இறைவனைச் சரண்டைதல் என்பது… : பரமன் பச்சைமுத்து

இறைவனைச் சரணடைதல் என்பது இறைவனுக்கானதல்ல, நமக்கானது. இறைவனைச் சரணடைதல் ‘அதான் ஒரு தடவ பண்ணிட்டோம்ல!’ என்பதான நிகழ்த்து அல்ல, ஒவ்வொரு முறையும் செய்ய வேண்டியது.

பெயரும் புகழும் செல்வமும் வரும் போது ‘நம்மால்தான் இவை’ என்று செருக்கும் இறுமாப்பும் நுழைந்து விடாமல் இருக்க, ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு கணமும் செய்ய வேண்டியது.

சில விஷயங்கள் எனக்குக் கொடுக்கப் பட்டிருக்கிறது, சில விஷயங்கள் என் வழியே நிகழ்த்தப்படுகிறது. கொடுக்கப்பட்ட அந்த சில விஷயங்களை சரியாகப் பயன்படுத்தி சரியானதை செய்ய வேண்டியதுதான் நான் செய்ய வேண்டியது.

உலகத்திற்கே பொதுமறையை தந்த வள்ளுவப் பேராசான் மிகத் தெளிவாக மிக அழகாக ஆணி அடித்தது போல் சொல்லிவிடுகிறான், இறைவனின் பாதங்களை பணியாத தலையால் பயனில்லை என்று, ‘கோளில் பொறியின் குணமிலவே எண் குணத்தான் தாளை வணங்காத் தலை’ என்னும் குறளில்.

வைணவத்தில் ஒருவரையொருவர் சந்திக்கும் போது சொல்லும் ‘அடியேன்…’ ‘ராமானுஜ தாசன்’, வெறும் வார்த்தையல்ல. அறிவை உணர்வை அடக்கமாக வைத்திருக்கும் எப்போதும் சரணடைந்து நிற்கும் ஒரு வழிமுறை, வாழ்வுமுறை.

‘இன்ஷா அல்லா!’ என்பது மதங்கடந்து பார்க்கப்பட வேண்டிய பொருள் பொதிந்த ஒரு வழிமுறை.

இறைவன் அனைத்தையும் கடந்தவன், அளவற்றவன், அளவற்ற வல்லமை கொண்டவன், அளவற்று அள்ளித் தருபவன். என்னை, நம்மை எப்போதும் காப்பவன்.

இறையே… சரணம்! இதோ ஒரு கருவியாய், நன்கு செயல்படும் ஒரு கருவியாய் உன் கையில் இருக்கிறேன். ‘உன் கடன் அடியேனையுந் தாங்குதல், என் கடன் பணி செய்து கிடப்பதே!’

சரணம்!

– பரமன் பச்சைமுத்து
புதுச்சேரி
02.12.2025

#ParamanLifeCoach #ParamanTouring #பரமன்பச்சைமுத்து #ParamanPachaimuthu #staypositive #Malarchi #புதுச்சேரி #MalarchiPuducherry

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *