2 – Exploring CHOLAS with PARAMAN PACHAIMUTHU!

ராஜேந்திர சோழனும் அவன் வழித் தோன்றல்கள் ராஜாதிராஜன், இரண்டாம் ராஜேந்திரன், அருள் மொழி நங்கையார், அம்மங்கா தேவி ஆகியோரும் வாழ்ந்த அரண்மனைக்குப் போய் நின்றால் எப்படி இருக்கும்!

மும்முடிச் சோழன் மாளிகை, சோழ கேரளன் மாளிகை, கங்கை கொண்டான் மாளிகை என அவர்கள் வாழ்ந்த 3 மாளிகைகள் பற்றி திருவாலங்காட்டு செப்பேடுகள் சொல்வதைக் கொண்டு நம் தொல்லியல் துறை அகழ்வாராய்ச்சி செய்ததில் வெளிவந்த, கங்கை கொண்ட சோழ புரத்து கோவிலிலிருந்து சில கிலோ மீட்டர் தூரத்தில் புதைந்து கிடந்த ராஜேந்திர சோழனின் அரண்மனை.

சுவர்களின் அகலம் வியக்க வைக்கிறது ( கைகளை விரித்துக் காட்டி படம் எடுத்துள்ளோம், கவனிக்க). செங்கல்களின் நீள அகல அளவுகளும் மாளிகைக்கு மாளிகை வேறுபடுகிறது. ‘வெல்லம், கடுக்காய், சுண்ணாம்பு, நன்னீர் சேர்த்து குழைத்து ஊற்றி அதன் மேல் செங்கல்லால் கட்டப்பட்டது’ என்று குறிப்புகளில் சொல்லப்பட்ட காறை பூசிய சுவர்களை காண முடிகிறது.

பல தலைமுறைகளாக பகை கொண்டு அடங்கியிருந்த பாண்டியர்கள் ராஜேந்திரனின் பிள்ளைகளுக்குப் பிறகு படை கொண்டு வந்து அடித்து தாக்கி அழித்து நிர்மூலமாக்கி குவியலாக்கிப் போனதாக பாண்டிய கல்வெட்டுகள் சொல்லும் குறிப்புகள் சொல்வதை உணர்ந்து கொள்ள முடிகிறது. காலமாற்றத்தில் மாளிகைகள் இடிந்து மட்கி புதைந்து மேடாகப் போய், மக்களால் ‘மாளிகை மேடு’ என்று அழைக்கும் இடமாகிப் போனது. தொல்லியல் துறை அகழ்ந்தெடுத்ததில் அரண்மனையும் சுவர்களும் அமைப்பும் வெளி வருகின்றன. திருவாலங்காட்டு செப்பேடுகள் இதை உறுதிசெய்கின்றன என்பது அகழ்வாராய்ச்சியாளர்களின் கொண்டாட்டத்திற்கு காரணமாக இருக்கிறது.

அருகிலேயே தமிழக அரசு அமைத்திருக்கும் அருங்காட்சியகம். பராந்தகன் கல்வெட்டைக் கண்டு பிடித்திருக்கிறார்கள். தஞ்சையிலிருந்து அரண்மனையை இங்கு மாற்றிய போது மாடலுக்கு முக்கிய சிலதை கொண்டு வந்தார்கள் போல. புதைவில் கண்டெடுத்த முக்கிய கல்வெட்டு அது. தங்க ஆபரண்களும், தந்த்த்தால் ஆன நிறைய பொருள்களும், வளையல்களும் கிடைத்ததை வைத்தும் அது அரண்மனை என உறுதி செய்கின்றனர் வரலாற்றாளர்கள்.

ராஜேந்திரன் வாழ்ந்த இடத்தில், ‘அட இங்கிருந்துதானா இலாமுரி தேசம், ஸ்ரீவிஜயம், கடாரம், முன்னீர்ப் பழந்தீவுகள், ஒட்டர தேசம், நுளபாடி, வங்கம், கலிங்கம், கோசலம், சாளுக்கியம், பண்ணை நாடு எல்லாவற்றுக்கும் போனான்!’ ‘இங்கிருக்கும் போதுதான் சிற்றன்னை பஞசவன் மாதேவிக்கு பள்ளிப்படை கோவிலெழுப்ப நினைத்திருப்பான்!’
‘இங்குதான் குலோத்துங்கனின் தாய் சிறுமியாக விளையாடியிருப்பாள்!’ ‘இப்படியொரு அரண்மனையைக் கட்டிவிட்டு ஏன் அவ்வளவு தூரம் போய் பிரம்மதேசத்தில் இறந்தான்!’ என கொஞ்சம் அலைந்து அமிழ்ந்தோம்.

பெரும் வாழ்க்கை,
பெருஞ்சாதனைகள் செந்திருக்கிறான் முதலாம் ராஜேந்திர சோழன்.

‘Exploring CHOLAS with PARAMAN PACHAIMUTHU!’

மலர்ச்சி மாணவர்களோடு, வரலாற்றின் பக்கங்கள் வழியே ஒரு பயணம்!

(தொடரும்)

#ExploreCholas #ParamanPachaimuthu #பரமன்பச்சைமுத்து #ParamanLifeCoach #MalarchiVolunteers #MalarchiMaanavargal #malaravar #Gangaikondacholapuram #Rajendrachozhan #Maligaimedu #CholaPalace #ராஜேந்திரசோழன்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *