உறவுகளில் ஏற்படும் பிரச்சினைகளுக்கு ஒரு முக்கிய காரணம் – செவி கொடாமை!
காது கொடுத்துக் கேட்டல் என்பது இல்லாததால் ஏற்படும் இழப்புகள் பல.
வேண்டியவர்கள் சொல்வதை கேட்கும் முன்னேயே ‘ஐ நோ!’ ‘எனக்குத் தெரியும்!’ என தெறித்து வரும் வார்த்தைகள் காதையும் மனதையும் சாத்தி அடைத்து விடுகிறது. எதுவும் உள்ளே நுழையும் சாத்தியத்தையே சாத்திவிடுகிறது அடைத்து.
சொல்வதை காது கொடுத்துக் கேட்பதில் இழப்பு ஒன்றும் இல்லை. ஆதாயங்களே அதிகம்.
உள்ளே குறை கொண்டுள்ளவர்களால், அரை வேக்காடுகளால், ‘இவங்க சொல்லிதான் எனக்கு தெரியும் என்றால் எனக்கு மதிப்பு கொறஞ்சிடும்!’ என்ற எண்ணம் கொண்டவர்களால், இறுமாப்பு கொண்டவர்களால், மன அழுத்தம் வந்து அதனால் உளைச்சலில் உச்சத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பவர்களால்… அடுத்தவர் சொல்வதை கேட்கவே முடியாது. ஒரு நத்தை போல ஓட்டுக்குள் சுருங்கிக் கொள்வார்கள், தங்களை மூடிக் கொள்வார்கள்.
சில பதின்ம வயது பிள்ளைகளால், வளர்ந்த பெரியவர்கள் ஆனாலும் சிலர் மீது அதீத எதிர்ப்பு வெறுப்பு உணர்ச்சி கொண்டவர்களாலும் சம்மந்தப் பட்டவர்களிடம் இயல்பாக செவி மடுக்க முடியாது. சுருங்கச் சொல்வதானால், சிறு பிள்ளைகளாலும் சிறுபிள்ளைத் தனமானவர்களாலும் செவி மடுக்க முடியாது.
அடுத்தவர் பக்கம் செவி மடுத்தல் என்பது அக்கறை. அடுத்தவர் பக்கம் செவி மடுத்தல் அவர் பக்கத்து சங்கதியை மட்டுமல்ல, நம்மால் பார்க்க முடியா நம் பக்கத்து சங்கதியைப் பற்றியும் இருக்கலாமே. அதை காது கொடுத்துக் கேட்டால் நமக்குதானே நன்மை பயக்கும்.
கூடவே இருந்து கடைசி வரை குறையை சொல்லாமலே இருந்து விட்டவர்கள் செய்வது எவ்வவளவு பாதிப்பைத் தருமோ, அதற்கு ஈடான பாதிப்பைத் தரும் கடைசி வரை காது கொடுக்காமலே இருப்பதும்.
தினமும் ஒன்றாய்ப் பயணிப்பவருக்கே ஆயிரம் இருக்கும் சொல்வதற்கும் பகிர்வதற்கும். அதனால்தான் ஒரு காதலிக்கும் காதலனுக்கும் இடையே வரும் காட்சியில் ‘சினேகிதனே… சினேகிதனே… செவி கொடு சினேகிதனே! சின்னச் சின்னதாய் கோரிக்கைகள்…’ என்று எழுதினார் கவிஞர் வைரமுத்து.
அடுத்தவர் சொல்வதை செவி மடுப்பது உறவுக்கும் நமக்கும் நல்லதே செய்யும். அவர் சொல்வதை ஏற்றுக் கொள்வதா இல்லையா என்பது நமது முடிவு. முதலில் செவிமடுக்க வேண்டும் என்பது அறிவு தெளிவு.
‘எப்பொருள் யார்யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு’ என்று வள்ளுவப் பேராசான் சொன்னது அடுத்த நிலை. அதற்கும் முந்தைய நிலை ‘கேட்பின்… கேட்க வேண்டும்’. மெய்ப்பொருள் காண்பதெல்லாம் அதற்கப்புறம்.
வாழ்க! வளர்க!
– பரமன் பச்சைமுத்து
30.09.2026
#relationshipadvice #relationshipcoach #Love #ParamanLifeCoach #ParamanPachaimuthu #பரமன்பச்சைமுத்து #Growth #StayWithPositive #listening
