பொட்டு வைத்த காசு…

சந்தனமும் குங்குமமும் வைக்கப்பட்ட ரூபாய் நாணயம் ஒன்று உங்களுக்குப் தரப்பட்டால் நீங்கள் அதை என்ன செய்வீர்கள்?

ஒரு கிண்ணத்தில் நல்லெண்ணையும், ஒரு மனைப்பலகையும் ‘எட்டணா’ எனப்படும் ஐம்பது காசு வில்லையையும் தந்து, ‘சிவா! போய் புள்ளாரு வாங்கிட்டு வா!’ என்பார் அம்மா. பிள்ளையார் செய்யுமிடத்திற்குப் போவது தொடங்கி, செய்து வாங்கி,  ‘பைசப்ஸ் கர்ல்’ வருவதற்கு ‘டம்பிள்ஸ்’ஐ தூக்கும் ஒரு பதின்ம வயது பையன் போல பிள்ளையாரை ஆடாமல் நிலை தடுமாறாமல் தெருவெல்லாம் தூக்கி வீடு வந்து சேர்வது வரை எல்லாமுமே ஒரு தனி அனுபவந்தான்.  ( சண்முகம் ஒரு முறை பிள்ளையாரை தூக்கி வருகையில் கால் சட்டை இடுப்பிலிருந்து சரேலென கழன்று விழ, ‘உடுக்கை இழந்தவன் கையாக’ மானம் காக்க ஒரு கை கால்சட்டையை பிடிக்கப் பாய்கையில், தாங்கியிருந்த ஒரு கையை விட்டதில் சாய்ந்து ஆடி நிலை தடுமாறி தரையில் தலை குப்புற விழுந்தார் பிள்ளையார், ‘ஞை!’ என்று முகம் நசுங்கி போனது பிள்ளையாருக்கும் சண்முகத்துக்கும்)

பாப்பாக் குளத்தின் வடமேற்குக் கரையிலிருக்கும் எங்கள் வீட்டிலிருந்து தென்கிழக்கு மூலைத் தெருவிற்குப் போகவேண்டும் பிள்ளையார் வாங்க.  முதலில் இருக்கும் கந்தசாமி உடையார் வீட்டில்தான் மொத்த ஊரும் பிள்ளையார் வாங்கும். சிலர் மட்டும் தெருவின் கோடியில் இருக்கும் சுப்ரமணிய உடையாரிடம் வாங்குவர்.

மண்ணைக் குழைத்து அடித்து பக்குவமாய் வைத்துக் கொண்டு அமர்த்திருப்பார் கந்தசாமி உடையார். ‘உடையார் உடையமாட்டார், உடைந்தாலும் ஒட்ட மாட்டார்!’ என்று பாடிக்கொண்டே வருபவர்களைக் கூட சட்டை செய்யாமல் கையிலிருக்கும் அச்சில் கண்ணையும் கவனத்தையும் வைத்திருப்பார் கந்தசாமி உடையார்.  ஒரு துணியில் (பெரும்பாலும் அது அவரது மனைவி பூங்காவனத்தின் பழைய புடவையில் கிழித்த  துண்டுத் துணியாக இருக்கும்) சாம்பல் துண்டுகளை இட்டு முடிச்சிட்டு வைத்திருப்பார்.  வலது கையால் அச்சை எடுத்து இடது கைக்கு மாற்றி, சம்மணமிட்ட தொடைக்கும் முகத்திற்கும் இடையே ஓரிடத்தில் நிறுத்தி, வலது கையால் சாம்பல் முடியை திருமணத்தில் பன்னீர் தெளிப்பார்களே அப்படி தெளிப்பார் அச்சின் மீது. அச்சு முழுக்க சாம்பல் துகல்கள் வெண்மையும் பழுப்பும் கலந்த வண்ணத்தில் பரவி படிந்து கிடக்கும். எல்லா இடங்களிலும் சாம்பல் படிமம் இருக்கிறதா என்று உறுதி செய்துவிட்டதும், களிமண்ணை எடுப்பார் மனிதர். செவ்வகமும் இல்லாமல் வட்டமும் இல்லாமல் ஒரு தோராய பத்தையாய் இழுத்து வைக்கப்பட்ட களிமண்ணை எடுத்து, எங்கிருந்தோ வரும் வேகம் வலது கையில் நுழைய ஓங்கி ‘ப்ப்பச்சக்!’ என்று அச்சில் அடிப்பார். ஓங்கி அடித்ததில் களிமண் அச்சில் ஆழப் பதிந்து ஒட்டி நிற்கும். களிமண்ணை இழுத்து இழுத்து முழு அச்சிலும் எல்லா இடங்களிலும் அழுத்தி அழுத்தி நிரப்பி மூடுவார். ‘தட்… தட்…’ என்று தட்டுவார். ‘ப்சப்’ என்று அடிப்பார். மேலும் கொஞ்சம் மண் எடுத்து பூசி மெழுகுவார்.

கோணி ஊசி போன்ற குச்சி ஒன்றை எடுத்து கல்லிலிருந்து தோசையைப் பிரிக்க தோசைத்திலுப்பியை நுழைத்து பதமாக நெம்புவது போல, அச்சிற்கும் படிந்துவிட்ட களி மண்ணிற்கும் இடையில் விட்டு நெம்புவார். ‘ப்ளக்’ என்று பிளந்து கொண்டு சாம்பல் படிந்த மண் பிள்ளையார், பானை வயிறு, தும்பிக்கை, உடைந்த தந்தம், மகுடம், முறம் காது என்ற கணக்கில் அட்டகாசமாக உருவாகியிருப்பார். வீட்டிலிருந்து கொண்டு வந்த கருகமணியை எடுத்து தந்தம் தொடங்குமிடத்திற்கு மேலே இரு பக்கவாட்டிலும் அழுத்தி கண்களாக்கி விடுவார் கந்தசாமி உடையார்.  ‘இந்தா எடுத்துட்டு போ உன் பிள்ளையாரை!’ என்று தருவார்.

எங்கள் வீட்டில் மண் பிள்ளையார் என்றாலும் அதற்கு நீராட்டு உண்டு. ‘பிடியதன் உருவுமை கொளமிகு கரியது வடிகொடு தனதடி…’ வகை பாடல்களோடு நீர், எண்ணெய், திரவியப்பொடி, எலுமிச்சை, இளநீர், பால், தயிர், மஞ்சள், தேன், சந்தனம் என பலதையும் மேலூற்றி நடத்தும் ஒரு குளிப்பாட்டே உண்டு. இதற்கு சாம்பல் பிள்ளையார் சரிவராது. திப்பித் திப்பியாய் களிமண் கரையுமென்பதால், எங்களுக்கு நல்லெண்ணெய் தடவி அடித்த பிள்ளையார்தான் வேண்டும்.  அதனாலேயே கிண்ணத்தில் நல்லெண்ணெய்யோடு போவோம்.

‘சிவாவா… இருடா வர்றேன்!’ என்று என்னை காத்திருக்க வைத்துவிட்டு, சுற்றி நிற்கும் மற்றவர்களுக்கு சாம்பல் தெளித்து அடித்துத் தருவார் கந்தசாமி உடையார். ஓரளவு கூட்டம் குறைந்த பின் அடுத்த கூட்டம் வரும் முன் என இடைப்பட்ட நேரந்தில் நம் பிள்ளையாரை அடிப்பார்.   அச்சை நன்றாக துணியால் துடைத்துவிட்டு, நாம் கொண்டு வந்த எண்ணெய்யை அச்சின் உள் பக்கம் எல்லா இடங்களிலும் படும்படி ஊற்றி தடவி, அதே இடது கையில் அச்சு, வலது கையில் மண், எங்கிருந்தோ வரும் வேகம், ஓங்கி  ‘ப்ப்பச்சக்க்’ என்று அடி, மண்ணை அழுத்தி அழுத்தி விரலால் நிரப்புதல் என அதே… சிறிது நேரத்தில் ‘ப்ளக்’ என பிளந்து எடுப்பார்… எண்ணெய் மின்ன மின்ன எனக்கான களிமண் பிள்ளையார் உருவாகி நிற்பார்.

மனைப்பலகையில் பிள்ளையாரை வைத்துக்கொண்டு தெருவில் நடக்க, ‘என்னா சிவா, புள்ளையாரா? கொழுக்கட்டைக்கு வரலாமா?’ என பலரும் பரிகாசம் செய்ய,  வாயெல்லாம் பல்லாக வீடு வரை போய் சேர்வோம்.

நீராட்டு, இடுப்பு வேட்டி அணிவித்தல், அருகம்புல் சாத்துதல், எருக்கம்பூ மாலை அணிவித்தல் என எல்லாம் முடிந்து அது நடக்கும். எட்டணா வில்லை ஒன்றை எடுத்து கழுவித் துடைத்து பிள்ளையாரின் தொந்தியில் வைத்து அழுத்துவார் அப்பா. ‘ஏய்… புள்ளையாருக்கு காசு!’ என்று நாம் கூவும் போதே, அந்த நாணயத்தின் மீது சந்தனம் வைத்து குங்குமம் வைத்துவிடுவார்.

பிள்ளையார் சதுர்த்தியிலிருந்து மூன்று நாட்கள் பிள்ளையாருக்கு அன்னம் படைக்கப்படும். மூன்றாம் நாள் ‘பிள்ளையாரக் கொண்டு போய் கொளத்துல விடு!’ என்று அம்மா சொன்னதும் தொடங்கும் நம் அடுத்த உற்சாகம்.

பாப்பாக்குளத்தில் இறங்கி முட்டியளவு நீரில் நின்று கொண்டு பிள்ளையாரை விடும் முன்பு அதை செய்வேன்.  கவனமாய் கவனித்து பிள்ளையாரின் வயிற்றில் இருக்கும் ஐம்பது காசு வில்லையை பெயர்த்து கால்சட்டைப் பையில் வைத்துக் கொள்வேன். அதன் பிறகு, குனிந்து பிள்ளையாரை நீரில் முக்கி கைகளில் சில நொடிகள் வைத்திருந்து அப்படியே விட்டுவிட்டு வருவேன்.

சந்தனமும் குங்குமமும் வைக்கப்பட்ட அந்த ஐம்பது காசு நாணயம் என்னை தூங்க விடாது. செலவு பண்ணவும் தோன்றாது.
பல லட்ச ரூபாய் மியூச்சுவல் ஃபண்டில் சேர்த்துவிட்ட ஒருவனைப் போலொரு பெருமகிழ்ச்சியில் திளைப்போம் அவ்வயதில். ‘பொட்டு வச்ச காசு! ஹிஹிஹி…’ அடிக்கடி தொட்டுப் பார்த்துக் கொள்வேன்.  

பொட்டு வைத்த அந்த காசை என்ன செய்வதென்று தெரியாது அந்த வயதில்.

அடுத்தடுத்த நாட்களில் கால்கள் தானாக குணசேகரன் கடைக்குப் போக, பொட்டு வைத்த காசு, மஞ்சள் வற்றலாகவும் தேன் மிட்டாயாகவும் மாறி என் வாயையும் வயிற்றையும் நிறைக்கும்.

ஒவ்வோர் ஆண்டும் பிள்ளையார் சதுர்த்திக்கு பொட்டு வைத்த காசு கிடைத்தது. வளர்த்து, படித்து, பிழைக்க நகருக்குப் போனது, நாடுநாடாய் போனது, தீவிர தேடலில் ஓஷோ, ஜே கிருஷ்ணமூர்த்தி என்று போனதில் பூசைகளையே சில ஆண்டுகள் விட்டுவிட பிள்ளையாரும் போனார், பொட்டு வைத்த காசு பற்றிய நினைவுகளும் போய் விட்டன எனக்கு. மகள்கள் வளர வளர அவர்களுக்காக மறுபடியும் பிள்ளையாரைக் கொண்டு வந்தேன் பெங்களூரு நாட்களில்.  

மார்க்கெட்டில் அந்த ஊர் கந்தசாமி உடையார் போல எவரோ செய்து விற்ற பிள்ளையாரை வாங்கி, வீட்டிற்கு கொண்டு வந்து அதே முறை பதிகங்கள், நீராட்டு என பிள்ளைகள் மகிழ செய்தேன். தொந்தியில் நாணயம் வைத்து பொட்டு வைப்பது மறந்தே போனது.

ஆண்டுகள்தான் எத்தனை வேகமாகப் பறக்கின்றன. அமைந்தகரை சந்தையில் பரி வாங்கி வந்து என் வண்டியில் வைத்த பிள்ளையாரோடு தொடங்கியது இவ்வாண்டு பிள்ளையார் சதுர்த்தி. படித்து முடித்து பணிக்குப் போய் விட்ட மகள்களை நினைத்துக் கொண்டே பிள்ளையாரை நீராட்டி முடித்து துணி அணிவிக்கிறேன். ஊரிலிருந்து வந்துள்ள அம்மா பார்த்துக்கொண்டேயிருக்கிறார்.

‘சிவா! புள்ளாரு வயித்துல காசு வை!’ 

சுரீரென்று நினைவுகள் திரும்பின. ‘அம்மா! இவ்வளோ வருஷமா இந்த காசு வைக்கறதையே மறந்துட்டேன்மா!’  பத்து ரூபாய் நாணயம் ஒன்றை எடுத்து கழுவித் துடைத்து வைக்கிறேன்.

‘வயித்துல சந்தனம் வை. அதுமேல காசு வை. வச்சி சந்தனம் குங்குமம் வை!’

பிள்ளையார் சதுர்த்திக்கு இவ்வாண்டு அம்மா வந்ததில், பிள்ளையாருக்கு வயிற்றில் காசு வந்தது. இதோ மூன்று நாட்களில் பிள்ளையார் போய் விடுவார் நீர்நிலைக்கு.  அந்த சந்தனமும் குங்குமமும் வைக்கப்பட்ட காசை என்ன செய்வது?

– பரமன் பச்சைமுத்து
சென்னை
15.09.2022

#Manakkudi #MuPachaimuthu #AmirthamPachaimuthu #Paraman #PillaiyarChaturthi #GaneshChaturthi

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *