பயணங்களால் ஆனது வாழ்க்கை – பரமன் பச்சைமுத்து

பயணங்கள் மனிதனை வளர்க்கின்றன. பயணங்களே மனித குலத்தை வளர்த்தெடுத்துள்ளன. நியாண்டர்தாலிலிருந்து பரிமாணம் பெற்ற நேற்றைய மனிதன் பயணித்து பயணித்து நதிகளை கண்டறிந்ததால் நாகரீகங்கள் தோன்றின, சாகுபடி அறிவு வந்தது, மனித இனம் பல படிகள் உந்தித் தாவி வளர்ந்தது.

பயணம் தரும் அனுபவங்கள் மனிதனை விரிவடைய வைக்கின்றன. மரங்கள், மண், மலைகள், நதிகள், சமவெளிகள், வயல்கள், தரிசு நிலங்கள், கடல்புறங்கள், மனிதர்கள் என எல்லாமே அனுபவந்தானே!

மொறப்பநாட்டின் தாமிரபரணி படித்துறையில் முழங்கால் தண்ணீரில் நின்ற போது ஒரே நேரத்தில் பத்து பெரிய மீன்கள் வெடுக் வெடுக்கென்று கொத்தியது ஓர் அனுபவம் என்றால், துபாயிலிருந்து அஜ்மன் மாகாணத்திற்கு நீண்ட நெடிய பரந்து விரிந்த மணல் பாலைவனத்தின் ஊடே வேயப்பட்ட உயர்ந்த உறுதியான சாலையில் பயணித்தது வேறோர் அனுபவம்.

காக்கிநாடா அருகில் புரதொத்தூரில் பென்னா நதியில் அசல் தெலுங்கு பேசும் ஆந்திரத்து பெண்கள் மீன் பிடிப்பதைப் பார்த்து இறங்கி ‘நானும், நானும்!’ என்று துள்ளும் மீனை பிடித்துப் பார்த்தது ஓரணுபவம் என்றால், வாரணாசியில் பரந்து விரிந்து பொங்கி வேகமெடுத்துப் பாயும் கங்கையில் வெள்ளம் புரளும் சமயத்திலும் படகில் பயணித்து அதன் படிக்கட்டுகளை வேறு புறத்திலிருந்து பார்த்தது வேறனுபவம்.

சிக்கிமில் வாய் வழியே வெளியேறும் மூச்சே புகையாக மாறும் கடுங்குளிரில் இமயமலையின் மடியில் கழித்தது ஓரனுபவம் என்றால், இலங்கையின் மலையகத்தில் சீவநதியான கெலினி கங்கையில் ‘ரிவர் ராஃப்டிங்’கில் புரண்டு விழுந்து மூழ்கிக் களித்ததும், ஜப்பானின் டோக்கியோவில் நரித்தா நதியில் படகுப் பயணம் செய்து பைன் மரங்களைப் பார்த்ததும் வேறு அனுபவங்கள். புதுவை சுண்ணாம்பாற்றில் மகள்களோடு செய்த படகுப் பயணமும், தேக்கடியில் பேரியாற்றின் (முல்லை பெரியாறு) அணையருகே கிளப் மகிந்திரா ஏற்பாட்டில் நண்பன் முகுந்தனோடு செய்த படகுப் பயணமும், நீலாங்கரைக்கு அருகில் மீனவர்களின் படகில் சௌரியண்ணனோடும் செந்திலோடும் மீனவர்களோடும் கடலுக்குள் சென்று குதித்து நீந்தி மேலேறி வந்த பயணமும் வேறு வேறு அனுபவம்தானே.

அப்பாவை கூட்டிப் போய் கால் நனைத்த ராமேஸ்வரக் கடலும், அம்மாவோடு போன செந்தூர்க் கடலும் வேறு வேறு அனுபவங்கள் தந்தனவே.

அதே விமானம், அதே வான்வழி, அதே கார், அதே சாலை, அதே பகுதி… ஆனால் ஒவ்வொரு பயணமும் புதிது. ஒவ்வோர் அனுபவமும் வேறு.

வாழ்க்கை என்பது அனுபவங்களால் ஆனது, அதில் பல வித அனுபவங்களை அள்ளிப் போட்டு சுவையூட்டிவிடுகின்றன நாம் கொள்ளும் பயணங்கள்.

‘இப்படிப் பயணிக்கிறீங்களே பரமன்!’ என்கிறவர்களுக்கு என் பதில் – ‘1. நிறைய பயணிக்கும் படியான வாய்ப்பை தருகிறது நான் கொள்ளும் பணி. 2. பயணிக்கும் பருவம் போல.
3. வாழ்க்கை என்பதே ஒரு பயணம்தானே! நான் வாழ்க்கைப் பயணி!’

பயணங்களால் ஆனது வாழ்க்கை!

பயணிக்க இன்னும் நிறைய இருக்கிறது, பார்க்க பணி செய்ய இன்னும் நிறைய இருக்கிறது.

– பரமன் பச்சைமுத்து
புதுச்சேரி
25.11.2025

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *