலை எழுவது முதற்கொண்டு இரவு படுக்கும் வரை மாட்டுக்கு தண்ணீர் வைப்பது, தவிடு வைப்பது, புண்ணாக்கு பருத்திக் கொட்டை வைப்பது, புல் அறுத்து வருவது, வைக்கோல் போரிலிருந்து வைக்கோலை உருவிவந்து மாடு உண்ணும் வகையில் வாகாக மாட்டின் கவணையில் நிரப்புவது என பாட்டியின் வாழ்வு மொத்தமும்  மாடு… மாடு…. மாடு என்று மாட்டை ஒட்டியே சுழலும்.

பாட்டி சோர்வாக இருந்தால் மாட்டிற்கு ஏதோ பிரச்சினை என்று அர்த்தம்.  காலின் குளம்புகளில் புண் வந்து புழு இருத்தல், செரிக்காமல் கழிதல், கோடையில் மேம்போக்காக வந்து பூமியை நனைத்து விட்டுப் போகும் மழையால் வரும் கோமாரி நோய் என மாட்டிற்கு எந்தப் பிரசினையானாலும் சோறு தண்ணி இறங்காது அவருக்கு.  துரைக்கண்ணு மாமாவையோ நாட்டு வைத்தியரையோ வரவழைத்து மொந்தம்பழத்தில் விளக்கெண்ணெய் வைத்துக் கொடுப்பது கல்யாண முருங்கையைத்  தின்னக் கொடுப்பது என எதையாவது செய்து கொண்டிருப்பார். 

பாட்டி உற்சாகமாக உலா வந்தால் மாடு ஆரோக்கியமாக இருக்கிறது என்று அர்த்தம்.  அவருக்கு மகிழ்ச்சி பொங்கிப் பீறிடுகிறதென்றால் மாடு சினை போட்டிருக்கிறதென்பதை ஊரே புரிந்து கொள்ளும்.  மாட்டைப் பார்த்துக் கொள்ளவேண்டும் என்பதற்காகவே வெளியூர் விழாக்களை பயணங்களைத் தவிர்த்து விடுவார் அவர்.

‘அய்யே… அறிவு இல்ல உனக்கு? ஒழுங்கா தின்னுட்டு ஒழுங்கா வாழ மாட்ட நீ? இப்படி வீணடிச்சு வச்சிருக்க, அறிவு கெட்ட ஜென்மம்! எப்படிதான் வாழப் போறயோ நீ? சிரிப்பா சிரிக்க போவுது உன் கதை.’  ‘என் செல்லம், நீதான் நல்ல பொண்ணு!’ என்றெல்லாம் எல்லாநேரமும் மாட்டிடம் எதையாவது பேசிக்கொண்டிருப்பார்.  மாடு என்பது வெறும் கால்நடையல்ல, தனது சொந்தம் என்றே சொல்வார் பாட்டி.  ‘அதுக்கு வாயில்லை, பேசவராது. ஆனா, அதுக்கு நம்மோட அன்பு புரியும். அதுக்கு நான் பேசறது புரியும். மனுஷப் பயலுக்குத்தான் அன்பு புரியாது. அடுத்தவங்க மனசு புரியாது. என் மாட்டுக்கு எல்லாம் புரியும். காலை மாத்தி, வாலை தூக்கி, குரலை எழுப்பி காட்டும் போடா மனுஷப் பயலே!’ என்பார் பாட்டி.

என்றாவது ஒரு நாள் அடிவயிற்றிலிருந்து குரலெழுப்பி பசு மாடு கத்தும். இதுவரை கேட்டிராத சத்தமாக அது இருக்கும். பாட்டி தனது வெற்றிப் பெட்டியிலிருந்தோ சுருக்குப் பையிலிருந்தோ ரூபாய் நோட்டை எடுத்து யாரிடமாவது கொடுத்து யாருக்கோ செய்தி அனுப்புவார்.

