‘ஐயோ!’ ‘ஆ…!’
உயிருக்கு போராடிக் கொண்டு துடித்துக் கொண்டிருக்கிறது அது நடுரோட்டில்.
‘ஜமீல்… வண்டியை நிறுத்துங்க, நிறுத்துங்க!’
நடுரோட்டில் ஏதோவொரு பறவை தன் முதுகை கொதிக்கும் சாலையின் மீது கிடத்திக் கொண்டு, இறக்கைகள் பக்கவாட்டில் விரிந்து கிடக்க கால்கள் வானம் பார்க்க துடித்துக் கொண்டிருக்கிறது.
‘செத்துருச்சி’
‘இருங்க பார்ப்போம்! இப்பதான் அடிபட்டுருக்கு போல!’
இறங்கி ஓடுகிறோம். துடிப்பு மெல்ல மெல்ல அடங்கிய நிலையில் காகத்தைப் போல ஒரு பெரிய பறவை கிடக்கிறது.
குனிந்து கவனிக்கிறேன்.
‘ஐயோ! பாப்பா செத்துராத! இரு.. இரு… உனக்கு ஒண்ணும் ஆகாது செல்லம்..இரு!’
ஆனால்… அடங்கிவிட்டது. ‘சிவனே! முடிஞ்சிடுச்சா?’
‘சரி, எடுத்து ஓரமாக கொண்டு போவோம் முதல்ல, ரோட்ல கெடந்தா வண்டிங்கல்ல அடிபட்டு நசுங்கும்!’
குனிந்து கையிலெடுக்கிறோம். பட படவென்று றெக்கையை அடிக்கிறது. ‘ஏய்… யாரு… என்னை என்ன செய்யறீங்க!?’ என்பது போல இருக்கும் மீதி சக்தியை திரட்டிச் செலுத்தி.
‘ஏய்… துடிக்குது, உயிர் இருக்கு! சிவனே!’
காரிலிருந்து இறங்கி மருண்டு திகைத்து நிற்கிறான் பரி. கூடவே ஜமீல்.
‘ஜமீல் தண்ணி பாட்டில எடுங்க! சீக்கிரம் வாங்க!’
‘இப்படி துடிச்சி துடிச்சி மீதி இருக்கற சக்தியை இதுல வீணாக்கி செத்துராத. உன்னை கீழயே படுக்க வைக்கறேன்! பாப்பா… உனக்கு ஒண்ணும் இல்ல! இரு… இரு… வரேன்!’
சாலையோரம் தரையில் கிடத்துகிறேன். கழுத்தில் அடிபட்டு எலும்பு முறுக்கியது போல தலையை ஒரே இடத்தில் வைத்துக் கொண்டு மொத்த உடம்பையும் தூக்கி நகர்ந்து துடிக்கிறது அந்தப் பறவை.
தண்ணீர் பாட்டிலை திறந்து
‘ஊற்றினால் ஓவரா துள்ளுமோ? சக்தியை வீணடிக்குமோ!’ என்ற படி அதன் தரையில் கிடக்கும் தலையிலும் திறந்து கிடக்கும் அலகிலும் தண்ணீர் ஊற்றுகிறேன்.
அசையாமல் இருக்கிறது.
‘என்னவோ சொல்லுது போல. ஐயோ, எனக்குப் புரியலையே! என்ன பாப்பா சொல்ற நீ!’
‘ராசா… அது வாயில ஊத்துப்பா தண்ணிய!’
அந்தப் பக்கமாக நடந்து போகும் ஒரு முதிய பெண்மணி, சொல்லிக் கொண்டே கடந்து போகிறார்.
‘இனி யோசிக்க ஒன்றுமில்ல. செஞ்சாதான் ஆவணும். நீ துடிச்சாலும் பரவாயில்ல!’
இடது உள்ளங்கையில் தண்ணீரை நிரப்பி உயர்த்திப் பிடித்துக் கொண்டு, வலது கையின் பாட்டிலை கீழே வைத்து விட்டு பறவையை தூக்கினேன். துடித்தது. ஆனாலும் விடவில்லை. அழும் குழத்தையை பிடித்து அழுத்தி பால் ஊட்டும் அம்மாக்களைப் போல, மொத்த பறவையும் என் வலது கையில் பற்றிக்கொண்டு (உண்மையான ‘கைப்பற்றல்’!) அதன் முகத்தை இடது உள்ளங்கையை நோக்கிக் காட்டினேன். திறந்து கிடந்த அதன் வளைந்த கூர் அலகை தண்ணீரில் அமிழ்த்தினேன்.
‘ஏய்… குடி! இப்ப இதுதான் தேவை உனக்கு!’
‘க்ளப் உஸ்ஸர்ர்..’ லேசாக உறிஞ்சியது.
‘ஜமீல் இங்க வாங்க! இந்த கையில தண்ணி இன்னும் கொஞ்சம் தண்ணி ஊத்துங்க!’
மறுபடியும் தண்ணீரில் அமிழ்த்தினேன்.
தலையை சிலுப்பியது பறவை.
‘ஏய்… என்னா தெம்பு வந்துருச்சா! ஒன் உடம்பு சைஸுக்கு இதுவே ஒரு லிட்டர் அளவு தண்ணி போல!’
இப்போதுதான் கையிலிருக்கும் பறவையை கவனிக்கிறேன். ‘கண்ணு செவப்பா இருக்கு! ஆகா… அந்தப் பறவையா!?’ மல்லாந்து நிலை குலைந்து கிடந்ததால் மேற்புறம் தெரியாமல் இருந்தது, இப்போது கவனிக்கிறேன் செம்மையான இறக்கை… ‘ஏய் செம்போத்து!’ நீர் குடித்த அந்தப் பறவையைப் போல நான் உற்சாகமாகிறேன்.
‘ஏய் பரி, ஃபோட்டோ எடுடா!’
‘பாப்பா… செம்போத்து பாப்பா, உனக்கு ஒண்ணும் ஆகாது!’
அருகிலுக்கும் மரத்தின் தாழ் கிளையின் மிளாரு ஒன்றில் அந்தப் பறவையை வைக்கிறேன். கால்களால் பிடித்துக் கொண்டு நிற்கிறது.
‘அண்ணா நிக்குதுண்ணா!’ இப்போதுதான் உயிர் வந்தவனாக சொல்கிறான் உயிர் வந்த பறவையை பார்த்து.
‘தண்ணி பாட்டில் குடுங்க, கையை கழுவனும். அதோட ஷார்ப்பான கால் நகங்களாக பூறி கிழிச்சிடுச்சி என் கைய!’
‘ஜமீல் வண்டியில சோப்பு இருக்கா? சூப்பர் எடுங்க, கைய நல்லா கழுவணும்!’
‘பரி, 10 வருஷத்துக்கு முன்னால ‘நதி போல ஓடிக் கொண்டிரு…’ நூலில் சாலையில அடிபட்டுக் கிடந்த ஒரு செம்போத்து பறவையை எடுத்து கையில் வச்சிட்டு இருக்கறதா எழுதியிருப்பேன். சாப்டர் 7ல இருக்கும். இப்பயும் அதே சீன் பாரேன், ஹைவே, ரோட் ட்ராவல், அடிபட்ட செம்போத்து!’
கையில் தண்ணீர் ஊற்ற, சோப்பு கொண்டு வர, கையை நன்கு கழுவ என மூவரும் இதில் கவனம் குவித்துவிட்டுத் திரும்பினால்… கிளையில் அமர்ந்திருந்த பறவையைக் காணோம்.
‘அண்ணே, அதைக் காணோம்னே!’
‘பறந்துருச்சா! கீழ எங்காவுது உழுந்துருச்சா?’
‘அங்க இருக்கு!’
பக்கத்து மரத்தின் செங்குத்து தண்டில் அமர்ந்திருக்கிறது. பார்த்துக் கொண்டிருக்கும் போதே அங்கிருந்து பறந்து அடுத்த மரத்தின் அடுத்த உயரக் கிளையில் அமர்கிறது.
‘பாப்பா… நீ பொழச்சிட்டே!’
காரை நோக்கி நடக்கிறோம். புதுச்சேரிக்கு வகுப்பெடுக்கப் புறப்படுகிறோம்.
‘சார், செம்போத்துன்னா என்ன சார்?’
சொல்லத் தொடங்குகிறேன்
எங்கள் பயணம் தொடர்கிறது.
– பரமன் பச்சைமுத்து
வெள்ளிமேடு, தெள்ளாறு
17.04.2026
#Sembothu #RedCrow #BirdsLover #ParamanLifeCoach #ParamanTouring #ParamanPachaimuthu #பரமன்பச்சைமுத்து #naturelovers #environment #செம்போத்து #Kanchipuram #Thellar