சிவனுக்கு ஒரு கற்றளி, அது தன் தந்தையெழுப்பியது போலவே ஆனால் அதைவிட கொஞ்சம் உயரம் குறைவாய் எழுப்பப் பட வேண்டும் என்று ராஜேந்திர சோழன் எழுப்பிய கோவில் கங்கை கொண்ட சோழபுரத்தில்.
தலைநகரம், கோட்டை, கொத்தளம், ஆள், அம்பு, சேனை என ஒட்டு மொத்தத்தையும் தஞ்சையிலிருந்து ஜெயங்கொண்டத்திற்கு வெளிப்புரத்தில் நகர்த்தி, புதிய தலைநகரை நிர்மானித்து அதற்கருகில் வடிவமைக்கப்பட்டு எழுப்பப்பட்ட கோவில் இது.
சாளுக்கியம், ஒட்டரம், நுங்கபாடி, பண்ணை, வங்கம் என வழியெங்கும் வென்று கங்கை சென்று கங்கையிலிருந்து நீர் கொணர்ந்து குடமுழுக்கு செய்யப்பட்ட கோவில், அதனால் கங்கை கொண்ட சோழபுரம் என பெயர் பெற்ற தலம்.
கல்லும், சிற்பமும், அதன் விசால அளவும் 1000 ஆண்டுகள் கழித்தும் வியக்க வைக்கின்றன.
கோயிலின் மற்ற கோபுரங்கள் இடிந்து சிதிலமடைந்து போயின. இதன் சுற்றுச்சுவரில் இருந்த நல்ல கற்களும் கல்வெட்டுகளும் கீழ் அணைக்கட்டு கட்டிய போது இங்கிருந்து உறுவியும் உடைத்தும் எடுத்துப் போகப் பட்டுள்ளன அன்றைய ஆட்சியாளர்களால். அப்போது இதை எதிர்த்த, வரலாற்றுப் பாரம்பரியம் காக்க முயற்சித்த ஊர்மக்கள் தண்டிக்கப்பட்டனராம்.
ஆயிரம் ஆண்டுகளின் வெய்யில் – மழை – காற்று – பனியில் சிற்பங்களின் கூர்மை குறைவதை காண முடிகிறது. வெய்யில் மழை பனி காற்று படாத மடிப்பு இடைவெளிகளில் உள்ள சிற்பங்கள் இன்னும் கூர்மையாக உள்ளதையும் கண்டோம் நாங்கள்.
கோவிலுக்கு சில கிலோ மீட்டர் தூரத்தில் ராஜேந்திரனின் அரண்மனை இருந்ததை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்து உறுதி செய்கிறார்கள் (நமது முந்தைய பதிவை காண்க).
ஆயிரம் ஆண்டுகளில் மன்னர்கள், பிரித்தானியர்கள், குடியரசின் பல ஆட்சியாளர்கள், மக்கள் என மாறிக்கொண்டேயிருக்கின்றனர். இன்னும் அதே இடத்தில் கம்பீரமாக அழகாக நின்று கொண்டிருக்கிறது கோவில்.
‘Exploring CHOLAS with PARAMAN PACHAIMUTHU!’
மலர்ச்சி மாணவர்களோடு, வரலாற்றின் பக்கங்கள் வழியே ஒரு பயணம்!
(தொடரும்)
– பரமன் பச்சைமுத்து
06.01.2026
#ExploreCholas #ParamanPachaimuthu #பரமன்பச்சைமுத்து #ParamanLifeCoach #MalarchiVolunteers #MalarchiMaanavargal #malaravar #Gangaikondacholapuram #Rajendrachozhan #Maligaimedu #CholaPalace #ராஜேந்திரசோழன்