கொஞ்சம் நேரம் கழித்தோ மதியமோ பக்கத்தூரிலிருந்து ஒருவர் ஒரு காளை மாட்டுடன் வருவார்.  திமிலும் கொம்புகளுமாய் இருக்கும் அந்தக் காளை, பூஜையறை படத்து ஈசன் அமர்ந்திருக்கும் விடையைப் போலவே இருக்கும். அந்த வயதில் அம்மாவோடு அதிகம் சிவாஜி படங்களைப் பார்த்திருந்தாலும், அந்த வெளியூர்க்காரர் கூட்டி வரும் காளைக்கு ‘எம்ஜார் காளை’ (எம்ஜிஆர் காளை) என்றே பெயர்வைத்தேன்.  (‘ஏய் எங்கூட்டுக்கு எம்ஜார் காளை வந்திருக்கு தெரிஞ்சுக்கோ!’ என்று என் சகவயது நண்பர்களிடம் பீற்றிக் கொள்வதில் பெருமை)

துரைக்கண்ணு மாமா, பூராயர் அண்ணன் எல்லாரும் சேர்ந்தது எங்கள் பசுமாட்டை பிடித்துக்கொள்ள, காளையோடு வந்தவர் தனது காளையை பசுமாட்டின் பின்புறம் ஏறச் செய்வார். என்ன ஏது என்று எதுவும் புரியாமல் வியப்பு மட்டுமே கூடிக் கொண்டே போக பார்ப்பேன்.

அவர்கள் எல்லாம் போன பிறகு மாட்டிற்கு தவிடு வைத்துவிட்டு தடவிக் கொடுத்துக் கொண்டிருப்பார் பாட்டி.

‘என்ன செஞ்சாங்க? எதுக்கு அது?’

‘இதுவும் ஒரு பொண்ணுதான! அது அடிவயித்துலேருந்து கத்துதுல்ல. அதுக்கு ஆசை வந்திருக்கு.  அதுக்கு பசிக்குது.  பசிக்கு உணவு போடணும் இல்லியா! அதான் காளை மாட்டை கூட்டி வந்து பசி தீக்கறோம். போடா!’ 

பசு மாட்டைக் கூட ஒரு சொந்தமாய் ஒரு பெண்ணாய் கருதி பேசி கட்டியணைத்து ஆசைகளைத் தீர்த்து வைத்து உறவு கொண்டிருந்த பாட்டி இறந்து போய் பல ஆண்டுகள் கடந்து விட்டன. பள்ளியை முடித்து கல்லூரி முடித்து பொறிஞனாக பிழைப்பிற்காக பல தேசங்கள் பல ஊர்கள் சுற்றி இப்போது மாகரில் வந்து குடி புகுந்து விட்டேன்.

சென்ற வாரம் ஒரு கருத்தரங்கிற்காக பயணித்த போது ஒன்றை பார்க்கவும் கேட்டறியவும் நேர்ந்தது. மனம் கதறியது.

அடி வயிற்றிலிருந்து கத்திய ஒரு பசு மாட்டிற்கு காளையைக் கொண்டு வராமல் ஒரு மாட்டு மருத்துவரை கொண்டு வருகிறார்கள்.  காளை மாட்டின் ஆண்குறியைப் போலிருந்த ஒன்றை மாட்டின் யோனிக்குள் செருகுகிறார்கள்.  அதற்குள் ஊசியை வைத்து வெளிநாட்டு மாட்டின் வீரிய விந்தை இறக்குவார்களாம்.  அவ்வளவுதான்.  இனி அது சினை பிடிக்கும்.  கன்று ஈனும்.  இவருக்கு பால் கிடைக்கும்.

மனிதர்கள்! மனிதர்கள்!

எம்ஜார் காளைகளை யாரும் வைத்துக் கொள்ளக் கூடாதாம். அப்படி வைத்திருந்தாலும் எந்தப் பசுவின் மீதும் ஏற விடக் கூடாதாம். அப்படி ஏறினால் மாட்டின் உரிமையாளரும் பசுவின் உரிமையாளரும் கைது செய்யப்படுவார்களாம். சட்டம் இருக்கிறதாம். மாட்டிற்கு அந்தப் பசி எடுத்தால் காளை மாட்டைக் கூட்டி வரக்கூடாதாம், மருத்துவர்தான் வருவாராம்.

மாடு அடிக்குரலெடுத்து கத்துவது வெறும் சினை கொள்வதற்கா? அதற்கு அந்தப் பசி வந்துள்ளது!  ஆண் குறி போன்ற ஒரு பொம்மையை செருகினால் ஆச்சா?  அதன் உணர்வுகளை வதை  செய்கிறோமே, இது கொடுமையில்லையா!  ஆண் பெண் என இரண்டையும் மாடுகளில் படைத்த இயற்கை இதோடு அது சேர வேண்டும் என்றுதானே வைத்தது. அதற்கு இயல்பான அந்த பசி வரத்தானே செய்யும்.  ஆண்குறி பொம்மையாக்கி செருகி விட்டால் தீருமா அதன் இச்சை? இது பசுவதையில்லையா?

‘அதுக்கு வாயில்லை, பேசவராது. ஆனால், அதுக்கு நம்மோட அன்பு புரியும். அதுக்கு நான் பேசறது புரியும். மனுஷப் பயலுக்குத் தான் அன்பு புரியாது. அடுத்தவங்க மனசு புரியாது. என் மாட்டுக்கு எல்லாம் புரியும். காலை மாத்தி, வாலை தூக்கி, குரலை எழுப்பி காட்டும் போடா மனுஷப் பயலே!’ பாட்டியின் குரல் மண்டைக்குள் ஒலிக்கிறது.

‘கோமாதா எங்கள் குல மாதா… குல மாதர் நலம் காக்கும் குண மாதா’ எங்கோ தூரத்தில் ஒலிக்கும் பாடல் காற்றில் ஒலிக்கிறது.  எனக்கு அழுகை வருகிறது.  மாடுகளோடு வளர்ந்திருந்தால் மாடுகளைப் புரிந்திருந்தால் உங்களுக்கு என் அழுகை புரியும்.

 

: பரமன் பச்சைமுத்து

சென்னை

31.01.2016

 

Facebook.com/ParamanPage

1 Comment

  1. Veeraragavan

    பதிவு என் மனத்திரையில் காட்சிகளின் அணிவகுப்பை நிகழ்த்தி, காலத்தை 45 ஆண்டுகளுக்கு பின்புறமாக நகர்த்தியதுபோல் உள்ளது. ஆம் எங்கள் வீட்டிலும் பசுக்களை தொடர்ச்சியாய் வளர்த்த காரணத்தால் இந்தப் பதிவில் விவரிக்கப்பட்ட காட்சிகள் அனைத்தையும் அனுபவத்தில் உணர்ந்தவன். ஒரே ஒரு வித்தியாசம், நாங்கள் எங்கள் பசுவை காளைகள் வளர்ப்பவர்கள் இருப்பிடத்துக்கு அழைத்துச் செல்வோம், காளைகள் எங்கள் வீட்டிற்கு அழைத்து வரமாட்டார்கள் !

    நானும் இந்த தொடர்பை விட்டு 45 ஆண்டு காலம் ஆகிவிட்டது ! ……..ஆனாலும் தாங்கள் குறிப்பிட்டுள்ளது போல

    //எந்தப் பசுவின் மீதும் ஏற விடக் கூடாதாம். அப்படி ஏறினால் மாட்டின் உரிமையாளரும் பசுவின் உரிமையாளரும் கைது செய்யப்படுவார்களாம். சட்டம் இருக்கிறதாம். //

    உண்மையிலேயே அப்படியொரு சட்டம் உள்ளதா ?
    அப்படி இருக்குமானால் அதற்கான தகவல்களை பின்னூட்டமாக பதிவிட்டால், அது களையப்பட தேவையான சட்டப்பூர்வ நடவடிக்கையை எடுக்க நான் வழக்குரைஞர்கள் ஆலோசனையுடன் முயலுகிறேன்.

    Reply

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *