மாதத்தில் நான்கைந்து நாட்களாவது நெடுஞ்சாலைப் பயணம் செய்பவன் நான். நெடும் குறும் என்ற பல பயணங்களால் ஆனது என் வாழ்க்கைப் பயணம்.
பணியின் தேவை காரணமாக பல ஆண்டுகளாய் பயணித்துப் பயணித்து, பயணம் தொடங்கினாலே இதெல்லாம் செய்ய வேண்டியவை என்ற ஒரு பட்டியலே எங்களுக்குள் உருவாகி, தானியங்கி போல நிறைவேறுதல் நடைபெறத் தொடங்கி விட்டது எங்களுக்கு.
‘குட்மார்னிங் சார்! டோல் பேலன்ஸ் பாத்துடுங்க!’
வண்டியை எடுத்த உடன் என் ஓட்டுநர் என்னிடம் சொல்லும் இது, எங்கள் அந்தத் தானியங்கியில் ஒன்று. செயலியைத் திறந்தோ ஜிபேயை திறந்தோ ‘ஃபாஸ்டேக்’க்கின் பேலன்ஸை பார்த்து, போகும் ஊர், எத்தனை நாள் பயணம் என்பதையெல்லாம் கணக்கிட்டு ஃபாஸ்டேக்கில் தொகையை ஏற்றுவது அல்லது அப்படியே விடுவது என்ற முடிவு உருவாகும்.
(பெங்களூரூ பயணம் என்றால் நிறைய தொகை தேவை!)
எந்த உணவகத்தில் நிறுத்துவது எந்த மாதிரி உணவகங்களில் நிறுத்துவது எங்கு காஃபிக்கு இறங்குவது, நாம் வாசிக்கும் செய்தித்தாள்கள் திருவண்ணாமலையில் எங்கு கிடைக்கும், சிதம்பரம் என்றால் எங்கு கிடைக்கும் (எல்லாக் கடைகளிலும் தினமணி, இந்து தமிழ் போன்றவை கிடைப்பதில்லை), ‘பெரிய ஆறு வந்தால் பரமன் சார் எறங்கிடுவாரு, நிறுத்த எடம் பாக்கனும்!’ என்பதெல்லாம் அந்தத் தானியங்கியில் உள்ளவை.
இப்போதெல்லாம் என் ஓட்டுநர் ‘டோல் பேலன்ஸ் செக் பண்ணுங்க சார்!’ என்று சொல்லுவதேயில்லை. நானும் ஃபாஸ்டாக் ரீசார்ஜ் செய்வதேயில்லை. கவனிக்க… அதேயளவு பயணங்கள், அதை விட அதிகப் பயணங்கள் மேற்கொள்கிறோம்.
தேசிய நெடுஞ்சாலைக்கென வந்துள்ள ஓராண்டு பாஸ் (ஆனுவல் பாஸ்) முறையில் என் வாகனத்தை இணைத்து விட்டேன் சில மாதங்களுக்கு முன்பு. ‘Your Vehicle TNxx xx xxxx crossed Athur on 20-01-2026 10:39:39 under Annual Pass on xxxx Bank FASTag. Call 1800 xxxx for dispute’ என்பது போன்று வரும் குறுஞ்செய்திகளை பார்ப்பதோடு சரி தேசிய நெடுஞ்சாலை சுங்கச் சாவடிகளை கடக்கும் போது.
பல மாதங்களாயிற்று ஃபாஸ்டேக்கிற்கு பணம் ஏற்றி. என்னைப் போல அதிக பயணம் செய்பவர்களுக்கு சில மாதங்களில் ஆகும் தொகையை ஒரு முழு ஆண்டுக்குமே செலுத்தி விடலாம் என்பது நற்செய்தி திருவிழா!
மாநில நெடுஞ்சாலைக்கென ஃபாஸ்டேக்கில் ஒரு குறைந்த அளவு தொகையை ஏற்றி வைத்திருக்கிறேன். தேசிய நெடுஞ்சாலைகளை ஆனுவல் பாஸில் கடக்கிறேன்.
இத்தனை மாதங்கள் அல்லது இத்தனை முறை பயன்படுத்தலாம் என்ற முறைமையில் இயங்கும் இந்த ஆனுவல் பாஸில், நாம் எத்தனை முறை பயன்படுத்தியிருக்கிறோம் என்ற கணக்கு வழக்கைப் பார்க்க முடியவில்லை என்பது குறை. தேசிய நெடுஞ்சாலையை அதிகம் பயன்படுத்துகிறவரென்றால், இது பற்றி பரிசீலனை செய்யுங்கள்.
சிதம்பரம் நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கிறேன்.
‘குட் மார்னிங் சார்!’
‘குட் மார்னிங்!’
‘எப்பயும் போல சிங்கப்பெருமாள் கோவில் சரவணபவனா சார் ப்ரேக் பாஸ்ட்டுக்கு?’
’10 மணிக்கு மார்க்கெட்டிங் டீமோட கான்ஃபரன்ஸ் கால் இருக்கு. அதுக்குள்ள முடிக்கனும் ப்ரேக் பாஸ்ட்ட. கணக்கு பண்ணி சொல்றேன் கொஞ்ச நேரத்துல!’
கவனித்தீர்களா? ”குட்மார்னிங் சார்! டோல் பேலன்ஸ் பாத்துடுங்க!” என்று சொல்வதில்லை என் ஓட்டுநர் சில மாதங்களாக.
– பரமன் பச்சைமுத்து
NH 48
29.01.2026
#Fastag #AnnualFastag #Travel #ParamanLifeCoach #பரமன்பச்சைமுத்து #ParamanTouring #travelinspiration #FASTag #FASTagBasedAnnualPass