ஜடாயு பூமி : Exploring the Cheras… PARAMAN PACHAIMUTHU

2

‘கொம்பிழை மானின் பின்போய்க் குலப்பழி தேடிக் கொண்டீர்! உம்பிழை என்பதல்லால் இதில் உலகுசெய் பிழை என்ன?`

….

ராமன் பிறந்ததாக சொல்லப்படும் இடம் கோசலை நாட்டின் அயோத்தி இருப்பது உத்திரபிரதேசத்தில். சீதையை ராவணன் கவர்ந்த தண்டகாரண்யம் இருந்த பகுதியாக சொல்லப்படும் நாசிக் இருப்பது மகாராஷ்டிரத்தில். புஷ்பக விமானத்தில் சீதையைக் கவர்ந்து சென்ற ராவணனை எதிர்த்து போரிட்ட ஜடாயு விழுந்தது இந்தியாவில் எந்த இடம் தெரியுமா?

….

அரபிக் கடலின் கரையில் ஏரிகளும் உப்பங்கழிகளும் (காயல்) நிறைந்த நீர்வளம் மிகுந்த சேரநாட்டின் (கேரளம்) நிலப்பகுதியில் உள்ளது கொல்லம். கொல்லத்திலிருந்து 35 கிமீ தூரத்தில் சடையமங்களம் என்றோர் ஊர் உண்டு. அந்த ஊரின் வெளியே ஒரு குன்று. 1200 அடி உயரம் கொண்ட குன்று. அந்தக் குன்று…

‘கொம்பிழை மான் – சீதை – ராவணன் – ஜடாயு என்று எதையோ ஆரம்பிச்சுட்டு நீங்க பாட்டுக்கு கொல்லம், குன்று என்று போறீங்களே, பரமன்?’ என்பது உங்கள் கேள்வியாக இருக்கக்கூடும். பொறுமை! அதற்குத்தான் வருகிறேன்.
….

ஜடாயு ராமாயணத்தில் வரும் பறவை(தேவதை என்று சொல்ல வேண்டும், ஆனால் தமிழில் வழக்கில் தேவதை என்றாலே பெண்பால் என்றாகிவிடுகிறது. ஆங்கிலத்தில் ஆண், பெண் இரண்டிற்கும் ஏஞ்சல்தான்!). ஜடாயு வீரமும் விவேகமும் நிறைந்த பறவைகளின் அரசனாம் (கிட்டத்தட்ட ரஜினியின் 2.0 படத்தில் வரும் பக்‌ஷிராஜன் போல என உருவகம் கொள்ளுவோமே)

கோதாவரிக் கரையில் இருந்த பஞ்சவடிக்கு வெளியே ஒரு பொன் மான் உலாவ, அதனழகில் மயங்கிய சீதை ‘அந்த மான் வேண்டும்!’ என்று கேட்க, இலக்குவனை காவலுக்கு வைத்து விட்டு மானைத் தேடி போனார் ராமன். போக்குக் காட்டி ஓடிய மான் உருவாக்கிய மாய வித்தைகளால் அஞ்சிய சீதை வலுக்கட்டாயமாக இலக்குவனையும் அங்கு அனுப்ப, காத்திருந்த ராவணன் சீதையை கவர்ந்து புஷ்பக விமானத்தில் எடுத்துச் சென்றான்.

போராடிக் கொண்டும் கூக்குரலிட்டுக் கொண்டும், வழி தடயங்களுக்காக தன் ஆடை ஆபரணங்களை போட்டுக் கொண்டே போன சீதையின் அபலம் கேட்ட ஜடாயு பறவை பறந்து சென்று ராவணனை எதிர்த்து சீதையை காப்பாற்ற முயன்றது. எவ்வளவு தாக்கியும் எதிர்த்துப் போரிடும் பறவையை வீழ்த்த நினைத்த ராவணன், தன் சந்திரஹாசத்தை எடுத்து ஒரே போடாகப் போட்டு ஜடாயுவின் ஒரு பக்க இறக்கையை வெட்டித் தள்ளினான். இறக்கை இழந்த ஜடாயு உதிரம் கொட்ட வலியில் துடித்தபடி வானிலிருந்து பூமியில் விழுந்தது.

உயிர் துடிக்க நிலத்தில் வீழ்ந்த பறவையரசன் உயிரைப் பிடித்துக் கொண்டு காத்திருந்தான். மானைத் தேடிப் போனவர்கள் மாயையைப் புரிந்து கொண்டு வந்த போது மனையாளைக் காணாது தவித்து தேடிக் கொண்டு திரிந்தார்கள். மணிகள், துண்டு உடைகள் என சீதை விட்டிருந்த தடயத்தின் வழியே வந்த போது, உயிர் பிரியும் தருவாயில் கிடந்த ஜடாயுவைக் கண்டு கதறினார்கள்.

ஜடாயு விவரங்கள் சொல்ல, விவரங்கள் புரிந்தன ராம இலக்குவர்களுக்கு.

கம்ப ராமாயணத்தில் இந்த இடத்தில் ஒரு கூடுதல் காட்சி உண்டு. ஜடாயுவின் துயரம் கண்டு, நிலை கண்டு மனங்கொள்ளாத ராமன், ‘ஐயோ, உங்களுக்கு இப்படியாயிடுச்சே! இந்த உலகம் உங்களை இப்படி பண்ணிடுச்சே! இந்த உலகத்தை என்ன பண்றேன் பாருங்க!’ என்று சீறு கொண்டு எழுகிறான். ராமனை தடுத்து, உயிர் போகும் தருவாயிலும் நல்வழிப் படுத்தலை செய்கிறார் பறவையரசன் ஜடாயு.

கம்பரின் வரிகளில் இப்படி உரைக்கிறார்

‘கொம்பிழை மானின் பின்போய்க் குலப்பழி தேடிக் கொண்டீர்! உம்பிழை என்பதல்லால் இதில் உலகுசெய் பிழை என்ன?’

ராமனின் மடியிலேயே உயிர் நீத்தாராம் ஜடாயு. தனது தந்தைக்கு செய்யாத இறுதிச் சடங்கையும் நீர்க்கடனையும் ஜடாயுக்கு செய்தாராம் ராமன். தென் திசை நோக்கிய பயணம், வாலி, சுக்ரீவன், அனுமன் சந்திப்பெல்லாம் இதன் பின்னரே.

‘பரமன், கேரள கொல்லத்துக்கும் இந்த ராமாயண ஜடாயுவுக்கும் என்ன சம்மந்தம்? ஏன் இந்த விவரிப்புகள்?’

இருக்கே! ராவணானால் இறக்கை வெட்டப்பட்டு வானிலிருந்து ஜடாயு விழுந்தது,
கொல்லத்திலிருந்து 35 கிமீ தூரத்தில் சடையமங்களம் என்ற ஊரின் வெளியே உள்ள 1200 அடி உயரம் கொண்ட ஒரு குன்றில்.

ராம இலக்குவர்கள் வந்தது, ஜடாயுவை மடியில் கிடத்திக் கதறியது, ‘கொம்பிழை மானின் பின் போய்க் குலப்பழி…’ சுட்டியது, ஜடாயு தகனம் செய்யப்பட்டது எல்லாம் கேரளத்தில் உள்ள இந்தக் குன்றில்தான்.

அந்தக் குன்றிற்குத்தான் வந்திருக்கிறோம் இப்போது.

‘அப்பா, த பேர்ட் கிங் ஜட்டாயு ஃபாட் வித் ராவணா…’ என்று கதை சொல்லிக் கொண்டிருந்த என் மூத்த மகள், ‘இங்க போய் ஷூஸ்ஸோட வர்றோம், வர்றாங்க, ஒரு மாதிரி இருக்கு!’ என்கிறாள்.

இஸ்கான் அமைப்பின் மேலாண்மையில் இருக்கும் இந்த ‘ஜடாயு புவி மையம்’ ( Jatayu Earth Center), ஒரு சுற்றுலா மையமாகவே இயங்குகிறது. உலகின் ஆகப்பெரிய பறவை சிற்பம் உச்சியில் இருக்க, அதைப் பார்வையிட வரும் மக்களுக்குத் தேவையான வசதிகளை சிறப்பாக செய்திருக்கிறது இஸ்கான். எண்ணூற்று சொச்சம் படியிலேறியும் போகலாம், ரோப் காரிலும் போகலாம், மேலே ஏறி காஃபி, சமோசா, பஸ்ஸியெல்லாம் கூட உண்ணலாம் என்ற வகையில் கட்டண மேலாண்மையும் செய்கின்றனர்.

ஜடாயு விழுந்து கிடந்ததாக சொல்லப்படும் இடத்தில் ஒரு கோவிலெழுப்பியிருக்கிறார்கள். காலணிகளை கழற்றிவிட்டு போய் வணங்கி வரலாம்.

மே மாதத்திலும் 25 டிகிரியில் இருக்கும் கேரளத்தில் இன்னும் ஒரு சில நாட்களில் பருவ மழை தொடங்கும் என்கிறார்கள்.

‘சாரே, அடுத்த எங்ஞன போவும்?’

‘சொல்றேன்ங்க!’

(தொடர்வோம்)

– பரமன் பச்சைமுத்து
சடையமங்களம், கொல்லம்
15.05.2026

#Jatayu #JatayuEarthCenter #ParamanLifeCoach #ParamanTouring #ParamanPachaimuthu #clubmahindraashtamudi #exploringcheras #பரமன்பச்சைமுத்து #வேணாடு #Venadu #ramayana

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *