காமாட்டிப் பய

நீச்சல் மட்டுமல்ல உலகமே தெரியாத சிறுபிராயத்தில், வெள்ளமென நிறைந்திருக்கும் நீர்நிலையில், குப்புற விழுந்து மூச்சு முட்டி பிரஞ்ஞையிழந்து வாழ்வின் விளிம்பிற்குப் போய் வந்திருக்கிறீர்களா?

நான் போய் வந்திருக்கிறேன். தவறுதலாக நீருக்குள் குப்புற விழுந்து மூச்சு முட்டி நினைவு தப்பும் நிலையில் பிட்டம் தெரிய மிதந்த என்னை முதலில் பார்த்து  அஞ்சலாட்சி அம்மாதான் வாய்குழறி கத்தி தெரியப்படுத்தினார்.

‘அஞ்சாலாட்சியம்மா’ என்று ஊரும், ‘அஞ்சல’ என்று கணவர் பழனிவேல் உடையாரும் மாமியார் பூங்காவனமும் அழைக்கும் அவரது அசல் பெயர் அஞ்சலாட்சி. திருவண்ணாமலை பகுதியின் கனபாபுரத்திலிருந்து மணக்குடிக்கு வாக்கப்பட்டு வந்த அஞ்சலாட்சியம்மாவின் ஈறு கூட கருப்புதான்.

இப்போதிருப்பதைப் போல வீடுகள் பாத்ரூம்கள் கொண்டிராத 45 ஆண்டுகளுக்கு முன்பு மொத்த மணக்குடியுமே பாப்பாக்குளத்து படித்துறையில்தான் குளிக்கும்.  கிழக்கே பிள்ளையார்கோவில் பின்புறம் படித்துறை, மேற்கே ஆலமரம் கொண்ட கருமாதித்துறை அருகில் மாடும் மனிதர்களும் இறங்கிக் குளிக்கும் துறை.

குளத்தின் வடமேற்கு மூலையிலிருக்கும் எங்கள் வீட்டிலிருந்து மஞ்சள் கிழங்கோடும் பச்சை சந்திரிகா சோப்போடும் வரும் அம்மாவும், தென் கிழக்கு மூலையின் காய்ச்சார் மேட்டின் முதல் வீட்டிலிருந்து சிவப்பு லைஃபாய் சோப்போடு வரும் அஞ்சலாட்சி அம்மாவும் ஒரே நேரத்தில் படித்துறைக்கு குளிக்க வருவது எப்போதாவது நடந்திருக்கிறது.

பெண்கள் மஞ்சள் தேய்த்து தேய்த்து பல இடங்களில் திட்டுத்திட்டாய் மஞ்சள் கறை கொண்ட 3 ஆம் படி வரை தண்ணீர் ஏறியிருந்த படித்துறையின், 5 ஆம் படியில் அமரவைக்கப்பட்டிருந்த சிறு பிள்ளையான நான், கணுக்கால் வரை நீர் நிறைந்த 2ஆம் படியில் நின்று கொண்டு மார்பு வரை பாவாடை கட்டிக்கொண்டு நனைந்த உடலில் சோப்புத் தேய்த்துக் குளித்துக் கொண்டிருந்த அம்மாவையும் அஞ்சலாட்சியம்மாவையும் பார்த்தேன்.

நீரைப் பார்க்கப் பார்க்க கும்மாளமடிக்க குபீரென கிளம்புகிறது உணர்வு. ‘சிவா! அங்கே உட்காரு. வுழுந்துருவ. நகரக்கூடாது!’ என்று இரண்டு நிமிடத்துக்கொருமுறை அம்மா சொல்வதால் அடக்கி சுருட்டி வைக்கப்படுகிறது நம் வாலு.

உடலெங்கும் தேய்த்து விட்டு, சோப்பைக் குழைத்து முகத்திற்கு போடுகிறார்கள் இருவரும். கண்ணைத் திறக்க மாட்டார்கள் கொஞ்ச நேரம். இதற்காகவே காத்திருந்த நான் ‘விழிப்பதற்குள் தண்ணீரைத் தொட்டுவிட வேண்டும்!’ என்று விரைந்து இறங்குகிறேன் படிகளில். மூன்றாம்  படியில் நின்று கொண்டு குனிந்து இரண்டாம் படியளவில் நிறைந்திருக்கும் நீரை சிறு கையால் தொட முயல்கிறேன். உயரம் குறைந்த சிறு உடலுக்கு எட்டவில்லை தண்ணீர். ‘ம்க்கும்… ம்க்கும்…’ என்று முக்கி இன்னும் குனிந்து கையில் நீரைத் தொட முயல்கையில் நீரைத் தொட்டு் நிமர்கையில் என் பிட்டங்கள் நான்காம் படியில் இடித்து நிலை தடுமாறி அப்படியே ஒன்றரையாள் ஆழமிகு குளத்தில் குப்புற விழுந்தேன்.

சிறு மகன் நீரில் விழுந்ததும் மூச்சு முட்டி நினைவு தப்பிக் கொண்டிருப்பதும் தெரியாமல் நீரையள்ளி முகத்திலடித்து மெதுவாக கழுவிக் கொண்டிருக்கிறார்கள் இருவரும். முதலில் கண்ணைத் திறந்தது அஞ்சலாட்சியம்மாதான். கண்ணைத் திறந்ததும் பிள்ளையைக் காணவில்லை என்பது பகீர் அமிலத்தை கிளப்பி விட, வலது பக்கம் நிற்கும் அமிர்தத்தை தாண்டி பிள்ளை குப்புற மிதந்து கொண்டு கிடப்பதைப் பார்த்து ‘ஓஊழ்…ஓஊழ்… புள்ள…புள்ள… ஓஊழ்!’ வாய் குழறி கத்துகிறார்.

அம்மா நிலவரம் உணர்ந்து திரும்பி ஒரு எட்டில் அரைநான் கயிற்றைப் பிடித்து இழுத்து வெளியிலெடுத்துத் தூக்குகிறார். மலங்க மலங்க விழித்தேனாம்.  இவர்கள் போட்ட சத்தம் கேட்டு ஊர் கூடி விட்டதாம்.

அன்று மட்டும் அஞ்சலாட்சி அம்மா பார்க்காமல் விட்டிருந்தால், இன்று இருந்திருக்க மாட்டேன் நான். உரிய நேரத்தில் குரலெழுப்பி உயிர் காத்தார் அவர். இதை அடிக்கடி நினைத்துக் கொள்வேன். பல ஆண்டுகளுக்கு முன்பு கனபாபுரத்தில் பம்ப்செட் இறைக்கும் தொட்டியில் சிறுமியான சிவகாமி விழுந்து மிதக்க நான் இழுத்து வெளியில் போட்ட போதும்,  சில ஆண்டுகளுக்கு முன்பு அதே பாப்பாகுளத்தில் எதிர்வீட்டு முருகதாஸின் மகன் மூழ்கி இறந்த போதும், நான் அஞ்சலாட்சி அம்மாவை நினைத்துக் கொண்டேன்.

‘காமாட்டி பய!’

இதுதான் அஞ்சலை எனப்படும் அஞ்சலாட்சி அம்மா அடிக்கடி பயன்படுத்தும் வார்த்தை. பொய்க்கோபமானாலும் சரி, பீறிடும் நிச கோபமானாலும் சரி, ‘காமாட்டிப் பயலே!’தான். அவரது பிள்ளைகள் ராஜா, கோபியாக இருந்தாலும் சரி, கொழுநன் மகன் பாண்டியனாக இருந்தாலும் சரி… ‘காமாட்டி பய’தான்!

‘வேலைக்காரன்’ படத்தில் ‘மாமனுக்கு மயிலாப்பூருதான்,  மாமிக்கந்த சித்ரகுளம்தான்!’ என்று ரஜினி ஆடும் போது வரும் ‘,நாட்டி… கம்மனாட்டி!’ வரிகள், எனக்கு ‘காமாட்டிபய’லாக மாறி் அஞ்சலாட்சியை நினைவில் கொண்டு வந்து நிறுத்திப் போயிருக்கிறது.

காலங்கள் உருண்டு பறந்தோடி விட்டன. சென்னை, பெங்களூர், ஜப்பான் என ஊரெல்லாம் திரிந்து சென்னைக்கு வந்து சேர்வதற்குள் நிறைய மாறிவிட்டன. மணக்குடியும் மாறிவிட்டது. மகன்கள் வழியே பேரன் பேத்தி பெற்று பாட்டியாகி விட்டார் அஞ்சலாட்சி. (பேரனுக்கு கொஞ்சும் போதும் ‘காமாட்டி பய!’தான்)

கழுத்தில் தைராய்டு கட்டி வந்து  சிகிச்சைக்கு சென்னை வந்து வெட்டி எடுக்கப்பட்டு என்னோடு இருக்கிறார் அம்மா.  ’12 மணிக்கு முன்னால சாப்புட்டுருங்க. வந்துருங்க. வந்ததும் அட்மிட் பண்ணி் மருந்து குடுக்கனும். ரெண்டு நாளைக்கு உள்ளயே இருக்கனும். நீங்க பாக்க முடியாது!’ என்று சொன்னதற்கிணங்க, 12.10க்குப் புறப்பட்டு கதிரியக்கச் சிகிச்சைக்கு குளோபல் மருத்துவமனை நோக்கிப் போகிறோம்.

கிழக்குத் தாம்பரம் தாண்டுகையில் குகன் அழைத்துத் தகவல் தருகிறான்

‘அண்ணா… அஞ்சலாட்சி அம்மா செத்துப் போயிட்டாங்கண்ணா! உசிர வுட்டுட்டாங்கண்ணா!’

‘பரமன்? பேஷண்ட் அமிர்தம் கூட்டிட்டு வர்றீங்களா? ரேடியோஆக்டிவ் அயோடின் எல்லாம் ரெடி. புளிப்பு மிட்டாய் வாங்கிட்டு வாங்க. ட்ரீட்மெண்ட் ஆரம்பிக்கனும்!’

‘ரெண்டு நாளு கழிச்சிதான் அம்மாவ பாக்க முடியும். ரேடியேஷன் குறையனும். இந்த ரூம்லதான் இருப்பாங்க. ஃபோன்ல பேசலாம்!’

‘ஊர்ல ஒருத்தங்க இறந்துட்டாங்க. போயிட்டு வந்துறலாமா?’

‘இவங்கள நீங்க பாக்க முடியாதுதான்.ஆனா, எதாவது வேணும்னு கூப்டா உடனே வரணும். சிட்டியிலயே இருக்கறதுதான் நல்லது!’

….

சில சங்கதிகள் சிலவாறு நடந்து விடுகின்றன. ஏனென்று விடையறிய நம்மால் முடிவதேயில்லை.  கேன்சர் மாதிரி பெருநோய் வந்தவர் எழுந்து வருவதும், நன்றாயிருப்பவர் திடீரென்று போய் சேர்ந்து விடுவதும் நடந்து விடுகிறது.

அஞ்சலாட்சியின் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தப் போக முடியாமல், மருத்துவமனை உள்ளே தனியறையில் அம்மா. வெளியே நான்.

‘காலையில 08.30க்கு எடுப்போம்!’ முத்தையன் சித்தப்பா சொன்னது நினைவுக்கு வருகிறது.

பாப்பாக் குளத்துப் படித்துறையில் அன்று அவர் குரல் கொடுத்ததால் உயிர் பிழைத்தேன். பாப்பா குளத்து தென் கிழக்கு மூலையில் உயிர் விட்டிருக்கும் அவரைப் போய்ப் பார்த்துக் குரலெழுப்பி அழக் கூட முடியவில்லை.

இந்நேரம் குழியில் இறக்கியிருப்பார்கள். பதிகம் சொல்ல சொல்ல ஒவ்வொருவராய் இறங்கி தலையில் கைப்பிடி மண்ணும் விபூதியும் அவர் தலையில் கொட்டியிருப்பார்கள்.

இங்கிருந்தே நானும் சொல்கிறேன்

‘உலகெலாம் உணர்ந்தோதற்கரியவன்
நிலவுலாவிய நீர்மலி வேணியன்
அலகில் சோதியன் அம்பலத்தாடுவான்
மலர்சிலம்படி வாழ்த்தி வணங்குவாம்!’

காதில் கேட்கிறது அஞ்சலாட்சியின் குரல்

“காமாட்டி பய!”

– பரமன் பச்சைமுத்து
13.07.2021

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *