ஜெயிலர் 2 – திரை விமர்சனம் : பரமன் பச்சைமுத்து

ஏற்கனவே வெளிவந்து வெற்றி பெற்ற ஒரு படத்திற்கு ‘சீக்வல்’ படம் எப்படி எடுக்க வேண்டும் என்பதற்கு ஜெயிலர் 2 ஆகச் சிறந்த உதாரணம். இரண்டாம் பாகமாக வந்த படங்கள் பெரிதாக சோபித்ததில்லை என்று நிலை கொண்ட இந்தியத் திரையுலகில், முதல் படத்திலிருந்து நீட்டிக் கொண்டிருந்த நூல்களை கோர்த்து கயிறு திரித்து முடிச்சுகள் போட்டும் அவிழ்த்தும் திரைக்கதை செய்து முதல் பாகமான ஜெயிலர் 1ஐவிட சிறப்பாக்கித் தந்து அதகளப்படுத்தியிருக்கிறார் இயக்குநர் நெல்சன்.

ரஜினி….. ரஜிஜிஜினி….! 75 வயதில் மொத்த படத்தையும் தூக்கி நிறுத்தி அட்டகாசமாகக் கொண்டு போகும் ஆளுமையாகவே இன்னும். தேவைப்பட்ட இடத்தில் இன்னும் தனது பழைய பாணியிலேயே நீண்ட நெடிய வசனங்களை பேசுமளவிற்கு (குறிப்பாய் வில்லன் திரையில் பார்த்துக் கொண்டிருக்கும் போது வெடிக்கும் காட்சி) நுரையீரலையும் உடல் நலத்தையும் பேணி வைத்துள்ளார். ரஜினி எனர்ஜி! தாத்தா தலைமுறை தொடங்கி, ஜென்ஸீ மட்டுமல்ல ஜென் ஆல்ஃபா தலைமுறை வரை கொண்டாடும்படி நிற்கிறார். கண்கள், முகபாவனை, குரல், அவருடைய ‘அவுட் லுக் ஸ்கெலிட்டன்’ இவற்றை மட்டுமே வைத்துக் கொண்டு அசத்தியிருக்கிறார்.

‘பழக்கடை குமார்’ நமோ நாராயணன், யோகி பாபு, ரஜினி காட்சிகளில் தியேட்டர் சிரித்து வெடிக்கிறது. சுரேஷ் கிருஷ்ணா ரஜினிக்கு செய்வது போல இந்தக் காலத்து ரஜினிக்கு நெல்சன் பார்த்து பார்த்து செதுக்கியிருக்கிறார். ‘அவனுக்கு குதிரை எது, ராஜா எதுன்னே தெரியல!’ என வில்லனிடத்திலும் நகைச்சுவையை வைத்தது நெல்சன் அக்மார்க். தியேட்டர் கொண்டாடுகிறது. நமோ நாராயணன் பெரிதாக வருவார்.

போன படத்தின் தர்மனுக்கு அடுத்த நிலை வில்லனாக சுராஜ் நன்று. அருமையாகச் செய்திருக்கிறார். எதை படத்தின் க்ளைமாக்ஸ்ஸாக நினைப்போமோ அதை படத்தின் பாதியிலேயே கொண்டு வந்து வைத்து எதிர்பார்ப்பை எகிற வைத்த திரைக்கதை சுவராசியம் கூட்டுகிறது.

படத்திற்குள் நுழையும் முன்பு ‘ஐயோ, எஸ்ஜே சூர்யான்னாலே ஒரே மாதிரி ஸ்டீரியோ டைப் ஆக்டிங்கா இருக்குமே!’ என்றபடி போனோம். அட… இதில் வேறு மாதிரி!

அந்தக் கால டிஸ்கோ டான்சர் ஹீரோ மிதுன் சக்கரவர்த்தி நல்ல பாத்திரத்தில். வித்யா பாலன் நன்று.

ஹிரித்திக் ரோஷன் தன் பழைய ‘தூமச்சாலே!’ பாடலில் ஒரு ஸ்டெப் போட்டிருக்கலாம்.

‘ஏம்ப்பா போலீஸ்காரங்களே கிடையாதா படத்துல, ஒண்ணுமே செய்ய மாட்டாங்களா, எல்லாம் சும்மா வர்றவங்கதானா?’ ‘ஜெயிலர் ஜெயிலரா இருந்த போது எத்தனை பேருக்குதான்டா ஹெல்ப் பண்ணாரு!?’ அடிவாங்கும் சீனில் பின்னணி பாடல் அந்த அளவுக்கு எடுக்கவில்லை ( ‘முத்து’ படத்திலும், ‘அருணாச்சலம்’ படத்திலும் தூக்கிடும் இதே மாதிரி சீன்!) போல பல மைனஸ்கள் படத்தில் இருந்தாலும், ரஜினி ஸ்க்ரீன் ப்ரசன்ஸும் நெல்சனின் ‘அது அதற்கான மீட்டரில் அது அது’ என்னும் திரைக்கதை, அனிருத் தரும் பின்னணி என எல்லாமும் சேர்ந்து சரி செய்து தூக்கி நிறுத்தி விடுகின்றன.

அனிருத் ரஜினிக்கென்றால் கூடுதலாக குதித்து விடுகிறார்.
‘ஸக்கு ஸெரா… ஸக்கு ஸெரா…’ தீம் அட்டகாசம்.

கடைசி சீனில் ரஜினி சொல்லும்
‘அம்பது வருஷமா…’ வசனம் பொறி பறக்கிறது ரசிகர்களுக்கு.

ரஜினிக்கு பாட்ஷா… படையப்பா… வரிசையில் ஜெயிலர் 2!

வி டாக்கீஸ் வெர்டிக்ட் : ‘ஜெயிலர் 2 ‘ – அதகளம். பக்கா மாஸ், பொழுது போக்கு. ரசிப்பீர்கள். பாருங்கள்

– திரை விமர்சனம் : பரமன் பச்சைமுத்து

#Jailer2 #Jailer2Review #ParamanMovieReview #ParamanLifeCoach #ParamanPachaimuthu #Rajinikanth #SuperStar #Rajini #anirudh #NelsonDilipkumar

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *