ஓரம் போ! ஓரம் போ…

புதுக்கவிதை, போக்கிரி ராஜா, ரங்கா, சகலகலா வல்லவன், வாழ்வே மாயம் என்று ரஜினியும் கமலும் தமிழ் சினிமாவை ஒளிர வைத்துக் கொண்டிருந்த காலத்தில் கால் சட்டையணிந்த சிறுவனான நான் என்னை விட உயரமான ராலே சைக்கிளை ராஜவேலு சித்தப்பாவும் கருணாகரன் மாமாவும் பின்புறம் பிடித்துக் கொள்ள குரங்குப் பெடல் ஓட்டிப் பழகினேன். நிறைய விழுதல், எழுதல், விசும்புதல், கதறுதல் கடந்து
கற்றுக் கொண்ட பிறகு சைக்கிள் மீது காதலே வந்தது, காற்றாய் பறக்கும் புது சுதந்திரம் வந்தது. காலை கண்விழித்ததிலிருந்து இரவு கண் அயரும் வரை நாள் முழுவதும் சைக்கிள்தான்.

எத்தனை முறை விழுந்தும், எத்தனை அடி, வெட்டு, காயம், தையல்கள் பெற்றும் சைக்கிள் மீதான மோகமும் ஈர்ப்பும் குறைந்ததே இல்லை அந்நாட்களில்.

நாம் தெருவில் சைக்கிள் ஓட்டும்போதெல்லாம் எவரேனும் ‘ஓரம் போ ஓரம் போ.. ருக்குமணி வண்டி வருது!’ பாடலை சத்தமாகப் பாடுவார்கள்.

ஆயுத பூசையன்று குளத்திலோ வாய்க்காலிலோ சைக்கிளை கழுவி, பூவிட்டு பொட்டிட்டு பலூன்கள் கட்டி டபடபடபவென்று ஓட்டிச் செல்லும் அலப்பறைகள் செய்வோர் அதிகம் அந்நாட்களில். எல்லோரிடமும் சைக்கிளும் சில பெரிய பணக்காரர்களிடம் பைக்கும் இருக்கும் அப்போது. எல்லோரிடமும் பைக்கும் சில பெரிய பணக்காரர்களிடம் சைக்கிளும் இருக்கிறது இப்போது. சைக்கிள்கள் குறைந்து போயின இப்போது. சைக்கிள் ஓட்டும் வாய்ப்புகள் அற்ற வாழ்க்கையாகிப் போனது எனக்கும்.

சமீபத்தில் பாக்தோரா விமான நிலையத்திலிருந்து சிலிகுரி வழியே சிக்கிம் நோக்கி சாலைப் பயணம் செய்த போது மேற்கு வங்கம் முழுக்க இன்னமும் சைக்கிளைப் பயன்படுத்தும் மக்கள் அதிகம் இருப்பதை கண்டு அதிசயப்பட்டேன். பொருளாதார நிலை!?

கருணாகர மாமாவும் ராஜவேலு சித்தப்பாவும் எனக்கு சைக்கிளை பின்னே பிடித்ததைப் போல, 42 ஆண்டுகள் கழித்து அதே மணக்குடியில் இன்று இவனுக்கு நான் பிடிக்கிறேன். சிறுவனின் வாழ்வில் சைக்கிள் நுழைகிறது. வாழ்க்கை ஒரு ‘சைக்கிள்’!

– பரமன் பச்சைமுத்து
மணக்குடி
18.10.2025

#ParamanTouring #ParamanLifeCoach #பரமன்பச்சைமுத்து #ParamanPachaimuthu #Manakkudi #Dhuruvan #BiCycle

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *