கர்நாடக உணவென்றால்…

கர்நாடக உணவென்றாலே உடுப்பி உணவுதான் என்று தாங்களாகவே கருதிக்கொள்பவர்கள் உண்டு.
மெட்ராஸ் மாகாணத்தில் இருந்த காலங்களிலும் நிலம் – மொழி – மக்கள் அடிப்படையில் கர்நாடகத்தின் உணவு முறை தனித்துவமாக வேறாகவே இருந்திருக்கிறது.

கர்நாடக உணவை மைசூரு / பெங்களூரு உணவு, உடுப்பி / கொடகு உணவு, கராவல்லி (கராவளி) / கோஸ்டல் உணவு என ஓரளவுக்கு வகைப்படுத்தலாம். ‘அன்னம் சாறு – ஊட்டா’ மாநிலம் முழுவதும் பொதுவானது.

மைசூரின் உணவு என்று சொல்லப்படும் இட்லி, ரவா இட்லி, மசால் தோசை வகைகள் மைசூரை தாண்டி எல்லா ஊர்களிலும் கொண்டாடப்படும் உணவாக மாறி வெகு காலமாயிற்று.

பிஸ்ஸி பேலா பாத், ஜோல ரொட்டி, அக்கி ரொட்டி, பால்யா, சாறு, ஹுலி, கூட்டு, ஹோலிகே, கடுபு, வாங்கி பாத் என சுவைத்து மகிழ உணவுகள் உண்டென்றாலும், கர்நாடகத்திற்குள் காலை வைத்தால் காலை சிற்றுண்டிக்கு நாம் தேர்ந்தெடுப்பது எப்போதும் ‘சௌ சௌ பாத்’தான்.

இனிப்பான ரவா கேசரி ஒரு கிண்ணம் (இதற்குப் பெயர் ‘கேசரி பாத்’), உப்புமா ஒரு கிண்ணம் (இதற்குப் பெயர் ‘காரா பாத்’) இரண்டையும் சேர்த்துத் தருவதற்குப் பெயர் ‘சௌ சௌ பாத்’. நிறைய பச்சைமிளகாயும் தண்ணீரும் விட்டு அரைத்த தேங்காய் சட்னியோடு உண்பது இங்கே வழக்கம்.

இரண்டாயிரத்தின் தொடக்கத்தில் கோரமங்களாவில் இருந்த காலங்களில் வெறும் பதினைந்து ரூபாய்க்கு ஒரு சௌ சௌ பாத், இரண்டு சாம்பார் இட்லிகள், ஒரு காஃபி என வயிறு நிரம்ப உண்ண காலை உணவு கிடைத்தது பெங்களூரில் எனக்கு.

இன்று மைசூரு மார்க்கத்தில் பயணிக்கையில் காலை உணவுக்கு அமர்ந்த உடுப்பி உணவகத்தில் நாம் கொண்டது சௌ சௌ பாத், சாம்பார் இட்லி, (சர்க்கரை இல்லாததால் உடுப்பி காஃபியின் அசல் சுவை கொண்ட) காஃபி. சர்க்கஸ் கோமாளி, ஆம் ஆத்மி ஆட்கள் தலையில் அணிந்திருப்பதை போல கூம்பு வடிவில் இருக்கும் பிளைன் தோசை மகளுடையது. இங்கு தோசையை வார்த்து அறுத்து சுழற்றி அப்படி கூம்பாக வைத்தே தருவார்கள்.

இதே சுவை நம் சென்னை அண்ணாநகர் டவர் பார்க் அருகிலுள்ள ‘உபவிகார்’ ஹோட்டலிலும் கிடைக்கிறது என்பது கூடுதல் தகவல்.

வட கர்நாடகத்தின் உணவு வகைகள் வெறும் சக்கையல்ல, சத்து மிகுந்தவை.

-பரமன் பச்சைமுத்து
மைசூரு
26.05.2024

#ParamanTouring #Paraman ##ParamanPachaimuthu #பரமன் #பரமன்பச்சைமுத்து #Karnataka #Bengaluru #KarnatakaFoood #UdupiFood #Mysore #Mysuru #Upavihar

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *