ராமநவமி…

பொங்கல் வாங்குவதற்குக் கூட பெருமாள் கோவிலுக்கு போனதில்லை மணக்குடியில்.
சைவ நெறியை தீவிரமாகப் பின்பற்றும் குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவனென்பதால் பெருமாள் வழிபாடோ வைணவம் பற்றியோ பெரிதாக ஏதும் தெரியாது.

நான்காவது வீட்டில் இருந்த என் வயது ஒத்த ஆளவந்தார் தன் நெற்றியில் இட்டு வரும் திருமண் அந்த வயதின் வியப்பு. அவன் வீட்டில் அனைவருமே, நெற்றியைக் கடந்து தலைமுடி தொடங்கும் இடம் வரை திருமண் இட்டிருப்பர். அதனாலேயே ‘நாமக்காரங்க வூடு’ என்று பெயர் அந்த வீட்டிற்கு.

மெத்தையர் வீட்டுக்கு வெளியே தெருவடைத்து பந்தல் போட்டு கூம்பு ஒலிப்பெருக்கிகள் கட்டி ‘ரெக்கார்டு’ சுழல பாடல்கள் போடுவார்கள். பத்து நாட்கள் ஸ்ரீ ராமநவமி உற்சவம் நடத்துவார்கள். பத்து நாளும் ராமாயணச் சொற்பொழிவு நிகழ்த்தி முடிவில் சுண்டல் தருவார்கள். அதே தெருவில் இருந்ததாலும், கூம்பு ஒலிப்பெருக்கிப் பாடல்கள் ஈர்த்ததாலும், இறுதியில் கிடைக்கும் நான்கு கொண்டக்கடலை சுண்டலுக்காகவும் அந்தப் பந்தலுக்குப் போவேன் ஏழாம் வகுப்புச் சிறுவனான நான்.

புவனகிரியிலிருந்து அன்பழகன் சார் டிவிஎஸ் 50 வண்டியில் வந்து ராமாயணக் கதை சொற்பொழிவு செய்வார்.

‘உலகம் யாவையும் தாமுள வாக்கலும் நிலை பெறுத்தலும் நீக்கலும்… ‘ என்று கம்ப ராமாயணப் பாடல் சொல்லி தன் சொற்பொழிவைத் தொடங்குவார். அவரது ஆளுமையும் அன்று அவர் ராமாயணம் சொன்ன விதமும் இன்னும் என் கண்ணில் நெஞ்சில் நிற்கின்றன.

கலைக்கோட்டு முனிவனும், மந்தரையும், மாரீசனும், மாயமானும், மேகநாதனும், வாலி வதமும், சுக்ரீவனும், ‘கால் வண்ணம் இங்கு கண்டேன்’ வரிகளும் என கம்பனின் காப்பியம் இந்த ஏழாம் வகுப்பு சிறுவனுக்குள் இறங்கியது அவரால்தான். வளர வளர தேடிப் படித்ததெல்லாம் பின் வந்த காலங்களில் நடந்தது.

ராமனை அறிமுகம் செய்து வைத்தது மெத்தய்யர் வீடு நிகழ்த்திய ராமநவமி உற்சவமும் அங்கு சொற்பொழிவாற்றிய இரா அன்பழகன் சாரும். ராமநவமி என்றால் இவர்கள் நினைவு வந்துவிடும் எனக்கு.

இன்று ராமநவமி!

“உலகம் யாவையும் தாமுள வாக்கலும்
நிலை பெறுத்தலும் நீக்கலும் நீங்கலா
அலகிலா விளையாட்டுடை யார் அவர் தலைவர்
அன்னவர்க்கே சரண் நாங்களே.”

– பரமன் பச்சைமுத்து
சென்னை
27.03.2026

#SriRamaNavami #RamaNavami #Manakkudi #Chidambaram #பரமன்பச்சைமுத்து #ParamanLifeCoach #ParamanPachaimuthu

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *