
சோழமண்டல கடற்கரையில் ஒதுங்கிய திமிங்கிலத்தை கட்டி போராடி இழுத்துச் சென்று ஆழ் கடலில் விட்டனர் நூறு மீனவர்கள் என்றொரு செய்தி படத்துடன் வெளியாகியிருந்தது சென்ற வாரம். ‘நூறு மீனவர்களா!’ என்று விவரம் பார்த்ததும் வியப்பு வந்தது. திமிங்கிலத்தின் நீளம் 80 அடி!
நமக்குப் பத்துக் கிலோ மீட்டர் தூரத்திலிருக்கும் கடலுக்குள் என்னென்னவோ இருக்கின்றன. கடல் என்பது என் கண்ணில் தெரியும் வெறும் மேற்பரப்பு மட்டுமல்ல, ஒரு பெரிய வேறோர் உலகமே இயங்குகிறது அதில், அதனுள்… நீர் உலகம்!
எல்பி 791-18 என்ற தலைப்பில் வந்த இன்றைய செய்தி மறுபடியும் என்னைத் தலையில் தட்டி எழ வைக்கிறது. வானவெளியில் 90 ஒளி ஆண்டுகள் தூரத்தில் (ஓர் ஒளி ஆண்டு என்பது 9 லட்சத்து 46 ஆயிரம் கோடி கிலோ மீட்டராம், இதை 9ஆல் பெருக்க கிடைப்பது 9 ஒளி ஆண்டுகள் தூரம்) ஒரு சிவப்பு நட்சத்திரத்தை சுற்றிக்கொண்டுள்ள ஒரு கிரகத்தை கண்டறிந்திருக்கிறது ஹார்வார்டு பல்கலைக்கழக விஞ்ஞானிகள் குழு. எல்பி 791-18 என்று இப்போது பெயர் சூட்டப்பட்டுள்ள இந்த கிரகம் பூமியை விடப் பெரிதானதாம், அதில் உயிர்கள் வாழ சாத்தியங்கள் உள்ளனவாம், அறிவித்திருக்கிறது ஹார்வார்டு பல்கலைக்கழகக் குழு.
எதிர்காலத்தில் ‘பூமிக்கு மிக அருகிலுள்ள எல்பி 791-18கிரகத்தில் வீட்டு மனைகள், 791 சதுர அடி 791கோடி ரூபாய்!’ என்று வான்வெளி வர்த்தகங்கள் வரலாம் என்ற எண்ணங்களைத் தாண்டி, வேறு சில எண்ணங்களும் வந்து நிற்கின்றன. ‘வானை அளப்போம் கடல் மீனை அளப்போம்!’ என்றெழுதிய போது பாரதி என்னென்ன எண்ணங்கள் கொண்டிருந்திருப்பான் என்று வியக்கிறேன்.
80 அடி நீளத் திமிங்கிலமும் 9 ஒளி ஆண்டுகள் தூர எல்பி 791-18 கிரகமும் என்னை தலையில் தட்டி உட்கார வைக்கின்றன.
இந்த பரந்து விரிந்த உலகம் பல்வேறு சங்கதிகளால் ஆனது. கண்ணுக்கெட்டா தூரங்களில் ஆழங்களில் கோடிக்கணக்கான உயிரினங்கள், அசையும் அசையா உயிருள்ள உயிரில்லா பொருள்கள், மூலக்கூறுகள், தனிமங்கள், கனிமங்கள், வேதிமங்கள் என பல சங்கதிகளால் ஆன உலகத்தில் நானும் ஓர் உயிர். சிறிய துளி! என் கண்ணுக்குத் தெரிவது சில. கண்ணுக்குத் தெரியாதது பல.
‘நான் எழுத்தாளன்!’ ‘பரமன்’ ‘கோச்!’ ‘நிறுவனத் தலைவன்!’ ‘அது தெரியும்!’ ‘இது தெரியும்!’ என்பன உடைந்து நொறுங்குகின்றன.
‘நிறைய தெரியும்!’ என்பது கலைந்து ‘நமக்கு நிறைய தெரியாது!’ என்று நிற்கிறேன்.
பரந்து விரிந்த அத்தனை பெரிய உலகத்தை இயக்கும் அந்த சக்தியை எண்ணி அடங்கி நிற்கிறேன். இத்தனை பெரிய அமைப்பில் நானும் ஓர் உயிர், நானும் ஓர் அங்கம் என்பதில் அகமகிழ்ந்து எழுகிறேன்.
மலர்ச்சி இறைவணக்கப் பாடல் வரிகளை சொல்வதைத் தவிர வேறு வழி தெரியவில்லை எனக்கு.
‘கருவாக்கி உருவாக்கி எனையாண்டு
காத்தருளும் இறைவா நன்றி!’
– பரமன் பச்சைமுத்து
சென்னை
19.05.2023
#Lp791 #HarwardUniversity #WaterWorld #AquaLife #Paraman #ParamanPachaimuthu #ThankYouGod #GodIsGreat #Universe #Earth