விஷ்ணுவை வணங்கும் தெலுங்கு வைணவர்களும், கன்னட வைணவர்களும் கூட தமிழில் இருக்கும் சில வரிகளைத்தான் தினமும் படிக்கிறார்கள் (அனைத்து மொழி பேசும் வைணவர்களும் கூட!) என்பது உங்களுக்குத் தெரியுமா?
ஆன்ற தமிழ் மறை, ஐந்தாம் வேதம், திராவிட வேதம், திராவிட பிரபந்தம் என்றெல்லாம் குறிப்பிடப்படுவது எது?
….
10ஆம் நூற்றாண்டில், சோழ நாட்டின் ஒரு சதுர்வேதிமங்கலமாக இருந்த வீரநாராயணபுரத்தில் வாழ்ந்த தினசரி யோகப் பயிற்சி செய்த ரங்கநாதன் அந்த ஊர் விண்ணகரக் கோவிலின் பெருமாளை போற்றி வழிபட்டு வந்த வேளையில், கர்நாடகத்திலிருந்து பெருமாளை வணங்க அந்த விண்ணகரத்திற்கு வந்த சிலர் பெருமாளைத் துதித்துப் பாடிய சில பாடல்களைக் கேட்க நேர்ந்தது. அந்தப் பாடல்களில் உள்ளம் கரைந்து ஈர்க்கப்பட்டவர், அந்தப் பாடல்களைப் பற்றி விசாரிக்கையில், ‘இது கும்பகோணத்தில் இருந்து எங்க குருநாதர் வழியாக சொல்லித் தரப்பட்டவை இவை. இந்த பத்துபாடல்கள்தான் எங்களுக்குத் தெரியும்!’ என்று பதில் வர, உயிரின் தேடலாகவே அதைத் தொடங்கினார். (குடந்தை சாரங்கபாணி கோவிலுக்கு இவர் சென்றிருந்த போது, அங்கிருந்த அர்ச்சகர்கள் ‘ஆரவமுதே!’ (திருவாய்மொழி) பாடலைக் கேட்டு அதைப் பற்றி விசாரித்தார் என்றும் ஒரு கதை உள்ளது). பாடலின் வரிகளில் வரும் ‘சடகோபன்’ என்பதை கவனித்து விசாரிக்கையில், அது ஆழ்வார் திருநகரியில் வாழ்ந்த ‘மாறன் சடகோபன்’ என்பதை கண்டுணர்ந்து, ஆழ்வார்திருநகரி போனால் ஒருவேளை அவற்றைப் பற்றி மேலும் தகவல் கிடைக்கலாம் என்று பயணிக்கிறார்.
3ஆம் நூற்றாண்டிலிருந்து 9ஆம் நூற்றாண்டு வரை வாழ்ந்த 12 ஆழ்வார்கள் பெருமாள் மீது இயற்றிய பாசுரங்கள் பதிவு இல்லாமல் மறைந்து போனதும் அவற்றில் ஒருவரான நம்மாழ்வாரின் (மாறன் சடகோபன்) 1000 பாடல்களில் ஒரு பகுதி இந்த 10 பாடல்கள் என்பதையும் அறிந்து மேலும் உயிர் உருகத் தவிக்கிறார். ஆனால், எப்படிப் பெறுவது எங்கு கண்டுபிடிப்பது என்று திசைதெரியாமல் ஒரு புளியமரத்தின் (உறங்காப்புளி) அடியில் அமர்ந்து தவிக்கிறார்.
நம்மாழ்வாரே அருள் புரிந்தால்தான் உண்டு என்ற நிலையில் மதுரகவியாழ்வார் பாடிய 10 பாடல்களை நம்மாழ்வாரை நினைத்து பாடித் தவம் புரிகிறார் ( நினைவில் கொள்ள ‘யோகப் பயிற்சிகள்’ செய்பவர்). 1200 முறை பாடினார் என்று ஒரு குறிப்பு சொல்கிறது.
ஆயிரம் பாடல்கள் வேண்டி உயிர் உருகத் தவம் செய்தவர் முன்னே நம்மாழ்வாரே வந்தாரம், அவர் பாடிய ஆயிரம் பாடல்கள் மட்டுமல்ல ஆழ்வார்கள் பாடிய நாலாயிரம் பாடலையும் கற்றுத் தந்தாராம்.
தமிழுலகிற்கும் மனித குலத்திற்குமாக மீட்டுக் கொண்டு வந்த அந்த நாலாயிரம் பாடல்களும் இனி மறைந்து போகாமல் இருக்க அதை இசையோடு தர வேண்டும் என்று உணர்ந்து அதை செயல்படுத்தி, உலகிற்கு அவற்றைத் தந்தார்.
தமிழின் வேதமாக வைணவம் போற்றும் அந்தப் பாடல்களுக்கு ‘நாலாயிர திவ்யப் பிரபந்தம்’ என்று பெயர் என்பது உங்களுக்குப் புரிந்திருக்கும்.
ரங்கநாதன் என்ற பெயர் கொண்ட அந்த அருளாளரை வைணவ உலகம் வேறு பெயரில் விளித்துப் போற்றியது. அவரது அந்தப் பெயர் ‘நாதமுனி’
உலகமெங்கிலும் வைணவர்கள் தங்கள் மரபிலும், வைணவக் கோவில்களிலும் ஆதாரமாகப் படிப்பது நாதமுனிகள் மீட்டுக் கொண்டு வந்த இந்த ‘நாலாயிரத் திவ்ய பிரபந்தம்’ வரிகளைத்தான்.
……
பராந்தகன், ராஜராஜன், ராஜேந்திரன் காலங்களில் வீரநாரயணபுரம் என்றிருந்த இந்த ஊர், குலோத்துங்க சோழன் காலத்திலும், கிருஷ்ண தேவராயர் கல்வெட்டிகளிலும் ‘காட்டும் மன்னனார் கோயில்’ என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
பூமியில் அவதரித்து வளர்ந்த லட்சுமி தேவியை மணப்பதற்காக பல மன்னர்கள் வந்திருந்த சுயம்வரத்தில் கருடனில் அமர்ந்து மன்னனாக வந்த நாராயணன், லட்சுமியை கைப்பற்றிக் கொண்டு மற்ற மன்னர்களை தனது வாளால் போரிட்டு அடக்கினார். வீரமான மன்னனாக வந்தவர், வீர நாராயணப் பெருமாள் என்றும் மன்னனார், மன்னன் என்றும் அழைக்கப்பட்டார். காட்டு(ம்) மன்(ன)னார்… காட்டு மன்னார் குடி, காட்டு மன்னார் கோயில்!
………
‘இந்தக் கதையெல்லாம் இங்கெதற்கு பரமன்?’ என்கிறீர்களா?
அருளாளர் நாதமுனிகள் அவதரித்த வீரநாராயணபுரத்தில், அவரும் அவர் வழியே வந்த பெரும் ஆச்சார்யார்களும் வணங்கி வழிபட்ட வீரநாராயணப் பெருமாள் கோவிலுக்கு சென்று வணங்கும் பேறு பெற்றோம் நாம்.
நாதமுனிகள் வழியே வந்த இந்த ஊரின் புகழ்பெற்ற ஆச்சாரியர் பற்றி எழுத இந்தப் பதிவில் இடமில்லை. பிறிதொரு சமயம்!
‘பச்சை மாமலை போல் மேனி…’ ‘மாலே மணிவண்ணா…’ ‘மார்கழித் திங்கள்’ என பாசுரங்களை இன்று நீங்கள் பாடுவதற்கும் கேட்பதற்கும் காரணம் நாதமுனிகள்! அவரை வணங்குகிறோம்.
பரமன் பச்சைமுத்து
25.09.2025
#ParamanLifeCoach #பரமன்பச்சைமுத்து #ParamanPachaimuthu #பரமன் #ParamanTouring #kattumannarkoil #Nathamunigal #Nammazhvar #Alavanthar #Ramanujar #vaishnavism #வைணவம் #நாதமுனிகள் #நாலாயிரதிவ்யபிரபந்தம்