பொன்முகலி ஆறு தெரியுமா உங்களுக்கு?

wp-1681210878363.jpg

பொன்முகலி ஆறு தெரியுமா உங்களுக்கு? 

சிறுவயதில் இந்தப் பெயரை என் அப்பா வைத்திருந்த வாரியார் எழுதிய ‘சிவனருட்செல்வர்’ நூலில் படித்த போதே பிடித்தது. ‘பொன் முகலி!’ ‘பொன்முகலி!’ என்று சொல்லிக்கொள்வேன்.

பலமுறை இந்த நதியை நீங்கள் கடந்து போயிருக்கக் கூடும்.

( அதற்கு முன் ஒரு கதை சொல்ல வேண்டியிருக்கிறது. கேளுங்களேன்)

….

கிமு 3102 வாக்கில் (தோராயமாக! மகாபாரதப் போர் முடிந்த காலம் என்று சொல்கிறார்களே, அந்த காலத்தையொட்டிய காலம் போல!), சந்திர பாபு நாயுடுகளும், ஜெகன்மோகன் ரெட்டிகளும் அவர்களின் மூதாதைகளும் பிறந்தேயிராத இன்று ஆந்திரமாகக் கொள்ளப்படும் அந்த மண்ணில், சீறிப் பாயும் பொன்முகலி ஆற்றின் கரையையொட்டியிருந்த அடர்காட்டினுள்ளே வாழ்ந்தது ஒரு வேடர் குலம். (இதை பொதப்பி நாட்டிலிருந்த உடுப்பூர் என்கிறது சில குறிப்புகள். தொண்டை நாடு என்கின்றன சில குறிப்புகள்)

குறிஞ்சியும் முல்லையும் கலந்த அந்தப் பகுதி வாழ் வேடுவ குடியின் தலைவன் தோள்கள் திரண்டிருந்த தன் மகன் திண்ணனை அடுத்த தலைவனாக பட்டம் அறிவித்து முடிசூட்டினான். கிணை, பறை, முழவதிர முதல் வேட்டை எனும் ‘கன்னி வேட்டை’க்குப் போனான் திண்ணன் தன் நண்பர்கள் நாணனோடும், காடனோடும்.

முதலில் கண்ணில் பட்ட காட்டுப்பன்றியை துரத்தி அலைந்து திரிந்து அம்பெறிந்து வேட்டையாடினர். அதீத அலைச்சலாலும் உடல் களைப்பாலும் நீர் வேட்கை பெற்ற திண்ணனை ‘அந்தக் கோடியில் காட்டுக்கு வெளியே சிறுமலையையொட்டி பொன்முகலியாறு ஓடுகிறது. அதில் குடிக்கலாம் நீர்!’ என்று அழைத்துப் போகிறான் நாணன்.

இது வரை வந்தேயிராத அந்தப் பகுதிக்கு வந்து ஆற்றில் இறங்கி் பருகியதும் நீர் வேட்கை தணிந்து உயிர் வேட்கை தொடங்குகிறது திண்ணனுக்கு. ஏதோவோர் உணர்வு, ஏதோவோர் இனம்புரியா ஈர்ப்பு, ஓர் ‘எக்டஸி’ தொடங்குகிறது.

‘நாணா, அங்க என்ன இருக்கு?’

‘அந்த மலையிலயா? குடுமித்தேவர் இருக்கார். சிவகோசாரியார் பூசனை செய்வாரு. உங்கப்பாவோட நான் ஒரு முறை வந்து வணங்கியிருக்கேன்!’

திண்ணன் அந்த மலையை நோக்கி ஈர்க்கப்பட்டான். அந்த தருணத்திலிருந்து அடுத்த ஆறு நாட்கள் நடந்த கதையை மணிவாசகர், காரைக்காலம்மையார், பட்டினத்தார், சுந்தரர் முதல் போற்றாதவர்கள் இல்லை.

செருப்பணிந்த காலால் சிவனை சுத்தம் செய்து, பொன்முகலியாற்றிலிருந்து வாயில் வைத்து கொண்டு வந்த நீரைத் துப்பி நீராட்டு செய்து, தலையில் சூடி வந்த காட்டு மலர்களை அணிவித்து, கடித்து சுவைத்துப் பார்த்த காட்டுப்பன்றியின் ஊணை படைத்து ‘சாப்பிடு!’ என்று சிவனிடம் காட்டுத்தனமான ஒரு பக்தியை தொடங்கிய போது ‘திண்ணன்’ ஆக இருந்தவன், அம்பினால் தன் கண்ணை அகழ்ந்து சிவனுக்கு தருகையில் ‘நில்லு கண்ணப்ப!’ என்று இறைவனால் தடுத்து ஆட்கொள்ளப்பட்டு ‘கண்ணப்பர்’ ஆகிறார் என்கிற  நிகழ்வுகளை சேக்கீழாரின் பன்னிரென்டாம் திருமுறை உணர்வில் துய்த்து துய்த்து சொல்கிறது.

உயர் நிலை என்று சொல்லப்படும் மணிவாசகரே,

‘கண்ணப்பன் ஒப்பதோர் அன்பின்மை கண்டபின்
என்னப்பன் என்னொப்பில் என்னையும்ஆட் கொண்டருளி
வண்ணப் பணித்தென்னை வாவென்ற வான்கருணைச்
சுண்ணப்பொன் நீற்றற்கே சென்றூதாய் கோத்தும்பீ’ என்று ‘கண்ணப்பன் அளவிற்கு என்னால் அன்பு வைக்க வைக்க முடியாது, ஆனாலும் எனை ஆட்கொண்டு’ எனும் பொருள்பட திருக்கோத்தும்பி பாடுகிறார்.

வேடன் திண்ணப்பனான கண்ணப்ப நாயனார் சரித்ததை பக்தி இலக்கியங்கள் போற்றுகின்றன.

…….

சென்னையிலிருந்து கும்மிடிப்பூண்டி திசையில் கார் விரைகிறது.

‘அம்மா! சிவனுக்கு கண்ண நோண்டி குடுத்தாரே ஒருத்தர், அவர் யாரு?’

‘கண்ணப்ப நாயனார்!’

‘அங்கதான் போறோம்! அவர் வாழ்ந்த எடத்துக்கு போறோம்!’

‘என்ன ஊரு அது?’

‘காளஹஸ்தி!’

(அம்மாவிற்காக சில இடங்கள், சில கோவில்கள் என்று போகும் ‘அம்மா – ஆலய தரிசனம்’ இனையருளால் இதோ இன்றும் நிகழ்கிறது!)

….

காளஹஸ்தியில் இறங்கியதும் காளத்திநாதன் கோவிலுக்குப் போவதை விட வேடன் திண்ணன் ஆறு நாட்கள் கிடந்த பொன்முகலியாற்றையொட்டிய குன்றின் மீதுள்ள அந்த இடத்திற்குப் போவதில் நாட்டம் அதிகமிருந்தது.

ஏற வேண்டிய உயரமும், எரிக்கும் ஆந்திர வெய்யிலும் கவலை தந்தன. ஆனாலும் அம்மாவுக்கு அனுபவம் கிடைக்கும் என்று நினைத்துக் கேட்டதற்கு,  ‘ஏய், மணக்குடி அம்மாந்தூரம் வயலுக்கு நடக்கலியா, நான்!’ என்று அம்மாவே சொன்னதில் முழு துணிவு வந்து நடந்தோம்.

ஏறினோம்! படிகள் வழியே ஏறினோம்!

‘அம்மா… நாம இப்ப நிக்கற இந்த மலையில எங்கயோதான் வேடன் திண்ணன் இருந்திருக்கனும். அதோ அந்த ஆத்துலேருந்து இங்க இப்படி வந்துருக்கலாம்!  இங்க, எங்கயோதான் ‘நில்லு கண்ணப்ப!’ன்னு தலைவன் சொல்லிருக்கனும்!’

கன்னத்தில் போட்டபடி கைகுவித்தபடி உணர்வில் நின்றார் அம்மா.  (அதுதான் எனக்கான தரிசனம்! அதற்கு எத்தனை மாநிலத்தையும் கடந்து எந்த மலையையும் ஏறிக் கடந்து வரலாம்! இதற்கப்புறம் நடப்பதெல்லாம் போனஸ்!)

‘அம்மா! இப்ப கீழ எறங்கி, கோயில்குள்ள போகப்போறோம். நம்ம சிதம்பரம் ஆகாயத் தலம் மாதிரி, இது காத்து, வாயு தலம்!’

‘ஓகோ! திருவானைக்கா போனோமே பாப்பால்லாம் குட்டியா இருந்த போது, அது?’

‘அது நீர்!’

‘அப்பா இருக்கும் போது பிரியா, நாம எல்லாம் போனோமே ராமேஸ்வரம், அது?’

‘நிலம்! மண்!’

….

நாக தோஷம் என்று நாற்புறமிருந்தும் மக்கள் வந்து கொண்டேயிருப்பதால், கூட்டமென்றால் அப்படியொரு கூட்டம். நடை சாத்துவதேயில்லை காளஹஸ்தியில். காலையில் தொடங்கி இரவு வரை எந்த நேரமும் தரிசனமே.   சிவன் கோவில்தானே, விபூதி கிடைக்கும் என்று போனால் ஏமாந்தீர்கள். முதலில் வரும் பிள்ளையார் சன்னதியில் வாங்கிப் பூசிக்கொண்டால்தான் உண்டு.

….

பொன்முகலியாறு பற்றி கேட்டேனே!
இந்த ஆற்றின் கரையில்தான் வைணவ திவ்யதேசமான திருமலையும் உள்ளது, சைவ பஞ்ச பூத தலமான திருக்காளத்தியும் உள்ளது.

பொன் முகலி என்று நம் பக்தி இலக்கியங்கள் குறிப்பிடும் அந்த ஆற்றுக்கு இன்னொரு பெயர் இருக்கிறது. இன்று அந்தப் பெயரில்தான் அது சொல்லப்படுகிறது. 

இந்தப் பெயரை வைத்து பார்த்திபன், ப்ரகாஷ் ராஜ், தேவயாணி நடித்து ஒரு வெற்றிப் படம் கூட வந்துள்ளது. 

‘சுவர்ண முகி!’

: அம்மா – ஆலய தரிசனம் : 6

– பரமன் பச்சைமுத்து
திருக்காளத்தி
11.04.2023

#AmmaAalayaDharisanam #AmirthamPachaimuthu #MuPachaimuthuArakkattalai #ParamanTouring #ParamanAmirtham
#ParamanKalahasthi #KannapaNayanar #SwarnamukhiRiver #PonMugali

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *