‘கீழ உடாதீங்கோ!’
‘அது கையிலேருந்து விழுந்துடுது கொஞ்சம்!’
‘அத விடாம சாப்பிடனும். புண்ணியத்தை கீழ சிந்த வுடலாமா?’
….
‘காஞ்சியில் இருக்கிறோம்!வரதராஜரின் சன்னதிக்கு போய் சற்று அமர்வோமே!’ என்ற எண்ணத்தோடு போனேன்.
ஞாயிறு என்பதால் பெருங்கூட்டம், நீண்ண்ண்ட வரிசை வரதரைக் காண. ‘சரி, வெளியிலிருந்து வணங்குவோம், சற்று அமர்வோமே அவரது கோவில் வளகத்தில்!’ என்றெண்ணியபடி, கொடி மரத்தினடியில் உடலை கிடத்தி வணங்கினோம் ‘இறைவா!’ என்றபடி.
கருங்கல் மேடையை கண்டு அதில் அமர்ந்து விட்டோம். ‘சரி, மலர்ச்சி ‘அகவாசம்’ ரெஜிஸ்ட்ரேஷன் மெசேஜ் அனுப்புவோம்’
ஆந்திர, தெலுங்கான மக்களையும் அவர்களது உடை, மொழியையும் கவனித்துக் கொண்டு தனியே அமர்ந்திருக்கிறேன். கூட்டத்தில் தொலைந்து கரைந்து போவது பிடிக்கும் எனக்கு.
‘இங்கல்லாம் ராமானுஜர் நடந்திருப்பார்…!’
‘கேசவா, நாராயணா, மாதவா, கோவிந்தா….’
‘பெருமாளே!…’
கூட்டத்தில்… ஆனால் தனியே.
‘வாங்க, கோவிந்த பிரசாதம் வாங்கிக்கோங்க!’ தனியே அமர்ந்திருப்பவனை அழைக்கிறார் திருமண் காப்பிட்டிருக்கும் கோவில் பட்டர்.
‘யாரைக் கூப்பிடுகிறார்!’
‘உங்களைத்தான் வாங்கோ, திருவமுது வாங்கிக்கோங்க!’
எழுந்து போகிறேன். நீட்டிய என் கையில், கை நிறைய வைக்கப்படுகிறது… கோவிந்தப் பிரசாதம்!
மறுபடியும் கருங்கல் மேடையில் வந்தமர்கிறேன். கை நிறைய திருவமுது.
‘பெருமாளே! வந்ததுக்கு திருவமுது தந்து அருள் கொடுத்திட்டியா! இங்க வர்றதே அருள்தான், இங்க வந்ததே அருள் இருந்ததால்தானே!’
‘ஆராவமுதே…!’
கோவிந்தப் பிரசாதத்தை உண்டு விட்டு எழுகிறேன். திருவமுது எல்லாவற்றையும் கொடுத்துவிட்டு சன்னதியின் பக்கம் திரும்பி வணங்கிவிட்டு எதிரே வருகிறார் அந்த பட்டர்.
‘பிரசாதம் தந்ததுக்கு நன்றி மாமா!’
‘அது பெருமாள் தந்தார்!’
….
பரமன் பச்சைமுத்து
காஞ்சிபுரம்
14.12.2025