‘என்னாது, சம்மர்ல காஃபி குடிக்கக் கூடாதா? அப்புறம்?’

wp-1618899909136.jpg

valarchi

Summer

கேள்வி: கோடையில் காஃபி அதிகம் வேண்டாம் என்று ஒரு முறை நீங்கள் சொன்னதாக நினைவு. குறைத்துக் கொள்ள வேண்டுமா, குடிக்கவே கூடாதா?

பரமன்: அடிப்படையை சொல்கிறேன். குறைத்துக் கொள்வதா, குடிக்கவே கூடாதா என்பதை நீங்கள் முடிவு செய்யுங்கள்.

கோடையில் வெப்பம் மிக உயர்ந்து நிற்கும். நம் உடலும் சூடாகும். சரியான வெப்பநிலையில் உடலை வைத்துக்கொள்வதற்காக வியர்வையை சுரந்து உடலை காக்கும் வேலையை செய்யும் நம் உள்ளுறுப்புகள்.

வியர்வை வெளியேற வெளியேற உடலின் நீர்ச்சத்துகள் தீரும். வெளியேறும் நீரின் அளவை விட நாம் உட்கொள்ளும் நீரின் அளவு அதிகமாக இருக்கவேண்டும். இது குறையும் போது உடல் நீர்ச்சத்து குறைபாட்டால் அல்லல் படுகிறது. இதன் விளைவாக செரிமான குறைபாடு, தலைவலி, கண்களில் நீர் வடிதல், மலம் இறுகி அதனால் வெளியேற்றுவதில் சிக்கல், கண் எரிச்சல், தற்காலிகமாக பார்வை மங்குவது போன்ற உணர்வு, முதியவர்களுக்கு உடல் முழுவதிலும் முக்கியமாக கை – கால் – தோள்பட்டையில் தசைகளில் வலி, சிலருக்கு தோல் கருத்துப் போதல், அதீத சோர்வு என பல உபாதைகள் அவரவர் உடல் தன்மையைப் பொறுத்து ஏற்படுகின்றன.

இவை நிகழாமல் இருக்க உடலின் நீர்த் தேவையை புரிந்து கொண்டு போதிய அளவு நீர் பருகவேண்டும்.

உடலின் நீர்ச்சத்தை அதிக அளவிற்கு எடுத்துக்கொள்ளும் அல்லது விரயமாக்கும் உணவுகளை தவிர்க்க வேண்டும் என்று கூறுவது இதன் அடிப்படியில்தான். கோழிக்கறி, காஃபி, காரக்குழம்பு போன்றவை (சித்த / ஆயுர்வேத மருத்துவத்தில் இவ்வகை உணவுகளை பித்தம் கூட்டும் உணவு என்று வகைப் படுத்துகிறார்கள்). அவற்றின் தன்மையால் கோடை கால சூழலில் செரிமானம் ஆவதற்கு நேரமும் எடுத்துக் கொள்ளும், உடலின் நீர்ச்சத்தில் நிறையவும் எடுத்துக்கொள்ளும். இதனால் நீரின்றி உடல் வறண்டும் உள்ளுறுப்புகள் சோர்ந்தும் போகலாம். ‘டீ ஹைட்ரேஷன்’ எனப்படும் நீர்ச்சத்து குறைபாடு மிக அபாயகரமானது. நீர்ச்சத்து குறைபாடு வந்தால் உடல் ஒரு வித பற்றாக்குறையில் விழும். அப்போது உடலில் ஏற்கனவே உறங்கிக் கொண்டு கிடக்கும் மற்ற நோய்கள் உசுப்பி விடப்படும். அதனால்தான், மிக சாதாரண நீர்ச்சத்து குறைபாடு கவனிக்காமல் விட்டால் மற்ற பிரச்சினைகளை கிளப்பி உயிரையே எடுக்ககூடிய அளவிற்கு கொண்டு போய் விட்டுவிடும் என்கிறார்கள் மருத்துவர்கள்.

(அதிக நேரம் அதிக தூரம் பயணம் செய்பவர்களையும், அதிகம் வியர்க்கும் முதியவர்களையும் ‘ஓஆர்எஸ்’ எனப்படும் உப்பு – சர்க்கரை தாது பானம் குடிக்கச் சொல்வது அதனால்தான். அதீத வியர்வை எனும்போது உடலின் பொட்டாசியம், சோடியம் போன்ற உப்பு தாதுக்கள் வெளியேறியிருக்கும், நீர்ச்சத்தும் குறைந்து உப்பு தாதுக்களும் குறைந்து உடல் சோர்வடையும். சில முதியவர்களுக்கு உடல் வலி வந்து விடும். ‘ஓஆர்எஸ்’ அல்லது வீட்டிலேயே செய்த உப்பு சர்க்கரை கலந்த நீர் உடனடி நிவாரணம் தரும்.)

‘சரி காஃபியை குறைச்சிக்கறேன். வேற எதை எடுத்துக்கலாம் பரமன்?’ எனபது உங்கள் கேள்வியாக இருக்கலாம். தொடர்ந்து படியுங்கள்.

சுரைக்காய், பீர்க்கங்காய், பூசணிக்காய், வெள்ளரி, பனை நுங்கு போன்ற காய்கறிகளையும், கொமட்டி பழம் (தர்ப்பூசணி), வெள்ளரிப் பழம், கிர்ணி பழம், வாழைப்பழம் போன்ற பழங்களையும், தாகம் தணிக்க இளநீர், மோர், எலுமிச்சை சாறு போன்றவற்றையும் உட்கொள்வது இவை நீர்ப்பெருக்கும் உணவுகள் என்பதாலேயே.

கோடை காலத்தில் சிறுநீர் சுருங்கக் கூடாது, உடலின் உள்ளுறுப்புகள் சோர்வடையக் கூடாது. சிறு நீர் சுருங்கினால் தொற்று முதற்கொண்டு பல சிக்கல்கள் வரும். (மேற்சொன்ன வகை) நீர் பெருக்கும் உணவுகளை உட்கொண்டு, போதுமான அளவு நீர் குடித்து உடலை சும்மா ‘கூலா!’ வைத்துக்கொள்ளுங்கள். வாழ்க்கை கூலாகப் போகும்.

வாழ்க! வளர்க!

( ‘வளர்ச்சி’– சுய முன்னேற்ற இதழ், மே 2021 இதழில்)

Valarchi

ValarchiTamilMonthly

Malarchi

MalarchiPublications

ParamanPachaimuthu

StayWithPositive

Facebook.com/MalarchiPage

ParamanPage Paraman Pachaimuthu

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *