நிகழ்வை ஏற்றுக் கொள்ளத் தொடங்குவதில் தொடங்குகிறது மன அமைதி.
நம் வாழ்வில் நடந்தேறும் எல்லாவற்றிற்கும் காரணம் தெரிவதில்லை நமக்கு. சிலவற்றை ஓரளவு தெரிந்து கொள்ளலாம். சில இப்போது புரியாது, எதிர்காலத்தில் தெரிந்து கொள்ளலாம். சில, எப்போதும் நமக்கு புரிவதே இல்லை.
நிதர்சனம் இப்படியிருக்க, விரும்பத்தகாத நிகழ்வுகளை ‘ஏன்?’ ‘எனக்கு ஏன்?’ என்ற கேள்விகளோடு எதிர்கொள்வதால் உள்ளம் குமையவே அதிக வாய்ப்பும் வழியும் ஏற்படும்.
நிகழ்வை ஏற்றுக் கொள்வதில் தொடங்குகிறது அமைதியின் ஒளிக் கீற்று. ‘இதான் நிதர்சனம், அடுத்து செய்ய வேண்டியது என்ன?’ என்று எழுதல், வாழ்வின் நகர்தலோடு இயைந்து நகர்தல் என்பவை அடுத்தடுத்து நடந்து விடுகிறது. தேங்குதல் இல்லா இயைந்து நகர்தல் அது.
அறுவை சிகிச்சை முடித்து வீடு வந்த அம்மா, ‘சரி! கட்டு பிரிக்க காயம் ஆற சில நாள் ஆகலாம். ஆவட்டும் போ, ஆவறத பாப்போம்!’ என்பது போல எழுந்து விட்டார்.
வீட்டுக்குள் நடைப் பயிற்சி, காலை செய்தித்தாள் வாசித்தல் என அன்றாடத்தில் தன்னை கரைத்துக் கொண்டு வாழ்க்கையோடு இயைந்து நகரத் தொடங்கி விட்டார்.
நடக்க வேண்டியதைப் பார்க்கிறவர்களுக்கு நடந்ததை நினைத்து வருந்த நேரமிருப்பதில்லை.
அப்துல் கலாம் ஜனாதிபதியாக இருந்த போது, இந்திய விமானப்படையின் மிக வேகமான போர் விமானத்தில் ( ஃபைட்டர் ஜெட்) பறந்தார். ஊடகங்கள் சிலாகித்துத் திளைத்தன. விமானத்திலிருந்து இறங்கி வந்த கலாமை நிறுத்தி கேள்வி கேட்டார் நிருபர் ஒருவர்.
‘இவ்ளோ வேகமா பறக்கற ஃபாஸ்டட் ஃபைட்டர் ஜெட்ல பறந்தீங்களே, பயமா இருந்ததா?’
‘பயப்படதுக்குல்லாம் நேரம் இல்ல!’
– பரமன் பச்சைமுத்து
சென்னை
26.02.2026
#AmirthamPachaimuthu #MuPachaimuthuArakkattalai #ParamanLifeCoach #பரமன்பச்சைமுத்து #ParamanPachaimuthu