பள்ளிகளில் தமிழ் கட்டாயமாகட்டும்

சிங்கப்பூரில் தமிழ் வாழ்கிறது, இனியும் வாழும் என்பதற்கான காரணம் தொடக்கக் கல்வி தொடங்கி மேல்நிலை வரை தாய் மொழிக் கல்வியாக தமிழ் இருக்கிறது. 

என்னதான் நூல்கள், இலக்கியத்துறை என பார்த்துப் பார்த்து செய்தாலும், அடுத்த தலைமுறை தாய்மொழியை கைவிட்டால் அம்மொழி நலிவடைந்து விடும். இளம் தலைமுறை தாய்மொழியை வெறும் பேச்சு மொழியாக மட்டுமே கொண்டால், அவர்களின் தலைமுறையில் விழத் தொடங்கும் அம் மொழி.

சென்ற ஆண்டு ஊரடங்கின் போது இளம் சிறார்களை நல்வழிப்படுத்தலாமேயென எண்ணி நூல் வாசிப்பு விமர்சனம் போட்டியொன்றை மலர்ச்சி அரும்புகள் மொட்டுகள் மாணவர்களுக்கு அறிவித்தோம். 

சென்னை, புதுச்சேரி சிறார்கள் ஆங்கில நூல்களையும், திருவண்ணாமலையிலும் தமிழ்நாட்டின் இதர இடங்களிலிருந்தும் பங்கு பெற்ற சிறார்கள் தமிழ் நூல்களையும் வாசித்து எழுதியிருந்தனர். 

என்னளவில் மட்டுமல்ல, மாநில அளவில் அறியப்படும் உண்மை ஒன்றிருக்கிறது இதில். நகர்ப்புற பிள்ளைகளிடத்தில் ஆங்கிலமும் ஊர்ப்புற பிள்ளைகளிடத்தில் தமிழும் ஓங்கி நிற்கின்றன.  கூடவே அவர்களிடத்தில் தமிழும் இவர்களிடத்தில் ஆங்கிலமும் வளர வேண்டும். நாம் செய்ய வேண்டியது அதுவே.

கஸ்தூரி ரங்கன் பரிந்துரையில் 8 ஆம் வகுப்பு வரை தாய்மொழியை கற்பது அவசியம் என்ற பரிந்துரை இருந்தது. மும்மொழிக் கொள்கையும் அதிலிருந்ததால் எதிர்ப்பு எழும்ப அது அப்படியே நிற்கிறதென எண்ணுகிறேன் (என் அறிவுக்கு எட்டிய வரை).

கேரளத்திலும், மே வங்கத்திலும் கட்டாய தாய்மொழிக் கல்வி கொள்கை இருக்கிறதாம். 

முனைப்புடன் நிறைய முன்னெடுப்புகளை எடுக்க விரும்பும் ஸ்டாலின் அவர்கள் தமிழ் மொழியை கட்டாயமாக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். 8 ஆம் வகுப்பு வரை பிள்ளைகள் படிக்கட்டும். மேல் வகுப்புகளில் தொடர்ந்து கற்க விரும்பினால் அது விருப்பத் தேர்வாக இருக்கட்டும்.  தொடக்கத்தில் சில சங்கடங்கள் வரலாம், வந்தாலும் தொலைநோக்கில் இது தமிழை வளர்த்தெடுக்கும். வரலாற்றில் இடம் பெறும்.

வாழ்க!

– பரமன் பச்சைமுத்து
03.06.2021

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *