ஒரு குளத்தின் கதை

அல்லிக் கொடிகளால் நிறைந்திருக்கும் பாப்பாக்குளம். அந்தக் குளத்தையும் சேர்த்து மொத்தம் ஐந்து குளங்கள் இருந்தாலும், மணக்குடியைப் பொறுத்தவரை குளமென்றால் இருப்பதிலேயே பெரிதாக இருந்த பாப்பாக்குளம்தான்.

குளத்தின் தென்கிழக்கு மூலையில் பிள்ளையார் கோவில் பின்புறமுள்ள அரசமரத்தையொட்டி ஒரு படித்துறை இருக்கும். தென்மேற்கு மூலையில் ஆலமரத்தையொட்டிய மற்றொரு படித்துறையும் உண்டு. ஆலமரத்துத்துறை என்று அதற்கு பெயர் என்றாலும், ஊரின் இறப்பு கருமாதி போன்ற காரியங்கள் அங்குதான் நடத்தப்படும் என்பதால் அதற்கு கருமாதித்துறை என்றொரு பெயரும் உண்டு. இறந்தவரெல்லாம் கருமாதி முடிந்து கருமாதித்துறையின் ஆலமரத்திலும் அதனெதிரே நிற்கும் ஒற்றைப் பனை மரத்திலும் இருப்பதாக எண்ணி அந்த இடத்தைத் தனியே கடக்க சிறுவர்கள் அஞ்சி நடுங்குவார்கள் அல்லது பின்னங்கால் பிடரியில் அடிக்க ஓடுவார்கள்.

குளத்தின் வடகிழக்கு மூலையில் வாய்க்காலிலிருந்து குளத்திற்குள் நீர் வரும் அமைப்பு. அங்குதான் எப்போதும் நாகராசும் பன்னீரும் தூண்டில் போட்டு கெண்டை, கெழுத்தி மீன்களை வெட்டியிழுப்பார்கள். குளத்தின் வடமேற்கு மூலையில் குளத்திலிருந்து நீர் வெளியேறி வயல்களை நோக்கிப் போகும் வடிகாலில் கலக்கும் அமைப்பு.

மொத்த மணக்குடிக்கும் அந்தக் குளம்தான் எல்லாமும். பெரும்பாலான மக்கள் படித்துறையில் வந்து குளிப்பார்கள். ஆளவந்தாரும் நானும் குளத்து மேட்டிலிருந்து வருவோம். கருணாகரன் மாமாவும், சரவணனும், ராஜவேல் சித்தப்பாவும் கிழக்கே காய்ச்சார் மேட்டிலிருந்து வருவார்கள். படித்துறையில் ஒன்றாய் சேர்ந்து கும்மாளம் அடிப்போம். படித்துறையின் ஐந்தாவது படியிலிருந்து தண்ணீருக்குள் குதித்தால் ‘அவன் வஸ்தாது’ என்று சிறுவர்கள் கருதிய போது ஏழாவது படியிலிருந்து குதிக்கக் கற்றேன் நான். கருணாகரன் மாமாவைப் பார்த்து உற்சாகமாகி அவரைப் போலவே ‘பல்டி’ (சோமர்சால்ட்) அடிக்கக் கற்றுக் கொண்டேன் அவரிடமே. எவ்வளவு நேரம் குளித்தாலும் கும்மாளமிட்டாலும் எவரும் கேட்கமாட்டார்கள், ‘ஏய்… எவ்ளோ நேரண்டா குளிப்பீங்க. படவா, ஏறுங்கடா மேல!’ என்று எவரேனும் குரல் உயர்த்தினால் எல்லோரும் மேலேறுவர் என்ற எதிரெதிர் தன்மைகள் கொண்டது கும்மாளக் குளியல் பாப்பாக்குளத்தில்.

இரண்டு படித்துறைகளின் குளிக்கும் சொற்ப இடங்களைத் தவிர மொத்த குளமும் அல்லி இலைகளாலும்அல்லிக் கொடிகளாலும் போர்த்தப்பட்டிருக்கும். வெள்ளத் தனைய மலர் நீட்டம்’ ‘நீரின் ஆம்பலும்’ எல்லாம் படிக்கும் முன்னேயே நீரின் மட்டத்தில் இருக்கும் வெள்ளை அல்லி மலரை அதன் அடியில் பாம்பு போல வழவழவென்று இருக்கும் கொடியை அறிந்து கொள்வார்கள் மணக்குடியின் சிறுவர்கள். நீந்திப் போய் அல்லி மலரைக் கொய்வதும், அல்லிக் காய்களை் பறித்து வந்து உடைத்து உண்பதும், நீரில் மூழ்கி சேற்றின் அடியில் இருக்கும் அல்லிக் கிழங்கை தோண்டியெடுத்து வருவதும் அவரவர் நிலைக்கேற்ற சாகசங்கள் அவ்வயதில். எதிர்வீட்டு சூர்யாவின் தம்பி நீருக்குள் நீந்துகையில் கொடிகளில் சிக்கியே மூச்சிழந்து உயிர் விட்டான்.

அல்லி படராத இடம் மனிதருக்கு, அல்லிபடர்ந்த இடம் மீன்களுக்கும் தண்ணீர்ப்பாம்பிற்கும் என ஒரு விதி கொண்டே இயங்கியது பல்லுயிர் வாழ்க்கை பாப்பாக்குளத்தில். சில்வர் கெண்டைகளும், ரோகு வகைகளும் அப்போதெல்லாம் கெடையாது. விரால், கெண்டை, கெழுத்தி வகை மீன்கள் அடியாழத்தில் உலவும். குட்டி விரால் மட்டும் வாய் பிளந்து காற்று விட மேலே வந்து நீல நிற மீன்கொத்தியிடம் மாட்டிக் கொள்ளும். சின்னஞ்சிறு பொடி மீன்கள் கூட்டமாக நாம் குளிக்கையில் நம்மைக் கடந்து போகும்.

கொக்கு, செங்கால் நாரை, நொள்ளாமடையான், மீன் கொத்தி ஆகிய பறவைகளுக்கும், தண்ணீர்ப் பாம்பு, தவளை, ரத்தம் உறிஞ்சும் அட்டை, பல வகை மீன்கள், நீரில் மிதக்கும் ஆகாயத்தாமரை, அல்லிக் கொடி என பல உயிர்களின் சீவனை ஊற்றிக் காத்து வளர்த்தது பாப்பாகுளம்தான்.

பழமலை உடையார் வீட்டில் இருந்த எண்பது மாடுகள், ரெங்கநாதய்யர் வீட்டில் நூறு மாடுகள் என ஊரில் இருந்த எல்லா மாடுகளும் குளத்து நீரையே குடித்து வாழ்ந்தன. மணக்குடியின் பல வீடுகளுக்கு குளத்து நீரே குடிநீராக இருந்தது. அல்லி இலைகளுக்கு அருகே தெளிந்து இருக்கும் நீரை பானையில் மொண்டு போய் காய்ச்சிக் குடிப்பார்கள்.

முப்பது ஆண்டுகளுக்கு முன்பு வந்த ஒரு வறட்சியில், தண்ணீர்ப்பஞ்சம் தலைவிரித்தாடியது. குளிப்பதற்குக் கூட தச்சக்காட்டு ஐயனார் கோவில் வரை போய் கை பைப்பில் அடித்துக் குளிக்க வேண்டிய நிலை வந்தது.

குடம் குடமாய் நீர் சுமந்து பெண்கள் இடுப்பொடிந்து போன அந்தக் காலத்தில், அது வரை பார்த்தேயிராத ஒரு பெரிய வண்டியொன்று மணக்குடிக்கு வந்தது. சிறுவர்கள் எல்லாம் ‘ஹோ’வென்று கத்தியபடி வண்டியின் பின்னே ஓடினோம். ‘தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம்’ என்று எழுதப்பட்ட அந்த வண்டிக்கு ‘ரிக்’ என்று பெயர் சொன்னார்கள்.

வித்தியாசமாக தோலின் வண்ணம் கொண்ட வட நாட்டு ஆசாமிகள் சிலர் இறங்கினர். வண்டியையோட்டி வந்தவர் கன்னங்களை மறைக்குமளவிற்கு பெரிய மீசை வைத்திருந்தார். புவனகிரியில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தில் டைப்பிஸ்டாக இருந்த முத்தையன் சித்தப்பா ‘மாரி அண்ணே..’ என்றபடி அவரிடம் போய் பேசினார். ‘பெரியவனானதும் மாரியண்ணன் மாதிரி மீசை வச்சிக்கனும்’ என்று நினைத்துக் கொண்டேன் அப்போது ஏழாம் வகுப்புப் படித்த நான்.

குளத்தின் கிழக்கே பிள்ளையார் கோவிலருகில் ரிக் பூமியில் துளையிட்டு இறங்கியது. ஆத்தூரை சேர்ந்த மாரி அண்ணனும் வடவர்களும் இறங்கி வேலை செய்தார்கள். சில நாட்களில் எங்களூரில் இதுவரை பார்த்தேயிராத நீளத்தில் ஒரு கைப்பம்பு ஒன்று போடப்பட்டது. இரவிலும் பகலிலும் அதிகாலையிலும் எப்போதும் அந்த பம்பு இயங்கிக் கொண்டேயிருந்தது. தண்ணீர் பிடித்து சில அடி தூரத்திலேயே மக்கள் குளித்தார்கள்.

அமைச்சர் விவிசாமிநாதன் ஏற்பாட்டில் எம்ஜிஆரின் தன்னிறைவுத் திட்டத்தின் மூலம் முருகன் கோவிலுக்கு அருகில் தண்ணீர்த்தொட்டி கட்டப்பட்டு நீரேற்றும் மோட்டார் பொருத்தப்பட்டு, வீதிகளின் முனைகளுக்கு குடிதண்ணீர் வந்தது. அவரவர் வீதியில் குடத்தில் பிடித்து குடிக்கத் தண்ணீர் பெற்றது ஊர்.

பாப்பா குளத்தை மீன் வளர்க்கக் குத்தகைக்கு விட்டார்கள். மீன் வளர்க்க ஏதுவாக இருக்க, இடைஞ்சலாக இருந்த அல்லிக்கொடிகளை கிழங்கோடு பறித்து அழித்தார்கள். குத்தகைக்கு எடுத்த ஆளுங்கட்சி மாமா சிதம்பரத்திலிருந்து சில்வர் கெண்டை, ரோகு ஆகிய கலப்பின மீன் குஞ்சுகளை வாங்கி வந்து குளத்தில் விட்டார். அந்த மீன்கள் வளர்வதற்காக தினமும் மாலையில் யூரிவையும் இன்னும் சில ரசாயண தீனிகளையும் குளத்தில் வீசினார்கள். குளம் பாசிபிடித்து பச்சையாய் மாற, மக்கள் குளத்திலிருந்து மெதுவே விலகினார்கள். மாடு குளிப்பாட்டவும், மீன் வளர்க்கவுமே ஆனது பாப்பாக்குளம். குளத்தின் வடகிழக்கு மூலையில் இருட்டும் மாலைப் பொழுதுகளிலும் முன்னிரவுகளிலும் ஒருவருக்கும் தெரியாமல் நாகராசு தூண்டில் போட்டு சில்வர் கெண்டைகளை வெட்டியிழுத்துக் கொண்டிருந்தான். ஒரு நாள் யாரோ போட்டுக் கொடுக்க குத்தகை எடுத்தவரின் ஆட்களால் ரத்தம் வழியுமளவிற்கு நைய்ய அடித்து வீதியில் எறியப்பட்டான். ரத்தம் வழிய கெட்ட வார்த்தைகளை முணகிக் கொண்டு போன நாகராசைப் பார்த்து எல்லோரும் பரிதாபப்பட்டனர்.

கலைஞர் ஆட்சிக்கு வந்த போது வீதி முனை வரை வந்த நீர் இணைப்பு வீட்டுக்கு உள்ளும் கொடுக்கப்பட்டது. பாப்பாகுளம் குத்தகை எடுத்தவரின் மீன் வளர்ப்பிற்கென்றே ஆனது. மக்கள் குளத்தை விட்டு விலகிப் போனார்கள். நாகராசு, நீரேற்ற மோட்டர் போட்டு் தண்ணீர் தொட்டியில் மட்டம் பார்த்து நிறுத்தும், ஊருக்குத் தண்ணீர் விடும் வேலையை சில ஆண்டுகள் செய்தான்.

சில தன்னார்வலர்கள் வெகுண்டு எழுந்து ஊர் குளத்தில் மீன் வளர்ப்பை எதிர்த்துக் குரல் கொடுத்தார்கள். குளம் தூர்வாரப்பட்டு தாமரைக் கிழங்குகள் ஊன்றப்பட்டன.

பல ஆண்டுகளுக்கு முன்பே ரெங்கநாதய்யரும், பழமலை உடையாரும் இயற்கை எய்தி விட, சென்ற ஆண்டு தவறான பழக்கங்களால் ஆரோக்கியம் கெட்டு இளம் வயதிலேயே நாகராசும் இறந்து போனான்.

முப்பத்து நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, முத்தையன் சித்தப்பாவோடு தொடர்பிலேயேயிருந்த, திடீரென்று தொடர்பு கொண்ட ஆத்தூர் மாரியப்பன் அவர்களைச் சந்திக்க நேர்ந்தது இன்று. ‘இந்தாங்க, 600 ரூவா. வளர்ச்சி சந்தா முடியுது, ரினீவலுக்கு இது!’ என்றார் என்னிடம். ரிக் டிரைவர் பணியிலிருந்து ஓய்வு பெற்று பேரன் பேத்திகளை பார்க்க சென்னை எம்ஆர்சி நகர் வந்தவர், நம்மை அழைத்தார். ‘வளர்ச்சி’ இதழை தொடர்ந்து படிக்கிறாராம். அறுபத்துயிரண்டு வயதாம், அந்தப் பெரிய மீசையைக் காணோம் இப்போது.

மணக்குடிக்கு வந்த தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய ரிக் வண்டியும், அந்த அடி பம்பும், அல்லிகள் நிறைந்த பாப்பாக்குளமும் நினைவுக்கு வருகின்றன.

இன்று மணக்குடிக்கு வீடுகளின் உள்ளே நீர் இணைப்பு வந்துவிட்டது. ‘கேன் வாட்டர்’ கூட வந்து விட்டதாம். என் கண் முன்னே அல்லிக்குளமாயிருந்த பாப்பாக்குளம் இன்று தாமரைக்குளமாக மாறி விட்டடது.

நள்ளிரவு நேரத்தில் ஒரு சில ஆந்தைகள் அலறும் கணத்தில், இறந்து போன நாகராசு பாப்பாக்குளத்தின் அந்த வடகிழக்கு மூலையில் உட்கார்ந்து தூண்டில் போட்டு மீன் பிடிக்கிறானாம்.

: ஒரு குளத்தின் கதை

– பரமன் பச்சைமுத்து
சென்னை
02.08.2019

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *