நல்ல மடைமாற்றம்

தனியார் மருத்துவமனைகளில் தடுப்பூசி இலவசம் என்றொரு திட்டத்தை தொடங்கியிருக்கிறது தமிழக அரசு. 

இந்தத் திட்டத்தைத் தாண்டி வரவேற்க வேண்டிய அம்சம் ஒன்று உள்ளது இதன் பின்புலத்தில்.

தனியார் நிறுவனங்கள் ஒவ்வோர் ஆண்டும் உலகத்திற்கும் மக்களுக்கும் என்று குறிப்பிட்ட அளவிற்கு ஒரு நல்ல தொகையை ‘சமூகப் பொறுப்பு நிதி’ என்று ஒதுக்கி நற்செயல்களை செய்கின்றன. சென்னை நகரின் சில ஏரிகளை சீரமைத்து காத்தது, தமிழகம் முழுதும் பல காரியங்களை நிறைவேற்றுவது இவ்வகை தனியார் நிறுவனங்களே. பல சிற்றூர்களில் பல நற்காரியங்களை தனியார் நிறுவனங்கள் செய்கின்றன என்றாலும் அவரவர் தேர்ந்தெடுக்கும் வகைகளில் இடங்களில் மட்டுமே அவரவர் செய்தனர்.

நிதி, செய்ய வேண்டிய காரியங்கள் ஆகியவற்றிடையே ஒரு பெரும் இடைவெளி இருக்கவே செய்தது.  தமிழக அரசின் இப்போதைய புதிய அணுகுமுறை தனியார் நிறுவனங்களின் சமூகப் பொறுப்பு நிதியை, தடுப்பூசிப் பக்கம் மடை மாற்றி விட்டிருக்கிறது.

நிச்சயமாக இது நடந்தேறும் என்று தெரிந்தால், நல்லது செய்ய பங்களிக்க பலர் விரும்புகிறார்கள். அந்த நம்பிக்கை இது போன்ற மடை மாற்றங்களால் பெருகி வரட்டும். நிதி பெறிது என்பதால் நாளடைவில் இதில்  ஊழல் வழ்துவிடாமல் சரியான கண்காணிப்போடு இந்த திட்டம் செயல்படட்டும்.

இந்த அணுகுமுறை, இந்த முன்னெடுப்பு நாளை மற்ற நற்காரியங்களுக்கும் வரும். வரட்டும்! ‘கூவம் ஆற்றை இந்த இடத்திலிருந்து இந்த இடம் வரையில் சுத்தப்படுத்தி சீரமைக்க இந்த நிறுவனத்தின் நிதி ஒதுக்கப்படுகிறது!’ ‘இந்த இடத்திலிருந்து அந்த ஊர் வரை நெடுஞ்சாலையில் மரம் வளர்ப்பது இந்த நிறுவனத்தின் நிதியில் செய்யப்படுகிறது!’ என்பவையெல்லாம் நடப்பது போல இன்றே கனவு காண்கிறேன்.

– பரமன் பச்சைமுத்து
29.07.2021

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *