ஒரு சிறுகதை என்றால் முடிவு எப்படியிருக்க வேண்டும்?

கேள்வி: ஒரு சிறுகதை என்றால் முடிவு எப்படியிருக்க வேண்டும்?

பரமன்: சிறுகதையென்றால் இப்படித் தொடங்க வேண்டும், வாசிப்பவரை உள்ளே இழுக்க வேண்டும், இப்படி முடிய வேண்டும் என்பதெல்லாம் பொதுவாகக் கொள்ளப்படும் வரையரைகள் என்றாலும் இதில் எதிலும் உடன்படாமல் எழுதி சிறந்தவர்கள் பலர் உண்டு.

எழுதுகிறவர் கொள்ளும் முறையை மனப்பாங்கைப் பொறுத்து கதையின் வடிவம் மாறிவிடுகிறது.

ஒரு கதையை விரித்து உள்ளே பயணித்துக் கொண்டிருக்கும் வாசகருக்கு கடைசி வரிகளில் பெரும் திருப்பத்தைத் தந்து ‘பகீர்’ ஏற்படுத்தும் சுஜாதாவின் தூண்டில் கதைகளைப் போலவே எல்லோரும் எழுதமாட்டார்களே.

விகடன் தீபாவளி மலரில் வண்ணதாசன் ‘அணில் குஞ்சுகள்’ என்றொரு சிறுகதை எழுதியிருக்கிறார்.

முதியவர் கோமணம் கட்டிக் கொண்டு கிணற்று மேட்டில் குளிக்கிறார். ஊரிலிருந்து ஒரு பெண்ணைக் கூட்டி வந்து விடுகிறான் பையன், தயிர் கடையும் வயதான அம்மா இருக்கிறார் அவ்வீட்டில். அந்த ஊரில் வைத்தியம் செய்து கொள்வதற்காக வந்துள்ள அந்தப் பெண் அவ்வீட்டின் வெந்நியறையில் குளித்து விட்டு வீட்டுக்கு வெளியே கயிற்றுக்கட்டிலில் அமர்ந்து பேசுகிறாள். இவ்வளவுதான் மொத்த கதையும். இதில் டிவிஸ்ட் எங்கே உள்ளது, முடிவு எங்கே உள்ளது. ஆனால்… இதை காட்சிப் படுத்தி நம்மை பயணப்படுத்தி கூட்டிப் போய் அங்கேயே நிறுத்திய விதத்தில் கிழித்து விடுகிறார் வண்ணதாசன்.

ஒரு படைப்பு என்பது வாசகருக்கு ஓர் அனுபவத்தைத் தர வேண்டும் அல்லது அல்லது எழுத்தாளர் தான் கொடுக்க விரும்பும் அனுபவத்தைக் கடத்துவதாக இருக்க வேண்டும் அல்லது ஒரு தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும்.

சுஜாதா கதை எழுவதில் பேராசான், பல விதங்களில் செய்திருப்பார், பல விதங்களை மற்றவர்களுக்குக் கற்றுத் தந்தார். ஒரு பக்கக் கதையல்ல, ஒரு வரியில் கதை எழுதி அதில் சஸ்பென்ஸ், திருப்பம் வைத்து காட்டியவர்.

அவரின் புகழ் பெற்ற வெறும் 6 வார்த்தைகளில் எழுதப்பட்ட கதை இதோ:

‘உலகின் கடைசி மனிதனின் அறைக் கதவு தட்டப்பட்டது’

( ‘வளர்ச்சி’ சுய முன்னேற்ற இதழில் இருந்து)

– பரமன் பச்சைமுத்து

#ParamanLifeCoach #பரமன்பச்சைமுத்து #மலர்ச்சி #Vikatan #WriterVannaDasan #WriterSujatha #Vannadasan #Writing

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *