பெருவுடையார் வளாகத்தில்

தஞ்சை பெருவுடையார் கோவிலில் ராஜராஜன் நந்தியை வைக்கவே இல்லை, அது பிற்பாடு வந்த மராத்தியர்களோ மற்றவர்களோ வைத்தது என்று எழுதிவிட்டுப் போய்விட்டார் பாலகுமாரன்.

சிவாஜி கணேசன் நடித்த தமிழ்சினிமாவின் சினிமாஸ்கோப் ‘ராஜராஜ சோழன்’ திரைப்படத்தில் முதல் காட்சியே ராஜராஜன் மேற்பார்வையில் நந்தி செய்வதாகவும், அதை வடிக்கும் சிற்பிக்கு ராஜராஜனே வெற்றிலை மடித்துத் தருவதாகவும் இருக்கும்.

கொஞ்சம் தகவல்களைத் திரட்டிக் கொண்டு அவரவர் கற்பனைக்கு புனைவு செய்து எழுதிப் போவதால், பின்னாளில் வருகிறவர்கள் கவனமாக கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது.

கல்கி, சாண்டில்யன், பால குமாரன், சு வெங்கடேசன் போன்ற புனைவு எழுத்தாளர்களையும் ரசித்து அனுபவிக்கலாம், குடவாயில் பாலசுப்பிரமணியன், இரா கிருஷ்ணமூர்த்தி, நீலகண்ட சாஸ்திரி போன்ற ஆய்வாளர்களின் எழுத்தையும் ஆழமாக உள்வாங்கி வரலாற்றை அறிந்து கொள்ளலாம். ஆனால் ‘யார் யார் வாய் கேட்பினும் மெய்ப்பொருள் காண்பது அறிவு’ என்பது படி… மெய்ப்பொருள் காண்பதே அறிவு.

இல்லையென்றால் பிற்காலச் சோழர்களின் வீழ்ச்சிக்குப் பிறகு மேலெழுந்த ஜடாவர்மன் சுந்தர பாண்டியன் தஞ்சைக்கு வந்து ‘வரலாற்றில் ராஜராஜனும் சோழர்களும் வாழ்த்ததற்கோ இருந்ததற்கோ அடையாளமே இருக்கக் கூடாது!’ என்று கட்டிடங்களை, அடையாளங்களை, ராஜராஜனின் சமாதியை என அனைத்தையும் அடித்து நொறுக்கி மண்ணோடு மண்ணாக்கி ஏர் பூட்டி உழுது பேய்க்கடுகு விதைத்தான் என்று ஆராய்ச்சியாளர்கள் சிலர் சொல்வதை கவனிக்காமல் உடையாளூரில் ஒரு வயலில் கிடக்கும் சிவலிங்கத்தை வைத்துக் கொண்டு ‘இதுதான் ராஜராஜன் சமாதி!’ என்று சொல்லிக்கொண்டு இருப்போமா, சிலர் அப்படி சொல்வதையும் நம்புவோமா?

(மலர்ச்சி மாணவர் அசோக்குமாரின் புதிய நிறுவனமான ‘வள்ளியப்பால் குழுமம்’ திறப்பு விழாவிற்காக தஞ்சை வந்திருந்த போது, மலர்ச்சி மாணவிகள் இருவரோடு தஞ்சை கோயில் வளாகத்தில் சில நிமிடங்கள் இருந்தோம்)

எத்தனை முறை வந்தாலும் புதிதாய் ஏதோவொன்று கண்ணில் படவே செய்கிறது பெருவுடையார் கோவிலில்.

– பரமன் பச்சைமுத்து
தஞ்சாவூர்,
25.10.2026

#ParamanTouring #ParamanPachaimuthu #Rajarajachozhan #Tanjore #cholas

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *