3
காயல் என்றால் தெரியுமா உங்களுக்கு?
கல்கி இந்த ஏரியைப் பார்த்திருந்தால், ‘பொன்னியின் செல்வன்’ புதினத்தை வேறு மாதிரி எழுதியிருப்பார்.
…..
*3*
வானிலிருந்து மழையாக இறங்கும் நீர் மலைகளிலிருந்து ஓடி வரும் போது பாறைகளை உடைத்துப் பெயர்த்து உருட்டி இழைத்து இழைத்து துகள்களாக்கி மணலை உருவாக்கி, அவற்றை தன் படுகை முழுக்க நிரப்பி அப்படியே சங்கமிக்கும் கடலிலும் கொண்டு சேர்த்து விடுகிறது.
இதன் ‘ரிவர்ஸ் இஞ்சினியரிங்’ உருவாக்கங்கள் இன்னும் வியப்பு தருபவை.
கடலின் மணற்துகள்கள் காற்றாலும் கடல் அலையாலும் அடித்து வரப்பட்டு கொஞ்சம் கொஞ்சமாய் சேர்ந்து மணல் திட்டுகளை உருவாக்கி, கடலின் ஒரு பகுதியை கடலிலிருந்து பிரித்து தனிமைப் படுத்துவிடுகின்றன.
கடலிலிருந்து மணல் திட்டுகளால் பிரிக்கப்பட்டு, நன்னீரும் கடலின் உவர் நீரும் கலந்த நீர்நிலை காயல் ஏரி (Back water) (கழிமுகம்). இந்த நீர்நிலைகள் நிறைந்த நிலத்திற்கு காயல் (உப்பங்கழி) என்று பெயர்.
சேர நாட்டின் முக்கியமான ஒரு காயல் ஏரி வித்தியாசமான வடிவம் கொண்டது. பரந்து விரிந்த பெரிய ஏரியின் 8 திசைகளிலும் சடை பின்னல்களைப் போல நீண்டிருக்கும் நீர் வழிகள் கொண்டிருப்பதால் அதற்கு ‘அஷ்ட முடி’ ஏரி என்று பெயர் வந்தது.
‘பொன்னியின் செல்வன்’ முதல் அத்தியாயத்தில் வந்தியத்தேவனின் அறிமுகத்தின் போது ‘கடல் போல் விரிந்து பரந்த தண்ணீர் ஏரி’ என்று வீராணம் ஏரியைப் பார்த்து வியந்து எழுதியிருந்த அமரர் கல்கி இந்த அஷ்ட முடி ஏரியைப் பார்த்தால் வாய் பிளந்து மயங்கியிருப்பார். அவ்வளவு பெரிய வீராணம், இந்த அஷ்ட முடி ஏரிக்கு வெறும் குட்டி. வீராணம் 14 சதுர கிமீ, அஷ்டமுடி 62 சதுர கிமீ என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். ஆழம் 21 அடி!
அஷ்டமுடி, படகுச் சவாரிப் பயணம் வேண்டுவோரின் விருப்பத் தேர்வு. பயணமென்றால் இப்படி ஏறி அப்படி இறங்குதல் அல்ல. சிதம்பரத்திலிருந்து கடலூர் செல்லும் நேரத்திற்கு திகட்டத் திகட்ட படகில் பயணித்துத் திளைக்கிறார்கள்.
பல்லுயிர்ப் பெருக்கத்திற்கும், சூழலுக்கும், இந்தப் பகுதி மக்களின் வாழ்வாதாரத்திற்கும் பொருளாதாரத்திற்கும் உதவும் இந்த அஷ்டமுடி ஏரியால் ஒரு பெரும் பிரச்சினையும் உண்டு.
2004 ஆழிப் பேரலை எனும் சுனாமி வந்த போது இன்றளவும் மீள முடியா ஒரு பயங்கரத்தை அது நிகழ்த்தியது. அது…
(தொடர்வோம்)
*:Exploring CHERAS*
-பரமன் பச்சைமுத்து
அஷ்டமுடி, கேரளம்
16.05.2026