வளர்ந்து நிற்கிறது தேக்கு மரம்

‘ஐயே, அறிவு இல்ல உனக்கு. நல்ல தீனிதானே திங்கற, இல்ல பீயத்திங்கறியா? சொல்லிட்டே இருக்கன். கேக்க மாட்டேங்கறே!’

வள்ளியம்மைப் பாட்டியின் குரல் உரத்து இப்படி வந்தால் வீட்டின் பின்புறத் தொழுவத்தில் நின்று பசுமாட்டிடம் பேசிக் கொண்டிருக்கிறார் என்று பொருள்.  மனிதர்களிடம் பேசுவது போலவே மாட்டிடம் பேசிக் கொண்டிருப்பார், சில நேரங்களில் உரிமையாக கோபத்தில் திட்டியும் தீர்ப்பார் பாட்டி.

நேர்த்தியான கொம்புகளை கொண்ட ஒரு வெள்ளைப் பசு, மண்டையிலிருந்து கொஞ்சமே நீட்டிக்கொண்டு நிற்கும் மொன்னையான கொம்புகள் கொண்ட சிவப்பு இளம் பசு, ஒரு கன்றுக் குட்டி என மூன்று மாடுகள் இருந்தன எங்கள் வீட்டில். எங்கள் வீட்டைப் பொறுத்த வரையில் மாடென்றால் அது பசுமாடுதான். காளை என்றால் கன்றாக இருக்கும் போதே யாருக்காவது கொடுத்து விடுவார் அல்லது ஏரிமேட்டு மாட்டுத் தரகர் நல்லக்கண்ணுவை கூட்டி வந்து பேசி விற்று விடுவார். (அந்த வெள்ளைப் பசு ‘ஹல்லிக்கர்’ இன நாட்டுப் பசுவாகவும், சிவப்பு மொன்னைக் கொம்பு ‘காஞ்சிக் குட்டை’ நாட்டு இனமாகவும் இருக்கலாம் என்று ஊகிக்கிறது என் இன்றைய அறிவு).

மாடுகள் மீது பெரும் பாசம் பாட்டிக்கு. ‘ஏன் காலை நொண்டுது?’ ‘சினை புடிச்சிருக்கு!’ ‘மூத்திரம் வேற மாதிரி வருதே!’ ‘கொளம்புல கொப்புளம், ‘ம்ம்ம்மா’ன்னு கதறுது, கோமாரி வந்துருக்கு, புவனகிரி போனா ரெண்டு மொந்தம் பழம் வாங்கிட்டு வா பூராயரு!’ என எங்கிருந்தாலும் மாட்டின் மீதே கண்ணும் இதயமும் இருக்கும் பாட்டிக்கு. நள்ளிரவில் ஏதேனும் சத்தம் கேட்டாலும் விளக்கை எடுத்துக் கொண்டு போய் பார்த்து விடுவார். மாட்டுக்கும் அவருக்குமான அலைவரிசை அலாதியானது. வாசலில் கயிற்றுக் கட்டிலிலில் தூங்கிக் கொண்டிருந்தவர், ஏதோவொரு உணர்வில் திடீரென விழித்து விளக்கை எடுத்துக் கொண்டு மாட்டிடம் போக, அங்கே மாட்டின் மிக அருகில் படமெடுத்து நிற்கும் பாம்பை காண நேர்ந்ததும் நடந்துள்ளது.

கோடை விடுமுறை வந்தால் அறுவடை முடிந்த வயல்களுக்கு மாடுகளை ஓட்டிப் போய் மேய்க்கும் வேலையை, ‘பாரு, உன் வயசு புள்ளதான சரவணன், அவன் ஓட்டிட்டுப் போறான்ல. நீயும் போனாதானே!’ என்று சொல்லி என் மீது சுமத்தி விடுவார் பாட்டி. ராஜவேலு சித்தப்பாவின் பெரிய வீட்டிலிருந்தும், பரமானந்தம் மாமா வீட்டிலிருந்தும், சரவணன் வீட்டிலிருந்தும், பழமலை உடையார் எனப்படும் சாமி தாத்தா வீட்டிலிருந்தும் என எல்லாமும் சேர்ந்து நூற்றுக்கணக்கான மாடுகள் வரும். அதோடு இந்த மூன்று மாட்டையும் ஓட்டிக் கொண்டு போக வேண்டும் நான். (சில நாள்களில் மட்டம் அடித்து பரமானந்தம் மாமாவிடம் பொறுப்பை தந்து விட்டு புவனகிரி (மணி ஜீவல்லர்ஸ்) ஜெகன் வீட்டிற்கு ஓடி விடுவேன் என்பது தனிக் கதை).

மாட்டிற்கு அடுத்து விவசாயமும், பேரப் பிள்ளைகளும், தான் வைத்து வளர்க்கும் மரங்களும் பிடிக்கும் பாட்டிக்கு.

வள்ளியம்மை பாட்டி, வாக்கப்பட்டுப் போன மானாவரத்தில் (திருவண்ணாமலை பக்க படு சிற்றூர்) பஞ்சம் ஏற்பட்டு பிழைப்பிற்காக நீர் புரளும் சோழதேசம் நோக்கி புலம் பெயர்ந்து வந்தவரென்பதால், வீடு, விவசாய நிலம், பேரன் பேத்திகள், தான் வைத்து வளர்க்கும் மரங்கள் மீது கொள்ளை ஆசை கொண்டவர் என்பது புரிந்து கொள்ளக் கூடியதே.

பாப்பாக்குளத்தின் வடக்கு கரையில் முன்பு குடியிருந்த மனையில் அப்பா கொண்டு வந்து வைத்த கொடுக்காப்புளியின் அருகிலேயே ஒரு மாங்கன்றையும் புளியங்கன்றையும், மனையின் மறு ஓரத்தில் பூவரசம், இலவம் கன்றுகளையும் வைத்து வளர்த்தார் பாட்டி. அவை வளர்ந்து மரமாகி நெடிது உயர்ந்து நின்ற போது ஒரு சோலை போல இருந்தது நம் வீட்டுச் சூழல்.   கொடுக்காப்புளி பொறுக்க வேலிக்கு வெளியே மரத்தினடியில் சிறுவர்களும் மரத்தின் மேலே எண்ணற்ற கிளிகளும் எனும்படி கொடுக்காப்புளி மரம்  காய்த்து கனத்தது.  வீட்டில் எல்லாத் தலையணைகளும் நல்ல பஞ்சால் நிறைந்தது எனும் படி இலவம் காய்த்தது. ஆனால் உயர்ந்து வளர்ந்தும் புளியும், மாவும் காய்க்கவேயில்லை. ஆண்மரம் பெண்மரம் என்று அவரவர் சொல்லும் கதைகளை கேட்டுக் கொண்டேயிருப்பார் பாட்டி. பாட்டிக்கு அது ஒரு மர ஏக்கம். அந்த மனையை விற்று விட்டு  பாப்பாக்குளத்தின் தெற்கு மூலையில் இருக்கும் மனையை வாங்கி வீடுகட்டி குடி வந்து விட்டோம்.

மரம் வைக்க மறுபடியும் ஆசை பாட்டிக்கு. நாரத்தம், கடாரம், எலுமிச்சை, வாழை, கறிவேப்பிலை, முருங்கை என நட்டது எதிலும் தீராத ஏக்கம் தேக்கில்தான் தீர்ந்தது என்று சொல்லலாம். 

புதர் மண்டியிருந்த மானம்பாத்தான் வாய்க்காலின் கரையை சுத்தப்படுத்தி வரிசையாக தேக்கங்கன்றுகள் வைத்த காலத்தில், யாரிடமோ பேசி யார் மூலமோ அந்தக் கன்றை கொண்டு வந்து, வைக்கோல் போருக்கு வடக்கே இருந்த முருங்கை மரத்துக்கு அருகில் பூராயர் அண்ணனையோ குல்லாளையோ வைத்து குழி வெட்டி எருவிட்டு நட்டார் வள்ளியம்மை பாட்டி.

மனைக்கு வடக்கே சிறு தெரு, அதற்கு அடுத்து நீர்நிறைந்த பாப்பாக்குளம் என்பதால் ஒரு நிலைக்கு மேல் நீருக்குப் பஞ்சமில்லை அந்தத் தேக்குக்கு. பாட்டியே வியந்து அண்ணாந்து பார்க்குமளவிற்கு எங்களோடே வளர்ந்தது அதுவும். 

பசு மாட்டைப் பிடித்துக் கட்டப் போகையில், கொல்லைப்புறத்தில் நிற்கும் வேளையில் எல்லாம் ஓங்கி வளர்ந்த தேக்கையே பார்த்துக் கொண்டு நிற்பார் வள்ளியம்மை பாட்டி.

இந்தத் தேக்கிற்கு அடுத்த படியாய் பாட்டிக்கு நெருக்கமானது ஒரு கருவேல மரம் (கருவ மரம்). வடக்கு வெளி வயலில் பெரிய வரப்பின் பாட்டையையொட்டி ஒரு கருவேல மரம் நிற்கும். அதுதான் பாட்டிக்கு எல்லாமும்.  வயல் வேலைகளுக்கிடையே அந்தக் கருவேல மரத்தடியில்தான் அமர்ந்து உணவு உண்பார், நீரருந்துவார், ஆசுவாசப் படுத்திக் கொள்வார். பசுமாட்டுக்குப் புல் அறுத்தாலும் அதை குவித்து வைப்பது கருவேல மரத்தடியில்தான்.  பாட்டியின் சுவாசத்தை அவரது பேச்சுகளை அதிகம் கவனித்திருக்கும் அந்த கருவேலம் என்று நான் நினைப்பதுண்டு.

கல்லூரி முடித்து சென்னையில் பணி புரிந்த காலத்தில் இரு நாள் விடுமுறையில் ஊருக்கு வந்திருந்தேன். ஆட்களோடு வயலில் உளுந்து பிடிங்கிக் கொண்டிருக்கும் பாட்டிக்கு சோறு எடுத்துப் போனேன். அதே கருவ மரத்தடி.  அருகிலோடும் சிறு வாய்க்காலில் கைகால் முகம் கழுவிவிட்டு வயலின் பெருவரப்பில் கருவ மரத்தடியில் அமர்ந்திருந்தவரிடம், எடுத்துப் போன சோறும் குழம்பும் நிறைந்த எவர் சில்வர் தூக்கு வாளியைத் தந்து விட்டு ‘சாயந்தரம் நான் மெட்ராஸுக்கு கெளம்பறேன் பாட்டி!’ என்றேன். ‘போய்ட்டு வாப்பா!’ என்றார்.

விடைபெற்று
சில அடிகள் வரப்புப் பாட்டையில் தெற்கு நோக்கி நடந்தவன், ஏதோவொரு உணர்வினால் இழுக்கப்பட்டு திரும்புகிறேன்.  ‘ஏம்ப்பா…?’ என்கிறார்.  கண்கள் விழுங்கிக் கொள்கின்றன.  என்றுமில்லாமல் அன்று அந்த்நிலையில் ஏனோ பாட்டியை விட்டுப் போக மனமில்லை. அழுதுவிடுவேன் போல இருக்கிறது. ‘ஒண்ணும்ல்ல பாட்டி!’ சொல்லி விட்டுத் திரும்பி தெற்கை நோக்கி விடுவிடுவென்று நடக்கிறேன்.

அதுதான் கடைசி சந்திப்பு, அதுதான் கடைசியாகப் பேசும் தருணம் என்று தெரியவில்லையே அப்போது.  முன்பே தெரிந்திருந்தால் அங்கேயே அவரிடமே அருகில் அவர் சாப்பிடும் வரை அமர்ந்திருந்திருப்பேனே. கையால் ஊட்டிக் கூட விட்டுருப்பேன். இன்று இருக்கும் பக்குவம் அன்றிருந்தால் பாட்டியை அப்படியே கட்டியணைத்து சில கணங்கள் உறைந்து நின்றிருப்பேனே. ‘பாட்டி, நான் ஒரு, வேற சமூகத்துப் பெண்ணை காதலிக்கறேன். பெரிய பிரச்சினைகளுக்குப் பிறகு அப்பா சரி சொல்லிட்டாருன்னு இப்பதான் சித்தப்பா சொன்னாங்க! ப்ரியான்னு பேரு பாட்டி!’ என்றாவது சொல்லியிருப்பேனே!

பேசியவற்றை விட பேசாதவை நெஞ்சில் நின்று வலிக்கவே செய்கின்றன. 

திருவல்லிக்கேணி மேன்ஷனில் தங்கியிருந்த எனக்கு புவனகிரியிலிருந்து அழைப்பு வந்து தகவல் வந்து நான் தந்தை பெரியார் போக்குவரத்துக் கழக பேருந்து எண் 146ஐப் பிடித்து மணக்குடி வந்த போது, சுற்றிலும் குடும்பமே நிற்க, தனது இறுதி கணங்களில் கட்டிலில் கிடந்தார் வள்ளியம்மை பாட்டி. ‘சிவா வந்துருக்கேன்னு செல்லுடா!’ என்று அம்மா சொல்ல, ‘பாட்டி, சிவா வந்துருக்கேன்!’ என்றேன். கண்களை உருட்டிப் பார்த்தார். கண்களில் நீர் வடித்தார்.  நாங்கள் அனைவரும் திருவாசகம் சொல்ல, நான் அவர் வாயில் பால் ஊற்ற, பாட்டி சிவபுரம் புறப்பட்டுப் போனார்.

அவர் நேசித்த பசுமாட்டை, வடக்கு வெளி கருவேல மரத்தை, வீட்டின் பின்புறம் நிற்கும் தேக்கு மரத்தைக் காணும் போதெல்லாம் வள்ளியம்மை பாட்டியை நினைத்துக் கொள்வேன். ‘நல்லா இருக்கேன் பாட்டி! நீ கஷ்டப் பட்டதுல்லாம் தெரியும்!’

மணக்குடிக்கு போகும் போதெல்லாம் பாட்டி நினைவு வந்தால் குகனையோ பரியையோ அழைத்துக் கொண்டு வடக்குவெளி வயலுக்குப் போய் பாட்டையில் கருவ மரத்தடியில் அமர்ந்து விட்டு வருவேன்.

சில ஆண்டுகளுக்கு முன்பு, மாட்டிற்கு வயது முதிர்ச்சி வந்து விட்டது, நம்மால் இனி பராமரிக்க முடியாது என்று சொல்லி மாடுகளை விற்று விட்டார் அப்பா.

வடக்கு வெளியில் ட்ராக்டர் செல்ல வேண்டுமென்று சொல்லி பாட்டையை பெரிது படுத்த கருவ மரத்தை வெட்டி அப்புறப்படுத்தி விட்டார்கள்.

எனக்கு இப்போது இருப்பது பாட்டி வைத்த அந்த தேக்கு மரம் மட்டுமே.

மணக்குடியில் அந்த வீதியின் வழியே போவோர் ஒவ்வொருவருக்கும் அது வெறும் மரம். எங்களுக்கு அது வேறு. ரத்தமும் சதையுமாய் உயிராய் இருந்த போது வள்ளியம்மை பாட்டி வைத்த மரம். உயிராய் நிற்கிறது.

இங்கிருக்கும் ஒவ்வொரு மரத்திற்கும் இப்படி ஏதோவொரு பின்னணி இருக்கலாம்தானே!

மணக்குடியில், வீட்டுக்கு வடக்குப் புறம் மனையின் எல்லையோரத்து கம்பி வேலியையொட்டி உட்புறம் வளர்ந்து நிற்கிறது தேக்குமரம்.

மரத்தை பார்க்கும் போதெல்லாம், மனம் குவிகிறது.

‘பாட்டீ… நான் நல்லா இருக்கேன் பாட்டீ! உன் பேர் சிறக்கற மாதிரி உலகத்துக்கு செய்வேன் பாட்டி!’

இன்று சித்திரை – பரணி, வள்ளியம்மை பாட்டியின் நினைவு நாள்.

– பரமன் பச்சைமுத்து
ஆர் ஏ புரம்,
11.05.2021

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *