சேடல்

‘சேடல்’ தெரியுமா உங்களுக்கு? மதுரையை காவல் செய்த நாலு பூதங்களில் ஒன்று சேடலை சூடியதாக சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் குறிப்பிட்டிருக்கிறார்.

பூவில் பொதுவாகவே அதன் ஏடும் சூலகமும்தான் அழகென்றால், ‘பொதுவா அப்பெடில்லாம் முடிவு பண்ணாதே, என் காம்பைப் பாரு!’ என்பது போல பளீரென்று அடிக்கிறது பவழமல்லி.

தேக்கு மர இலைகளையும் பூவையும் அதன் பச்சை கலவைகளையும் கவனித்து அசந்து பல ஆண்டுகளுக்கு முன்பு கோட் காம்பினேஷன் கற்றது போலவே, பவழமல்லியிலிருந்தும் வண்ணக் கலவை கற்றிருக்கிறேன்.

‘அம்மா! இந்த ஃப்ளவர் அடியில பாரேன், ஒரு மாதிரி சூப்பரா ஆரஞ்ச் கலர்ல இருக்கு!’ என்று ஆர்வம் பொங்க பேசியபடி போகிறான் சிறுவன் ஒருவன் தன் தாயோடு.

‘அடேய்! அதுதான் பவழம் வண்ணம். அதனாலதான் அதுக்குப் பேர் பவழமல்லி!’ என்று சொல்லி விட ஆசை. ஆனால் கடந்து சென்றுவிட்டார்கள் கோவிலை விட்டு வெளியே.

காலையில் மலரும் தாமரையை குடும்பப் பெண்ணாகவும், மாலையில் இரவில் மலரும் ஆம்பலை பொருட்பெண்டிராகவும் புனைவு செய்து ஊர்ப்புறங்களில் கதைகள் இருப்பது போலவே, இரவில் பூத்து காலையில் உதிரும் பவழமல்லிக்கும் கதைகள் உண்டு. சூரியனை விரும்பிய பெண் கதையும், கிருஷ்ணன் – பாமா – ருக்மினி கதையும் ஊர்ப்புறங்களில் பாட்டிகளால் வழிவழியாக கடத்தப்பட்ட கதைகள்.

மரமல்லியையைப் போலவே இரவில் பூக்கும் பவழமல்லி மணம் மிக்கது.
காஞ்சிக்கு வெளியே திரிவேணி சங்கமத்தினருகில் (பாலாறு, செய்யாறு, வேகவதி) பழையசீவரத்தில் இருக்கும் பெருமாள், காஞ்சி வரதரை நோக்கி நிற்பார், ‘தண்ணீர் அட்டகாசமாக ஓடும்!’ என்று முன்பு எப்போதோ நான் சொன்னதை நினைவில் கொண்டு, காஞ்சிக்கு வகுப்பெடுக்க (பேட்ச் 89) பயணித்த போது வழியில் ‘சார், இங்கதான அந்த கோவில், அந்த ஆறு?’ என்று நினைவூட்டினார் என் ஓட்டுநர். ‘வுடுறா வண்டிய!’ என்பது போல திரும்பினோம்.

கோடையின் தொடக்கம்… மணல் வெளியாக பரந்து நீரின்றி கிடக்கிறது திரிவேணி சங்கமம். இந்த திரிவேணியில் ஏழாண்டுகளுக்கு முன்பு மீன் பிடித்துக் கொண்டிருந்த ஒரு சிறுவனோடு நீர் விளையாட்டு புரிந்தது நினைவுக்கு வருகிறது.

கோவிலுக்கு உள்ளே போனால், மடியில் தாயாரை அமர்த்திக் கொண்டு காஞ்சியின் வரதராசர் திசை நோக்கி காட்சி தருகிறார் லட்சுமி நரசிம்மர்.

‘திரை போட போறேன். வாங்கோ, பெருமாளப் பாருங்கோ!’ என்று அழைத்த அர்ச்சகர் பெருமாளின் காலடியிலிருந்து சேகரித்து தட்டில் போட்டுக் கொணர்ந்து அள்ளி கையில் தந்தது … பவழமல்லி!

( காஞ்சியின் வரதராசர் பொங்கலன்று பரிவேட்டைக்காக இந்த ஆலயத்திற்கு வரும் உற்சவம் இன்றும் தொடர்கிறது)

செந்நிறத்தை கொண்டிருப்பதால் சேடல் என்று அக்காலத்தில் அழைக்கப்பட்டது பவழமல்லி என்கிறது ஓர் ஆராய்ச்சி!

மல்லியே… பவழமல்லியே!

– பரமன் பச்சைமுத்து
பழைய சீவரம்
20.03.2026

#PazhaiyaSeevaram #ParamanPachaimuthu #பரமன்பச்சைமுத்து #ParamanLifeCoach #ParamanTouring #Kanchipuram

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *