பொருள்களாக தெரியும் சில,
வெறும் பொருள்களாகத் தெரிவதில்லை சிலருக்கு. யார் பயன்படுத்தியவை, யார் காண்கிறார்கள் என்பன பொருளை மாற்றிப் போட்டுவிடுகின்றன.
காண்கிறவனின் கண்ணுக்கும் கருத்துக்கும் இடையில் சேரும் ஓர் அடர்த்தியான உணர்வு, பொருளை, பொருளின் பொருளை மாற்றிப் போட்டுவிடுகிறது. ஒரு சடப் பொருளின் மீது உணர்வு கூட்டப்படும் போது பொருளின் பொருளே மாறிவிடுகிறது.
அண்ணல் காந்தியடிகளின் கண்ணாடி, பாரதியின் கடிதம், ராமானுஜர் கட்டியணைத்துத் தந்த மேல்கோட்டை சிலை (உகந்த திருமேனி), கண்ணப்பனாக ஆவதற்கு முன் திண்ணன் நடந்து வந்தடைந்த காளகஸ்தி மலைப் பாதை, ஃப்ரெட்ரிக் ட்யூடரால் கட்டப்பட்டு பிலிகிரி ஐயங்காரால் வாங்கப்பட்ட சுவாமி சவிவேகானந்தர் தங்க வைக்கப்பட்ட திருவல்லிக்கேணி ஐஸ் ஹவுஸ், பெரிய புராணம் எழுதும் முன்பு சேக்கீழார் வந்து நின்ற தில்லை கோவிலின் படி, ‘இனி துறவுதான்!’ என்று முடிவெடுத்து மூழ்கி எழுந்த ராமானுஜர் நின்ற வரதராஜப்பெருமாள் கோவில் குளத்தின் படிகள், பெரியாரின் கைத்தடி, வள்ளலாரின் அந்த அறை, திருநீலகண்டர் மூழ்கி எழுந்த அந்த இளமையாக்கினார் கோவிலின் குளம், காமராஜரின் 1952 செவ்ரோலே கார், முகம்மது நபியின் தலைப்பாகை என நீளும் இப்பெரும்பட்டியலில் உள்ள இவை வெறும் சடப் பொருள்களல்ல சிலருக்கு. இவற்றை யார் பயன்படுத்தினார்கள் என்பதாலேயே இவற்றில் உணர்வு கூட்டப்பட்டுவிடுகிறது. பொருளின் பொருளே மாறிவிடுகிறது.
யார் பயன்படுத்தியது, யாருடையது என்பதாலேயே அவை வெறும் பொருள்களாகத் தெரிவதில்லை காணும் சிலருக்கு.
மருத்துவ சிகிச்சை ஒன்றிற்காக, தான் எப்போதும் அணியும் சங்கிலியையும், பூசை செய்து அணியும் லிங்கத்தையும் கழற்றித் தந்துவிட்டு மருத்துவ அரங்கத்திற்குள் போயிருக்கிறார் என் அம்மா.
கைகளில் வைத்துக் கொண்டு அமர்ந்திருக்கிறேன்.
அப்பாவுக்கு அறுபதாவது வயதில் மணி விழா செய்த போது இருவரும் கட்டிக்கொண்டது இந்த லிங்கம். பெங்களூரு (அப்போது பேங்களூர்) அவென்யூ ரோடில் ஒரு கடையில் ஆர்டர் தந்து வெள்ளியில் செய்து வாங்கியது. அம்மா தினமும் நீராட்டு செய்து பூசிக்கும் லிங்கம் இதனுள்ளே.
அம்மா பயன்படுத்தும் இந்தப் பொருள்கள், வெறும் பொருள்களல்ல எனக்கு.
– பரமன் பச்சைமுத்து
ஐஸ்வர்யா மருத்துவமனை,
தரமணி,
23.02.2026
#AmirthamPachaimuthu #MuPachaimuthuArakattalai #ParamanLifeCoach #பரமன்பச்சைமுத்து #ParamanPachaimuthu #AiswaryaHospital l