சூடம் ஏத்தி…

‘யாவர்க்குமாம் இறைவர்க்கு ஒரு பச்சிலை’ என்கிறது திருமூலரின் திருமந்திரம். மலர், கனி, காய், அன்னம், நீர் என எதுவும் இல்லாத ஒரு நிலையில் ஒரேயொரு பச்சை இலையைப் பறித்துப் போட்டு இறைவரைத் தொழலாம்(கவனிக்க, ‘இறைவர்’ என்கிறார், ‘இறைவன்’ அல்ல!) என்கிறார் திருமூலர்.

இன்று ஏதுமில்லாத போது பச்சிலை இல்லை ஒரேயொரு சூடம் போதும், ஒரு சிறு கட்டி சூடம் ஏற்றித் தொழலாம் என்பது மக்களிடையே வந்து விட்ட நம்பிக்கை நடைமுறை.

‘கோட்டையை விட்டு வேட்டைக்குப் போகும் சுடலை மாடன் சாமி, சுடலை மாடன் சாமியும் நாந்தான் பூசாரி நீதான் சூடம் ஏற்றிக் காமி!’ என்கிறது இளையராஜாவின் அட்டகாச இசையில் அமைந்த ‘சின்னத்தாயி’ படப் பாடல். ‘சாமி என்றால் சூடம் காமி!’ என்பதான முறைமை வந்து விட்டது.

சூடம் இல்லாமல் சூடம் ஏற்றாமல் இறை வழிபாடே இல்லை என்ற நிலைக்கு வந்து விட்டது நடைமுறை. வீரன், ஐயனார் போன்ற கிராம காவல்தெய்வங்கள், மாரியம்மன், பொன்னியம்மன், பனையாத்தாள் போன்ற வடக்குப் பார்த்தமர்ந்த ஊர்ப்புறத்து எல்லை அம்மன்கள், குன்றுகளிலும் குவலயத்தின் இன்ன பிற இடங்களிலும் வேல் கொண்டு நிற்கும் முருகன்,கால் மடித்த சாஸ்தா, ஐயப்பன், காளி, அம்பலத்தில் ஆடும் சிவன், லிங்க ரூப சிவன் என எல்லாத் தெய்வ வழிபாட்டிலும் சூடம் இடம் பிடித்து விட்டது.

(இந்து மதத்திலிருந்து கொடிமரத்தை, தேரோட்டத்தை, மணியை உள்வாங்கிக் கொண்ட இந்திய கிருத்துவம் நாளை சூடத்தையும் உள்வாங்குமோ என்னவோ! எவர் கண்டார்!)

விண்ணகரக் கோவில்கள் எனப்படும் வைணவக் கோவில்களில் சூடம் ஏற்றி வழிபடுவதை நான் கண்டதில்லை (தில்லை கோவிந்தராஜப் பெருமாள், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில்களில் நான் பார்த்த வரையில். தெரிந்தவர்கள் சொல்லவும்). எண்ணெய் / நெய் தீபம் காட்டி வழிபடலே நடைபெறுகிறது அங்கு. (அதிலும் அந்த தீபாராதனையைக் கூட கண்ணில் ஒற்றாமல் விலகி நின்று பெருமாளை மட்டுமே தொழும் சுத்த வைணவர்களை நான் அறிவேன்.)

நீராட்டு முடித்து திரை விலக்கப்பட்ட உற்சவரை கண்டவர்கள், ‘தீபம் காட்டுவாங்க, பாத்துட்டு போயிடுவோம் இரு!’ என்று சூடம் ஏற்றி காட்டும் தீபத்திற்காக காத்திருப்பதை பல கோவில்களில் கண்டிருக்கிறேன்.
சூடம் இறைவழிபாட்டின் உச்சம் என்றாகி விட்டது.

கோவிலுக்கு உள்ளேயே செல்லாமல் வெளியே வாசற்படியில் சூடத்தை ஏற்றி ஒரு ‘குயிக் கும்பிடு’ போடுவோரும் உண்டு. நினைத்த இடத்தில் சூடத்தை ஏற்றி இடத்தை பாழ் பண்ணுகிறவர்களுக்காகவே ‘கொடிமரத்தினடியிலோ மற்ற இடங்களிலோ சூடம் ஏற்ற வேண்டாம்’ என்ற அறிவிப்புப் பலகையே உண்டு சில கோவில்களில்.

சூடம் சத்தியம் பிறழா நிலை கண்டுணர உதவும் சாதனமாக இருந்து வருகிறது கால காலமாக.

‘சூடம் ஏத்தி சத்தியம் பண்ணச் சொல்லு, நான் நம்பறேன்!’

உண்மைத் தன்மை தெரியாத நிலையில் உண்மை பிறழா நிலை கண்டுணற கிராமப்புறங்களில் வழக்கமாக கொள்ளப்படும் முறைமை இது.

சூடம் என்பது சாட்சி, அக்கினி சாட்சி. சூடம் என்பது தூய்மையானது, எரிந்து முடிந்த பின்னும் எரியும் போதும் கரியோ மாசுவோ இல்லாத தூய்மையைக் கொண்டது.

சூடம் என்பது சட்டென்று பற்றிக் கொள்ளும் திடப் பொருள். கொஞ்சம் போதித்தாலே பட்டென்று உள்வாங்கி விரித்துக் கொள்ளும் மாணவர்களை ‘கற்பூர புத்தி’ என்று விளிப்பது வழக்கம்.

சூடம் எனப்படும் கற்பூரத்தில் இரு வகைகள், ஒன்று சூடமாக ஏற்றி வழிபட, மற்றது இயற்கையில் உருவாக்கப்பட்ட பச்சைக் கற்பூரமாக நம் உணவுகளில் பயன்படுத்த.

கேரள ஆயுர் வேதத்திலும் கற்பூரம் தைலமாக பயன்படுகிறது. வீக்கம், உள்காயங்களை ஆற்றும் எண்ணெய்யாக, மசாஜ் எனப்படும் தொக்கன சிகிச்சையில் பயன்படுகிறது.

இந்திய வழிபாட்டில் அங்கமாகவே இருக்கும், உணவில் பல காலமாய் பயன்படுத்தப்படும், சுவாச தொற்று – தொக்கன சிகிச்சைகளுக்குப் பயன்படும் இந்தக் கற்பூரம் நம்மூர் மேட்டர் இல்லை என்றால் நீங்கள் நம்பித்தான் ஆக வேண்டும்.

இந்தக் கற்பூரம் எதிலிருந்து தயாரிக்கப் படுகிறது என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும்.

அமெரிக்காவின் அணுகுண்டு ஜப்பானின் நாகசாகி நகரையே நாசமாக்கி எரித்துப் பொசுக்கி கரியாகவும் சாம்பலாகவும் ஆக்கி வைத்திருக்க, ஒரேயொரு மரம் மட்டும் கிளைகள் எரிந்தும் தண்டு பிளந்தும் மறுபடியும் துளிர்த்து மீண்டு வளர்ந்து நின்றது. ஜப்பானியர்கள் அந்த மரத்தை புனிதமாகவே போற்றினர். கற்பூர மரம்!

சீனாவைத் தாயகமாகக் கொண்ட பளபள பச்சை இலக்களைக் கொண்ட
சின்னமோமம் கேம்ஃபோரா (Chinnamomum Camphora) என்ற கற்பூர மரத்தின் பட்டைகளிலிருந்து முதன்முதலில் உருவாக்கப்பட்டது கற்பூரம்.

சீன மண்ணில் பிறந்து சீனக் காடுகளில் பரவி, சீன மருத்துவத்தில் முக்கிய இடம் பிடித்த இந்த தாவரம், சீனாவிலிருந்து தைவான், கொரியா எனப் பரவினாலும் ஜப்பானியர்கள்தான் இதை எல்லா இடங்களிலும் வளர்த்து பயன்படுத்தினார்களாம்.

நெடுநெடுவென்றும் பரந்தும் வளரும் தன்மை கொண்ட இந்த மரம் காற்றின் கரிமிலவாயுவை உட்கொண்டு வளியை சுத்தம் செய்யும் மரமென்றும் கருதுகிறார்கள். ஜப்பானியர்கள் தொடக்கத்தில் இதை அழகுக்காக வளர்க்கத் தொடங்கி பிறகு ராசி மரமாகவே கருததத் தொடங்கிவிட்டனர்.

பளபள பச்சை இலைகளையும் கரும் கனிகளையும் கொண்ட இம்மரத்தை அலங்கார அழகு லேண்ட்ஸ்கேப்பிங் மரமாக பயிரிட்டு அமைக்கின்றனர் இன்றைய ஆர்க்கிடெக்ட்கள் என்றாலும் இது மருத்துவ மரம்.

இந்த மரத்தின் தண்டுகளிலிருந்து பெறப்படும் எண்ணெய்யை அலோபதி, சீன மருத்துவம் ஆகியவற்றில் பயன்பட்டு தற்போது கேரள ஆயுர்வேதத்திற்கும் வந்துவிட்டது. வீக்கத்தைக் குறைக்கும் மருந்தாகவும், சுவாச நோய்த் தொற்றை தடுக்கும் கிருமிநாசினியாகவும் இது பயன்படுகிறது.

சீனாவிலிருந்து பரவி தைவான், ஜப்பான் என பரவி வளர்ந்த மரத்தின் கற்பூரம்தான் நம் அன்றாட வாழ்வில் ஒரு இடத்தைப் பிடித்து நிற்கிறது. இந்த மரத்தின் பட்டைகளிலிருந்தும் இலைகளிலிருந்தும் தயாரிக்கப்படுகிறது மெழுகு போன்ற வெண்மையான கற்பூரம்.

வேதிமங்களால் உருவாக்கப்பட்ட செயற்கைக் கற்பூரங்கள் சந்தையில் வந்து விட்ட நிலையில், இப்போது கற்பூர மரங்கள் அலங்கார அழகு மரங்களாக வளர்க்கப்படுகின்றன, இந்தியாவில் குறிப்பாக குளிர் பிரதேசங்களில்.

கடல்மட்டத்திற்கு 900 மீட்டருக்கு மேல் இருக்கும் பெங்களூரு நகரில் பன்னேருகட்டா புலிகள் சரணாலயக் காட்டுக்கு வெளியே ஒரு குடியிருப்பில் கற்பூர மரங்களைக் கண்டு அதிசயித்தேன். படமெடுத்துக் கொண்டேன்.

பளபள பச்சை இலைகளையும் கருப்பு கனிகளையும் கொண்ட அலங்காரத்திற்காக நன்கு கத்தரிக்கப்பட்ட ஒரு மரத்தை நீங்கள் கடந்து செல்லலாம் நகரங்களில். அது ஒரு கற்பூர மரமாக இருக்கலாம், கவனிக்கவும்.

-பரமன் பச்சைமுத்து
பெங்களூரு
20.05.2025

#கற்பூரமரம் #கற்பூரம் #சூடம் #Camphora #ChinnamomumCaphora #ParamanTouring #Bengaluru #பரமன்பச்சைமுத்து #ParamanPachaimuthu #ParamanLifeCoach #Temples

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *