
7 ஆம் நூற்றாண்டில் சேரர்களும், சோழர்களும் கூட்டாகச் சேர்ந்து கொண்டு முதியவனான அரிகேசரி பாண்டியனை எதிர்த்தபோது, பாண்டிய அரசணையில் ஏறி எதிரிகளை துவம்சம் செய்து, சேரனை யவன தேசத்துக்கு நாடு கடத்தி, சோழனின் கோட்டையைப் பிடித்துக் கொண்டு அங்கிருந்தே ஆட்சி செய்தான் பெரும் வீரனான மகன் ரணதீர பாண்டியன்.
இந்த சேர சோழ பாண்டிய பெருங்குடிகளின் அதிகாரத்திற்கான போரால் அழிந்தும் புலம் பெயர்ந்தும் வற்றியும் போன சிறுகுடிகளில் ஒன்றான எய்னர் கூட்டத்தின் வீரனொருவன் இனம் மீட்பு நிலம் மீட்பு என்ற வேட்கை கொண்டு
அவ்வளவு பெரிய ரணதீரனை எதிர்த்து தாக்கப்போனால் என்ன ஆகும் என்ற புனைவை திரைக்கதை செய்து 7 ஆம் நூற்றாண்டுக்கே நம்மை கூட்டிப்போய் காட்டுகிறார்கள் ‘யாத்திசை’ படமாக.
மலையும், காடுகளும், ஆறும், கரடுமுறடான பாறைகளும், தொல்குடிகளும், அவர்கள் கால ஆடை அணிகளும், அவர்கள் பேசும் 7 ஆம் நூற்றாண்டு தமிழும், நடிகர்களை தயார் செய்தது என தயாரிப்பில் பின்னி பெடலெடுத்திருக்கிறார்கள்.
சிறு கூட்டத்தின் போர்க் காட்சிகள் சினிமாத் தனம் இல்லாமல் ரத்தம் தெறிக்க, வேண்டிய உணர்ச்சிகளை கடத்துகின்றன. கொஞ்சம் வன்மம் கொண்ட இந்தக் காட்சிகளுக்காவே குழந்தைகள் பார்க்க அனுமதி இல்லை போல.
காட்டு விலங்கை வேட்டையாடி கடித்து உண்டு பசியாறினார்கள் என்பதை ஒரு விலங்கை காட்டாமலேயே காட்சியமைத்து பார்வையாளருக்கு கடத்தியிருக்கிறார் இயக்குநர்.
‘சோழ தேயம்’ (தேசம், நாடு) ‘நுங்கு கிழமை’ (வெள்ளிக் கிழமை) என தொல்குடிகள் பேச சங்ககால தமிழைப் பயன்படுத்தியிருக்கிறார்கள். அரசர்களைத் தவிர ஏறு எவரும் செருப்பணிவதில்லை, தலைவனாக இருக்கும் ஆண்கள் அல்லது வசதியாக இருக்கும் ஆண்கள் மூக்குத்தி அணிந்தனர், ஆண் பெண் என இருபாலரும் நீண்ட சிகையை கொண்டிருந்தனர் என்பது சொல்லாமல் சொல்லப்பட்டிருப்பதாக எண்ணுகிறோம்.
அதிகாரத்தை அடைவதற்காகவே போர்கள், மன்னன், கொடி, மக்கள், நிலம், இனம் என்பதெல்லாம் சும்மா பம்மாத்து என்பதை நேரடியாக சொல்கிறார் இயக்குநர்.
7 ஆம் நூற்றாண்டில் மனிதர்களின் தேவை, வாழ்க்கை முறை இப்படியிருந்திருக்கலாம் என்று எண்ணச் செய்கிறது படம்.
வி-டாக்கீஸ் – வெர்டிக்ட்: ‘யாத்திசை’ – வழக்கமான படமல்ல, நல்ல வித்தியாசமான முயற்சி. பார்க்கலாம். சிலருக்கு பிடிக்காமல் போகலாம்.
திரை விமர்சனம் – பரமன் பச்சைமுத்து